பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கம் எதிரொலி.. மானியம் கோரும் தமிழக விவசாயிகள்!
மத்திய அரசு பருத்தியின் மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கியுள்ளதால், பாதிக்கப்படும் பருத்தி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30,000 மானியமாக வழங்கிட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை குறிப்பிட்டு, இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியினை அமெரிக்கா விதித்துள்ளது. இதில் 25 சதவீத வரி ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 25 சதவீத இம்மாத இறுதியில் அமலுக்கு வர உள்ளது. இதனால் ஜவுளித்துறையினர் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, பருத்தி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த முடிவினால், பாதிக்கப்படும் பருத்தி விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுத்தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
”இந்திய பொருட்களின் மீது 50% அமெரிக்கா வரி விதித்துள்ள நிலையில், இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலும் பருத்தியின் மீதான 11% இறக்குமதி வரியை மத்திய அரசு தற்போது செப்டம்பர் 30 வரை நீக்கியுள்ளது, இது தொடர்ச்சியாக நீட்டிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையாக பருத்திக்கு ரூ. 7,710 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தற்போது சந்தையில் குவிண்டால் ரூபாய் 6,500-க்கு மட்டுமே விற்பனை விலையாக விவசாயிகளுக்கு கிடைத்து வருகிறது. இந்தியா முழுவதும் மத்திய அரசின் பருத்தி கழகம் குறைந்தபட்ச ஆதார விலையை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதல் இல்லாதது பருத்தி விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற மாநிலங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலிருந்து கொள்முதல் செய்து அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லும் வாகன வாடகை செலவை அந்தந்த மாநில அரசுகள் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அவ்வாறு மாநில அரசு ஏற்றுக்கொள்ளாததால், மத்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டது.
மத்திய அரசினுடைய பருத்திக் கொள்முதல் தமிழ்நாட்டில் இல்லாததால் விவசாயிகள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்ட சூழ்நிலையில், மத்திய அரசு தற்போது 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கியுள்ளதால் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,000 வரை பருத்தியின் விற்பனை விலை குறைய வாய்ப்புள்ளது. இந்த விலை குறைவால் ஏக்கருக்கு சராசரியாக ரூ.30,000 விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படலாம்.
மத்திய அரசினுடைய இறக்குமதி வரி நீக்கத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட உள்ள இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்கி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். உள்நாட்டில் விவசாய பொருட்கள் விலை குறையும்போது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் உணவுப் பொருட்கள் மீது வரியை உயர்த்த சொன்னால் மத்திய அரசு அவ்வாறு செய்வதில்லை, தொழில் துறையினருக்கு சலுகை கொடுப்பதில் தவறில்லை, ஆனால் அதே அணுகுமுறையை விவசாயிகளுக்கு மட்டும் கையாளாமல் தொடர்ச்சியாக மத்திய மாநில அரசுகள் செயல்பட்டு வருவதை சரி செய்திட வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






