-அன்புவேலாயுதம்பள்ளிப் பருவத்தில் ஆசிரியர்கள் சொன்ன அறிவுரைகளை ஏற்று நடந்து, வாழ்வில் உயர்ந்தவர்கள் ஏராளம்! அப்படி இன்று உயர்பதவி வகிப்பவர்களில் சிலர், தங்களுடைய ஆசிரியர்கள் பற்றியும் அவர்கள் சொன்ன அறிவுரைகள் பற்றியும் நினைவு கூர்கிறார்கள்..ஜோதி நிர்மலாசாமி, ஐ.ஏ.எஸ்., வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர்.‘‘நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு முன்னோட்டமாக ஒத்திகைகள் நடைபெறும். அப்படி ஒரு நாடகப்பயிற்சியில் சக மாணவி ஒருத்தி, தான் சொல்ல வேண்டிய வசனத்தை தவறாக சொன்னபோது அனைவரும் சிரித்து விட்டோம். ஆனால், என்னால் மட்டும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அந்த நிகழ்ச்சியை மேற்பார்வை செய்துகொண்டிருந்த எங்கள் வரலாற்று ஆசிரியை சரஸ்வதி, என்னிடம், ‘ஜோதி... நீ மிகவும் வித்தியாசமான மாணவி. உன்னிடம் பல திறமைகள் இருக்கின்றன. அது எனக்குத் தெரியும். அந்தத் திறமைகளை நீ அறிந்து, உன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தாமல், பெரிய விஷயங்களில் கவனம் கொள். நிச்சயமாக நீ உயர்ந்த நிலைக்கு வருவாய்’ என்றார். அன்றிலிருந்து நான் என்னுடைய இயல்புகளை மாற்றிக் கொண்டேன். பொறுப்பான அணுகுமுறையுடன் கையாள ஆரம்பித்தேன். என்னுடைய தந்தை டாக்டர் பால சுப்பிரமணியன் வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர். என்னுடைய தாயார் அமலாவும் ஆசிரியை என்றாலும், எனக்குள் மாற்றத் தைக் கொண்டு வந்தது ஆசிரியை சரஸ்வதி அவர்களின் அறிவுரைதான். அதுதான் எனக்குள் தலைமைப் பண்பை வளர்த்தது. பின்னாட்களில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வந்த பின்பும் எனக்கு புது உத்வேகம் தந்து கொண்டிருக்கிறது.’’.கே.எஸ்.கந்தசாமி, ஐ.ஏ.எஸ்., மேனேஜிங் டைரக்டர், தாட்கோ.‘‘நான் திருச்சிராப்பள்ளி கல்கண்டார் கோட்டை அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் அது. ஆங்கில வகுப்பெடுக்கும் ஜானகி டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பீரியட் முடிந்து மணி அடித்தது. அடுத்து விளை யாட்டு பீரியட்தானே என்று ஜானகி டீச்சர் ஐந்து நிமிடங்கள் கூடுதலாக படம் நடத்தி முடித்து விட்டு போனார். அதனால் நாங்கள் கிரவுண்டுக்கு போக கொஞ்சம் தாமதமாகி விட்டது. பி.இ.டி. மாஸ்டர் தன்ராஜ் சார், ‘ஏன் லேட்?’ என்று கேட்க, ‘ஆங்கில பாடம் முடிக்க சில நிமிடங்கள் கூடுதலாகி விட்டது’ என்றேன். ‘பரவாயில்லை. ஆசிரியர் என்ன பாடம் நடத்தினார்? அதன் அர்த்தம் சொல்...’ என்றார். நானோ அர்த்தம் சொல்லத் தெரியாமல் விழித்தேன். உடனே என்னை அவர், மணலில் முட்டி போடச் சொன்னார். இந்தக் காட்சியை தூரத்திலிருந்து கவனித்த ஜானகி டீச்சர், வகுப்பிற்குப் போனதும், என்னிடம் விவரத்தை கேட்டார். நானும் நடந்ததைச் சொன்னேன். உடனே ஜானகி டீச்சர், அந்தப் பாடத்தை அப்படியே எனக்குத் தமிழில் மொழி பெயர்த்து சொன்னார். அந்த விவரம் இதுதான்...மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சித்தரஞ்சன் தாஸ் என்கிற ஏழை மாணவன் கடுமையாக முயற்சி செய்து படித்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாகிறார். அதே மாவட்டத்தில் கலெக்டராகி, தான் படித்த பள்ளிக்கு கொடியேற்ற வருகிறார். அப்பொழுது, அதே பள்ளியில், தான் படித்த காலங்களை நினைவுகூர்ந்த கலெக்டர் சித்தரஞ்சன் தாஸ், மாணவர்களிடம், நீங்களும் கடுமையாக முயற்சி செய்து கலெக்டர் ஆக வேண்டும் என்று மாணவர்களை ஊக்குவிக்கிறார். ‘கந்தசாமி... நீயும் கடுமையாக முயற்சி செய்து படி.. நாளை நீயும் கலெக்டராகலாம். இதே பள்ளியில் கொடியேற்றும் வாய்ப்பும் உனக்கு அமையலாம்!’ என்றார் ஜானகி டீச்சர். அது என்னுடைய மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது. ஒவ்வொரு நாளும் அது என்னை தூங்கவிடாமல் செய்தது. இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி பல அரசு பள்ளிகளில் கொடி யேற்றி இருக்கிறேன். பள்ளி மாணவர்களுக்கு, என்னுடைய ஜானகி டீச்சர் சொன்ன கதையைச் சொல்லி ஊக்கப்படுத்தி வருகிறேன்.’’.டாக்டர் பிரியதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர், திருவண்ணாமலை.‘‘கடலூர் தூய நெஞ்சக பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த சமயம் அது. எங்கள் வகுப்பு ஆசிரியை விகோரியா அவர்கள், ‘நாளை கேள்வி கேட்பேன். எல்லோரும் பதில் சொல்ல வேண்டும். அதேபோல் டெஸ்ட் வைப்பேன். எல்லோரும் முதல் மதிப்பெண் பெற வேண்டும்!’ என்று சொல்லி அனுப்புவார். நானும் இரவெல்லாம் கண் விழித்து படிப்பேன். மறுநாள் டீச்சர் கேள்வி கேட்கும்பொழுது, கண்களில் தூக்கம் செருகும். தேர்வின்போது தூக்க கலக்கமாக இருப்பதால், விடைகளை எழுதும் பொழுது கோர்வையாக வராது, மிகவும் சோர்வாக உணர்வேன். இதையெல்லாம் கவனித்த விகோரியா டீச்சர் என்னை அழைத்து, ‘பிரியதர்ஷினி... ஏன் தேர்வு எழுதச் சொன்னால் சோர்வாக இருக்கிறாய்?’ என்று கேட்டார். நான் கண் முழித்து படித்ததைச் சொன்னேன்.‘உடலையும் மனதையும் வருத்திக்கொண்டு படிப்பதால் பயனில்லை. அது ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் பயணம் செய்கிற மாதிரி. மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க வேண்டும். கண்கள் புத்தகத்திலும் மனது வேறு ஒரு திசையிலும் போனால் படிக்கிற மாதிரி இருக்குமே தவிர படிப்பது மனதில் பதியாது. உடலும் உள்ளமும் சோர்வடையாதவாறு படிக்க வேண்டும். இரவு தூக்கம் வந்தால் தூங்கி விடு. காலை உற்சாகமாக எழுந்து படி!’ என்றார். விகோரியா டீச்சர் சொன்ன மாதிரி காலை ஆறு மணிக்கு எழுந்து, எட்டரை மணி வரை உற்சாகமாக படித்தேன். முதல் மதிப்பெண் பெற்றேன். டாக்டராவதுதான் என்னுடைய கனவு. உற்சாகமாய் பி.டி.எஸ்., படித்தேன். அதற்கடுத்து டி.என்.பி.எஸ்.சி., ‘குரூப் - 1’ தேர்வெழுதி, சப் கலெக்டர் ஆனேன். ‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்று மகாக்கவி பாரதியும் என்னுடைய ஆசிரியையும் சொன்னது எத்தனை பொருத்தம்!’’.முத்துசாமி, ஐ.பி.எஸ்., டி.ஐ.ஜி., வேலூர்.‘‘ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் பி.ஏ., வரலாறு நான் படித்துக் கொண்டிருந்தபோது வரலாறு பேராசிரியர் கி.சு.கிருஷ்ணசாமி அவர்கள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் எனக்குக் கொடுத்தார். எல்லா மாணவர்கள் மேல் அவருக்கு அன்பு இருந்தாலும் ஏழ்மை நிலையில் இருந்த என் மீது அவருக்கு அக்கறை அதிகம். பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள செய்வார். பரிசு கிடைக்கவில்லை என்றாலும் பேச்சாற்றல் வளரும் என்பார். எனக்குள் அப்பொழுதுதான் தலைமைப் பண்பு வளர்ந்தது. கல்லூரிக்கு அவர் சைக்கிளில்தான் வருவார். என்னையும் அவருடன் சைக்கிளில் அமரவைத்து அழைத்துப் போவார். கல்லூரி முதல்வர் அதைப் பார்த்துவிட்டு, ‘மாணவர்களோடு இவ்வளவு நெருக்கமாக ஒரு பேராசிரியர் இருக்கக் கூடாது. அதுவும் ஒரு மாணவனை பின்னால் அமரவைத்து, நீங்கள் சைக்கிள் ஓட்டலாமா?’ என்றார். அதற்கு அவரோ, ‘முத்துசாமி மாணவன் அல்ல... எனக்கு தம்பி!’ என்றார்.அதேபோல் கல்லூரியில் ‘ரோட்ராக்ட்’ என்கிற ரோட்டரி கிளப்பின் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், அந்த பதவியேற்பு விழாவில் எல்லோரும் கோட் போட்டுக் கொண்டு வந்தார்கள். எனக்கு உடுத்திக்கொள்ள ஒரு நல்ல பேன்ட், சட்டை கூட இல்லை. ‘இளமையில் வறுமை எவ்வளவு கொடுமை’ என்பதை உணர்ந்து கண்ணீர் சிந்தினேன். அப்பொழுது பேராசிரியர், ‘முத்துசாமி... இன்று உனக்கு உடுத்திக்கொள்ள பேன்ட், சட்டை இல்லை என்று அழுகிறாய். பிற்காலத்தில் எந்த பேன்ட், சட்டையை போட்டுக்கொள்வது என்கிற அளவிற்கு நீ உயர்வாய். ஒன்றை மட்டும் புரிந்து கொள், முத்துசாமிக்குத்தான் மரியாதையே தவிர... முத்துசாமி உடுத்தியிருக்கும் ஆடைகளுக்கு அல்ல!’ என்று நம்பிக்கையூட்டினார். இன்று காக்கிச்சட்டையை நான் மிடுக்காக அணிந்திருப்பதற்கு காரணம் அன்று அவர் தந்த நம்பிக்கைதான். நான் டெபுடி கமிஷனராக இருந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றபோது பேராசிரியர் கிருஷ்ணசாமி சார், தம்முடைய மனைவியுடன் நேரில் வந்து என்னை வாழ்த்தியை வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது.’’.ஆர்.பாத்திமா, சப் கலெக்டர், அரக்கோணம்.‘‘சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். எப்பொழுதும் நானும் என் தங்கையும் முதல் ரேங்க்தான் வருவோம். ஒரு தேர்வு நேரத்தில் தங்கைக்கு ‘மெட்ராஸ் ஐ’ வந்து விட்டது. கண் எரிச்சல் காரணமாக அவளால் சரியாக படிக்க முடியவில்லை, தூங்க முடியவில்லை, தேர்வில் கவனம் செலுத்த முடியவில்லை. சில மதிப் பெண் குறைந்து இரண்டாவது ரேங்க் வந்து விட்டாள். உடனே எங்கள் அம்மா பள்ளிக்கு வந்து, எங்கள் வகுப்பு ஆசிரியை கோபிதாவிடம் தம்முடைய ஆதங்கத்தைக் கொட்டினார்.அப்பொழுது ஆசிரியை கோபிதா என்னையும், என்னுடைய தங்கையையும் அழைத்து வரச் செய்தார். தாயின் எதிரிலேயே எங்களை திட்டுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவரோ எங்கள் தாயைத்தான் கண்டித்தார். ‘உங்கள் மகள்கள் இருவரும் அருமையாக படிக்கிறார்கள். சுறுசுறுப்புடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் வருங்காலத்தில் எல்லா தேர்வுகளையும் எதிர்கொள்ளும் அளவிற்கு துடிப்பாக இருக்கிறார்கள். நீங்கள் நினைக்கிற மாதிரி மதிப்பெண்ணை வைத்து மாணவர்களை அளப்பது தவறு. பிற்காலத்தில் நீங்களே அதை உணர்வீர்கள்!’ என்று அறிவுரை சொல்லி அனுப்பினார். அவருடையை நம்பிக்கையை இப்போது வரை நாங்கள் காப்பாற்றி வருகிறோம்!’’படம்: கே.கஸ்தூரி