அவரோடு வேலை செய்யக்கூடாதுனு இருந்திருக்கேன்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்

”நித்யா ஒரு படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்றால் அந்தக் கேரக்டரில் வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது” என ’தலைவன் தலைவி’ படக்குழுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை நித்யாமேனனை புகழ்ந்து பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

அவரோடு வேலை செய்யக்கூடாதுனு இருந்திருக்கேன்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்
Vijay Sethupathi Reflects on 'Thalaivan Thalaivi' Filming Experience

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி. ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன், தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் ரோஹன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், ''எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது ஏராளமான சண்டை, சச்சரவுகள் இருந்தன. அதற்கு இடையில் தான் இப்படத்தின் பணி தொடங்கியது. படத்தின் இயக்குநரும், நாயகனும் ஒன்று சேர்ந்த தருணம் இருக்கிறதே, அதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. இவருடன் இணைந்து பணியாற்றக்கூடாது என்று அவரும், இவரது இயக்கத்தில் பணியாற்றக் கூடாது என்று நானும் இருந்த காலகட்டம் அது. இரண்டு பேருக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் எந்தக் கோபமும் இல்லை. அதனால் அழகான தருணத்தில் ஒரு சிறிய பூ எப்படி இயல்பாக மலருமோ, அதேபோல் எங்களுக்கு இடையேயான கோபம் மறைந்து, அன்பு மலர்ந்தது. அதன் பிறகு எல்லா விஷயங்களும் படபடவென நடந்தன.

கிட்டத்தட்ட இயக்குநரை எனக்கு 2009 ஆம் ஆண்டிலிருந்து தெரியும். 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திற்காக தேசிய விருதினை வென்ற போது நாங்கள் இருவரும் சந்தித்து உரையாடி இருக்கிறோம். இப்போது இணைந்திருப்பது எப்படி இருக்கிறது என்றால் ஒரு மிகப்பெரிய வட்டம் நிறைவடைந்தது போல் இருந்தது. இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது ஓர் அற்புதமான அனுபவம்” என்றார்.

சத்யஜோதி நிறுவனத்தில் படம்:

தயாரிப்பு நிறுவனம் குறித்து பேசுகையில், ”சத்யஜோதி நிறுவனத்தைப் பற்றி தெரியும். 'மூன்றாம் பிறை' படத்தின் மூலம் தான் இவர்கள் தங்களுடைய தயாரிப்பை தொடங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. இவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் நான் நடித்ததும், இணைந்து பணியாற்றியதும் எனக்கு மிகவும் சந்தோஷம். இந்த நிறுவனத்துடன் முதன்முதலாக நான் இணைந்து பணியாற்றியதை பெருமிதமாகக் கருதுகிறேன்” என்றார்.

நித்யா மேனனுக்கு இணை அவங்கதான்:

”நித்யா மேனனுடன் 2020ஆம் ஆண்டில் '19 (1) (ஏ)' என்ற மலையாளப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். அது கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படம். இயக்குநர் இந்துவின் வேண்டுகோளை ஏற்று, அவர் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்ததால் அந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தேன். அப்போது நித்யா மேனன் தான் கதாநாயகி என எனக்குத் தெரியாது. படப்பிடிப்புத் தளத்தில் இணைந்து பணியாற்றியபோது 'வாய்ப்பு கிடைத்தால் நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம்' எனப் பேசிக்கொண்டோம். ஆனால் அந்த வாய்ப்பு 'தலைவன் தலைவி' படத்தில் இப்படி அமையும் என்று எதிர்பார்க்கவில்லை.

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இப்படி ஒரு வேடத்தில் அவர்களுடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இது படம் பார்த்த பிறகு உங்கள் அனைவருக்கும் புரியும். அவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நித்யாவைத் தவிர வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க இயலாது. கிட்டத்தட்ட அவர் நடித்த எல்லா கதாபாத்திரமும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். நித்யா ஒரு படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்றால் அந்தக் கேரக்டரில் வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அப்படியொரு அற்புதமான நடிப்பை வழங்குபவர்” என்றார் விஜய் சேதுபதி.

புல் பேக்கேஜ் ஃபேமிலி எண்டர்டெய்னர்:

”படப்பிடிப்புத் தளத்தில் கடைசி நாளன்று படப்பிடிப்புப் பணிகளை நிறைவு செய்துவிட்டு ஓய்வாக 45 நிமிடங்களுக்கு மேலாக அனைவரும் ஒன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதே, இன்னும் ஒரு வார காலம் நீடித்திருக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களுடைய பங்களிப்பை நன்றாக வழங்கியிருக்கிறார்கள். இந்த படம் ஜூலை 25 ஆம் தேதி அன்று வெளியாகிறது. இது ஒரு ஃபுல் பேக்கேஜ் ஃபேமிலி என்டர்டெய்னர். படத்தை பார்க்கும் போது அனைவரும் ரசிப்பார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow