வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? - 7

கோபமான சூழ்நிலை ஏற்படும் போது, கோபத்தில் கூறும் வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு இரு சாராரும் அமைதி பெறுங்கள்.

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? - 7
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? 7

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? - 7

- மதுகேசவ் பொற்கண்ணன்


நம் வாழ்வில் நம்முடன் இருக்கும் உறவுகளும், நண்பர்களும், நம்முடன் பேசுகின்றனர். நாமும் அவர்களுடன் பேசுகின்றோம். வீடுகளில் அலுவலகத்தில், தொழில் செய்யும் இடங்களில்  வாடிக்கையாளர் உரிமையாளர், பொதுவாழ்வில் உள்ள தலைவர்கள், கலை உலகத்தில் உள்ளவர்கள் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக் கின்றார்கள். இப்படி பேசுவதில் எது உங்களிடம் நிலைத்து நிற்கின்றது. அவர்கள் ஆயிரம் நல்ல விஷயங்கள் பேசி இருந்தாலும், உங்கள் மனதைக் காயப்படுத்திய ஒரு சில சொற்கள் மட்டும் அப்படியே உங்கள் மனத்தில் நின்று நிலைத்து விடுகின்றது. உங்கள் மனதைக் காயப்படுத்திய சொற்கள் உங்களை விட்டு விலகாது; காலத்திற்கு அது உங்களை வருத்திக் கொண்டே இருக்கும். அதனால் நாவினால் சுட்ட வடு மாறாது, என்பதைப் போல, கோபத்தில் எந்த கடுமையான வார்த்தைகளையும் பேசக்கூடாது.

ஒரு சிலர் என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல் பேசி விடுகின்றனர். அது கேட்டவரை விட பேசியவரையே திருப்பித் தாக்கும் ஆயுதமாகிவிடும். இதை மறைபொருளாக கொண்டுதான் வள்ளுவர் "தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்"- என்று கூறுகின்றார்.

வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் கோபம் என்பதைக் கவனியுங்கள். அதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதைக் கவனியுங்கள். நன்கு ஆராய்ந்தால், நாம்தான் அதற்குக் காரணமாக இருப்போம். நாம் செய்த ஏதோ ஒன்று மற்றவரைக் கோபப்படுத்தி இருக்கும். மற்றவரின் செயல்கள் நமது செயல்களின் எண்ணங்களின் வடிவத்தையே கண்ணாடி போல் வெளிப்படுத்தும் என்பதை உணர்ந்து நமது செயல்களில் நமது வார்த்தைகளில் கோபமின்றி, பேசுவதைக் கவனமாகப் பேச வேண்டும். பேசும் வார்த்தைகளைக் கவனியுங்கள்; மற்றவர் பேசும் சொற்களைக் கவனியுங்கள்; இரண்டிலும் நல்லவை இருக்குமாறு உங்கள் உரையாடலை அமைத்துக் கொள்ளுங்கள். கோபமான சூழ்நிலை ஏற்படும் போது கோபத்தில் கூறும் வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு இரு சாராரும் அமைதி பெறுங்கள். அது நன்மையே தரும்.

இன்று காலை செய்தித்தாளில் ஒரு செய்தியைப் படித்து அதிர்ச்சியாக இருந்தது.  பெங்களூரில் புட்டனஹள்ளி  பிரதான சாலையில் நடந்த சம்பவம் அது. ஒரு தம்பதியர் தமது காரில் வருகின்றனர்., உணவு விநியோகிக்கும் வேலை பார்க்கும் 'ஃபுட் டெலிவரி பாய்'  இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் பொழுது, எதிரில் வந்த  காரில் இடித்து விட, காரில் இருந்து இறங்கி, அவர்களுக்குள் வாக்குவாதம் அதிகமாகி, கோபத்தின் உச்சத்திற்கே சென்று விடுகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இருவரும் பயந்து போய்  வேகமாகச் சென்று விட,  தம்பதிகள் தங்களது காரை 'யு டர்ன்' செய்து திருப்பிக் கொண்டு, அந்த இருச்சக்கர வாகனத்தை இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு விரட்டிச் சென்று, காரால் இடித்து தள்ளி இருக்கின்றார் கணவர். அதில் இருசக்கர வாகனத்தில் ஓட்டிய தர்ஷன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்து விடுகின்றார். மற்றவருக்குக் காயம் ஏற்படுகின்றது. இதை 'ஹிட் அண்ட் ரன்' - என்பது போல அந்த தம்பதியர் காரை எடுத்துக் கொண்டு சென்று விடுகின்றனர். 

இரவில் மீண்டும் அவர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு வந்து அந்த சம்பவம் நடந்த இடத்தில் தங்களது கார் சம்பந்தப்பட்ட தடயங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதைத் தேடிப் பார்த்து  கார் உதிரி பாகங்கள் எதேனும் உடைந்து கிடந்தால் அதைத் தேடி எடுத்துக் கொண்டு சென்று விடுகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்தவரின் ஒரு பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடங்களில் இருந்த 'சிசிடிவி' காட்சிகளைப் பார்த்து, இது விபத்து அல்ல கொலை என்கின்ற அடிப்படையில்,  அந்தக் காரில் வந்த தம்பதியினரைக் கைது செய்து இருக்கின்றனர். என்ன மாதிரியான உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? என்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு சாட்சி! இதற்கு அடிப்படைக் காரணம் கோபம்தான். கோபத்தில் கூறிய வார்த்தைகள், அவர்களை இப்படி செய்யும் அளவிற்குத் தூண்டி இருக்கிறது. கோபத்தின் விளைவுகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்குத் தீமை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

இந்த நிகழ்வில் என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள். இதில் இருவரும் பொறுமையாக இருந்திருக்கலாம்; ஒருவருக்கொருவர் தவறு, தெரியாமல் தவறுதலாக நடந்து விட்டது என்று கூறி, ஒருவருக்கொருவர் தன்மையுடன் பேசி இருந்தால், இந்தக் கோபமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்காது. அந்த தம்பதியர் கொலை செய்யும் அளவிற்குச் சென்றிருக்கவும் மாட்டார்கள். காவல்துறை அவர்கள் மீது இத்தகைய நடவடிக்கை எடுத்து, நீதிமன்றத்தில் அவர்களுக்கு நிச்சயமாக தண்டனையும் கிடைக்கும் என்கின்ற வகையில் எல்லாவற்றிற்கும் காரணம் அந்தக் கோபம்தான் என்பது தெரிகிறது.

பொது இடங்களில் எப்போதும் அன்பாகவும் தன்மையாகவும் பொறுமையாகவும் பேசுவதைக் கடைப்பிடித்தால், இத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்கலாம். கோபத்தை வென்று இனிய சொற்களைப் பேசும் நண்பர்களைக் கேட்டுப் பாருங்கள்- லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல் என்பார்கள்.


மதுகேசவ் பொற்கண்ணன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow