-அன்புவேலாயுதம்சமீபத்தில் நேபாளில் நடைபெற்ற ஈட்டி எறிதல் இன்டர்நேஷனல் போட்டியில் தங்கம் வென்று திரும்பியுள்ளார் வேலூரை சேர்ந்த கோமதி. அவருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே சோழவரம் கிராமத்திலிருக்கும் கோமதியை சந்தித்து, வாழ்த்து சொல்லி பேசினோம்..உங்கள் குடும்பம் பற்றி?‘‘அம்மா பெயர் சாவித்திரி, அப்பா பெயர் முனிசாமி. கூலி வேலைதான் ஜீவனம். சொந்த வீடு கூட கிடையாது. நாங்கள் நான்கு சகோதரிகள். மூத்தவள் அஸ்வினி, அடுத்தவர் ஆனந்தி. அதற்கடுத்து நானும் கோகிலாவும் இரட்டைக் குழந்தைகள். நான் 2 வயது குழந்தையாக இருந்தபோதே அப்பா இறந்துவிட்டார். 4 பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு எங்கள் அம்மா, ஒற்றை ஆளாய் கூலி வேலைக்குப் போய் எங்கள் வயிற்றுப் பசியை போக்க பாடுபட்டார்.அரை வயிறு, கால் வயிறுமாக நாங்கள் பள்ளிக்கூடத்துக்கு நாள் தவறாமல் போவோம். படிப்பதற்கு என்பதை விட... மதிய உணவு சாப்பிடுவதற்காகவே பள்ளிக்குப் போவோம் என்று சொன்னால் சரியாக இருக்கும். விடுமுறை வந்துவிட்டால் மிகவும் வருத்தமாகி விடும். காரணம், மதிய சாப்பாடு அன்றைக்கு கிடைக்காது என்பதால்!ஓலைக் கொட்டகைதான் எங்கள் வீடு. எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கிக்கொள்வோம். ஆனால், பலத்த காற்றோ கனமழையோ வந்து விட்டால், ‘எங்கே குடிசை பிய்த்துக்கொண்டு போய்விடுமோ?’ என்ற பயம் எங்களை கவ்விக்கொள்ளும்.’’.விளையாட்டில் எப்படி ஆர்வம் வந்தது?‘‘பெரிதாக படித்து சாதிக்க எங்களுக்கு வசதி இல்லை என்பதால் உடற்பயிற்சியால் சாதிக்க நினைத்து, தொடர்ந்து உழைத்தோம். நாங்கள் நால்வரும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு, காவல்துறையில் சேர நினைத்தோம். அதற்காக அம்மாவுடன் இணைந்து நாங்களும் கூலி வேலைக்குப் போனோம். அந்த வருமானத்தில் நான் மட்டும் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். மற்ற மூன்று சகோதரிகளும் அஞ்சல் வழியில் பி.ஏ., படித்தார்கள்.கடும் பயிற்சி பெற்று பெரிய அக்கா அஸ்வினி, போலீஸ் ஆகிவிட்டார். அடுத்த அக்காவும் தேர்ச்சி அடைந்து விட்டார். நானும் கோகிலாவும் பல தேர்வுகளில் கலந்து கொண்டு சில மில்லி மீட்டர்கள் உயரம் குறைவு என்று போலீஸ் வேலைக்கு சேரும் வாய்ப்பை இழந்து நிற்கிறோம்.விளையாட்டில் எனக்குப் பயிற்சி கொடுக்க யாருமில்லை. நானே வயற்காட்டில் ஈட்டி எறிந்து, கடும் பயிற்சி செய்து இந்த நிலையை அடைந்திருக்கிறேன். போட்டிகளில் கலந்து கொள்ள, தரன் என்ற நண்பர் எனக்குப் பேருதவி புரிந்து வருகிறார். நான் பரிசு பெற்று வந்தபோது ஊரே திரண்டு என்னை வரவேற்றது, என்னுடைய நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.’’இவ்வளவு சிரமத்திலும் எப்படி.இன்டர்நேஷனல் கோப்பையை வென்றீர்கள்?‘‘நான் எடுத்துக்கொண்ட பயிற்சி, விடா முயற்சி. அதே நேரத்தில் ஒவ்வொரு போட்டியிலும் மூன்று முறை ஈட்டி எறிய வாய்ப்பு கிடைக்கும். இரண்டு முறை தவறிவிட்டால் மூன்றாவது முறை சரியாக செய்யலாம். ஆனால், நானோ ‘இருப்பது ஒரு வாய்ப்பு!’ என்றே கவனம் செலுத்துவேன். முதல் முயற்சியிலேயே வெல்ல வேண்டும் என்று நினைப்பேன். கடவுள் எதைக் கொடுத்தாரோ இல்லையோ நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் முதல் முயற்சியிலேயே 48 மீட்டர், 83 சென்டி மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதித்தேன்.’’.அடுத்ததாக உங்கள் இலக்கு என்ன?‘‘உலகளவிலான போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும். அதற்காக பயிற்சி கொடுப்பதற்கு நல்ல பயிற்சியாளர் தேவை. பயிற்சி செய்ய நல்ல உடலும் நம்பிக்கையான உள்ளமும் தேவை. அதற்கு ஆரோக்கியமான உணவுகள் வேண்டும். இப்போதைக்கு தேங்காய் உரிக்கும் வேலைக்குப் போகிறேன். ஒரு தேங்காய்க்கு மட்டை உரித்தால், ஒரு ரூபாய் கூலி கிடைக்கும். போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றால், அரசு வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அதைப் பெற்று, என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். குறிப்பாக, காலமெல்லாம் எங்களுக்காக உழைத்து உணவளித்த அம்மாவை உட்கார வைத்து சோறு போட வேண்டும். அழகான வீடு ஒன்று கட்டி குடியேற வேண்டும்.‘நம்மால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடியும்!’ என்கிற நம்பிக்கை என்னுடைய உள்ளத்தில் இருக்கிறது. அரசு எங்களுக்கு ஒரு வேலை கொடுத்து, போதிய பயிற்சி அளித்தால், ஒலிம்பிக்கில் தங்கம் வென்று, இந்திய அன்னையின் பாதங்களில் சமர்ப்பிப்பேன்!’’ என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார் கோமதி.இவருடைய கண்ணீரை துடைத்து, நல்வழி காட்டுமா தமிழக அரசு?