நல்ல பெண்மணி... மிக நல்ல பெண்மணி!நல்ல பெண்மணி... மிக நல்ல பெண்மணி!தாய் நாட்டு நாகரிகம் பேணி நடப்பவள் எவளோஅவளே நல்ல பெண்மணி... மிக நல்ல பெண்மணி!இந்தப் பழைய பாடலை பலர் கேட்டிருப்போம். ஆனால், இன்றைய பெண் குழந்தைகள் இந்தப் பாடலை கேட்டிருக்க மாட்டார்கள். இந்தப் பாடலில் சில வரிகள் இன்றைக்கும் பொருந்தும். ஆனால், சில வரிகள் இன்றைய காலகட்டதோடு முற்றிலும் பொருந்தாது.உதாரணமாக, ‘பிறந்த வீட்டுப் பெருமையை புகுந்த வீட்டில் பேசக்கூடாது’ என்ற வரிகளை இன்று யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.பெண்களாகிய நம்முடைய வாழ்க்கை, பல வித்தைகளை (Multi Tasking) செய்யும் திறமைசாலி என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்பது முதலில் இருந்தே புலப்படுகிறது. ‘குடும்பத் தலைவி’ என்றால் பெற்றோர், கணவர், குழந்தைகள் வரை அனைவரின் தேவைகளையும் கவனிப்பது நம்முடைய கடமைதான்.உணவுப் பாதுகாப்பு, குடும்ப நலம், சுகாதாரம், படிப்பு, கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு, வயதான பெற்றோரின் உடல் நலம், தங்கு தடையில்லாத உணவு, மின்சாரம், சுத்தமான துணிமணி என அனைத்தையும் கவனத்தில் கொண்டு ஒரு குடும்பத் தலைவி பணி செய்ய வேண்டும். ஒன்றைக்கூட விட்டுத்தர முடியாது. கிராமமாக இருந்தால் வயல் வேலையும் சேர்த்து செய்ய வேண்டும். நகரமாக இருந்தால், வீட்டு வேலை, அலுவலக வேலை என இரண்டையும் சாதுர்யமாக சமாளித்தாக வேண்டும்.அலுவலகத்துக்குச் செல்வதால் சமைக்காமல் கிளம்பிவிட முடியாது. எப்பேற்பட்ட அவசரமாக இருந்தாலும் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு தனியாக அனுப்ப முடியாது. குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு, அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு அவசர அவசரமாக ஓடும் பெண் மருத்துவர்களை இன்றும் நாம் காணலாம்.ஆனால், ஆண் மருத்துவர்களுக்கு அந்தக் கட்டாயம் இல்லை. ஓய்விருந்தால் பள்ளிக்கூட ஆண்டு விழாவில் கலந்து கொள்ளலாம். இல்லையென்றால் அலுவலகப் பணி இருக்கிறது என்று குடும்ப விழாக்களை தவிர்த்து விடலாம். ஆனால், நம்மால்... அதாவது, நம்மைப் போன்ற குடும்பத் தலைவிகள் அவ்வாறு சாக்குப் போக்கு சொல்லி தவிர்க்க முடியாது. தலைபோகிற காரியமாக இருந்தாலும் குடும்ப விழா, அலுவலகப் பணி, இல்ல கடமை என எதையும் விட்டுக் கொடுக்காமல் அனைத்தையும் வெகு சிறப்பாக செய்து முடித்து விடுவோம்!அதனால் நாம் உண்மையாகவே வித்தகிகள்தான். அஷ்டாவதானிகள்தான். ஒரே சமயத்தில் எட்டு வித்தைகளை செய்யும் ஒருவரை ‘அஷ்டாவதானி’ என்பார்கள். அதுபோல பல வித்தைகளை ஒரே சமயத்தில் செய்யும் பல்சுவை வித்தகிகள்தான் நாமும்!.காலத்திற்கு ஏற்றாற்போல நம் பணிகளும் மாறிவிடுகின்றன. இப்பொழுதும் அதே சுமைதான். ஆனால், நமக்கு தோள் கொடுக்க நம் இல்லத்துப் பெரியவர்களும்... குறிப்பாக, நம் இல்லத்து ஆண்கள் அனுசரணையோடு வருவது நம் பாக்கியம்தான்!இன்றைக்கு குழந்தைகள் பராமரிப்பு முதல் அலுவலகப் பணிக்கு உதவுவது வரை கணவன்மார்களும் தந்தைமார்களும் மிகுந்த அரவணைப்பை நமக்குத் தருகின்றனர். நிஜமாகவே நம் பாட்டிகளைவிட நாம் கொடுத்து வைத்தவர்கள்தான்!இப்பொழுது பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, நல்ல வேலையில் அமர்த்தி, நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டுமென அப்பாக்கள் பெரும் முயற்சி செய்கிறார்கள். அதனால்தான் பெண்களுக்கு மிகப்பெரிய சப்போர்ட், நம் இல்லத்து ஆண் மக்கள்... குறிப்பாக, அப்பாக்கள்!அத்துடன் அம்மாவின் உதவியும் இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். மகள்களுக்கு அப்பா, அம்மா ஆதரவு இருந்துவிட்டால், அந்த வீட்டுப் பெண்கள் மெய்யாகவே கொடுத்து வைத்தவர்கள்தான். அப்பா, அம்மாவுடைய ஆதரவும் திருமணமாகி சென்றபின், மாமியாரின் ஆதரவும் இருந்துவிட்டால் குதூகலம்தான். எல்லாவற்றையும் விட கணவரின் ஒத்துழைப்பும் அன்பும் இருந்துவிட்டால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்..வெளியிலிருந்து வரும் நட்புக் கரங்களை விட, நம் குடும்பத்தில் இருந்து நீட்டப்படும் நேசக்கரங்கள்தான் நமக்கு உதவிக்கரங்கள். அவற்றுக்கு நாம் என்றென்றும் நன்றி உணர்வோடு கட்டுப்பட்டவர்களாக இருப்போம். குடும்பத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.அந்த வகையில் எனக்குப் பிறந்த வீடும் புகுந்த வீடும் மிகப்பெரிய பலம்! படிப்பு, பண்பு, ஒழுக்கம் என எனக்குத் தரமான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்னுடைய பிறந்த வீடு. நான் புகுந்த வீடோ என்னுடைய திறமைகளை ஊக்குவித்து வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்டியது.‘‘பிறந்த வீட்டில் குடத்தில் இட்ட விளக்காக மிளிர்ந்து கொண்டிருந்தேன். புகுந்த வீட்டில் குன்றில் இட்ட விளக்காக நான் பிரகாசித்துக் கொண்டிருக்கிறேன்!’’ என்று என்னுடைய தாயார் பூரிப்புடன் புளகாங்கிதம் அடைந்து சொல்வார்கள்.அதனால் ஒரு பெண்ணுக்கு குடும்பம்தான் முதலில் சிநேகிதி. அதுபோல பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் நல்ல சிநேகிதிகள் அமைவது மிகவும் முக்கியம். எனக்கு அப்படிப்பட்ட நல்ல சிநேகிதிகளும் தோழர்களும் கிடைத்தார்கள். இன்று வரை அவர்களுடன் மாறாத நட்புடன் இருந்து வருகிறேன். வருடத்திற்கு ஒரு முறையாவது நாங்கள் சந்தித்து விடுவோம். வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வோம்.அதுபோல நான் சார்ந்த ‘பசுமை தாயகம்’, ‘மக்கள் தொலைக்காட்சி’, ‘பாட்டாளி மக்கள் கட்சி’யிலும் எனக்கு நல்ல தோழமை கிடைத்துள்ளது. இப்பொழுது ‘குமுதம் சிநேகிதி’ மூலமாக நல்ல பண்பான தோழமையுடன் மூன்று வருடங்கள் பயணித்தது மிக நல்ல அனுபவம். எத்தனையோ சிநேகிதிகள், வாசகிகள் என்னிடம் தங்கள் அன்பையும் பாராட்டையும் பகிர்ந்து கொண்டார்கள். மிக பெருமையான தருணங்கள் அவை!என்னுடைய உறவினர்கள், நண்பர்கள்கூட, ‘‘சௌமியா... உன்னுடைய கட்டுரையை முதலில் படித்துவிடுவேன். நம்ம ஊரைப் பற்றியும் கிராமங்களை பற்றியும் நிறைய எழுதுவதால் எங்களுக்கு மிகவும் பிடிக்கிறது. அலுப்புத் தட்டுவதில்லை!’’ என்று தொலைபேசியில் தெரிவிப்பார்கள். பாராட்டு மழையில் நனைவது யாருக்குத்தான் பிடிக்காது? எனக்கும் பிடிக்கும்!இந்தத் தொடர் எழுத எனக்கு வாய்ப்பு அளித்த குமுதம் குழுமத்திற்கு மனமார்ந்த நன்றி! ‘போற்றிப் பாடடி பெண்ணே!’ என்ற அழகான தலைப்பு கொடுத்து, பெண்கள் முன்னேற்றத்திற்கான கட்டுரைகள் எழுதித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார்கள். என் மனதில் தோன்றியதை எழுதினேன்.கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், பாதுகாப்பு இதைப் பற்றி மட்டும் எழுதாமல் என்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும் சேர்த்து எழுதுவதற்கு முழு சுதந்திரம் அளித்து என்னை ஊக்கப்படுத்திய ‘குமுதம் சிநேகிதி’ எடிட்டோரியல் குழுவினருக்கு என்னுடைய ஆத்மார்த்த நன்றிகள்!‘போற்றிப் பாடடி பெண்ணே!’ தொடரின் மூலம் எனக்கு ஏராளமான சிநேகிதிகளும் நண்பர்களும் கிடைத்தார்கள். அதற்கும் மிகப்பெரிய வணக்கங்கள்! மகிழ்வுடன் இனிதே விடைபெறுகிறேன்!!(போற்றுதல் நிறைவடைந்தது) - முனைவர் சௌமியா அன்புமணி