‘ஹக்க்... ஹக்க்... தொண்டைக் கபம் படுத்துகிறது, இந்த ஒரு வாரமாய். நான் இயல்பிலேயே கொஞ்சம் சாப்பாடே மருந்தாய் இருந்து விடுவேன். முன்பு சீதா இருந்தாள். ஏதேனும் இதமாய்ச் செய்து தருவாள். இப்போது?சீதே... எங்கடி இருக்க? இருந்தாப்புல இருந்துட்டு சட்டுன்னு மறைஞ்சு போயிட்டியே. இந்தா பாரு... தொண்டை கரகரன்னு இருக்கு. ஒரு மிளகு ரசம்... அத நான் கேட்க முடியுமா? ப்ச்! சீதே... நானும் அங்க வந்துடறேண்டி! அங்கயாவது மிளகு ரசம் கிடைக்குமா?’ ‘முதுமைக்கும் உண்டு முகம்’ என்ற தலைப்பில் தேதிவாரியாக, தான் எழுதி வைத்திருத்ததைப் படித்துக் கொண்டிருந்த கமலியின் சிந்தனை பட்டென அறுந்தது.எப்படியும் நான்கு நாட்களுக்கு ஒருமுறை அழைத்து விடுகிறார். பேசுகிறார்... பேசுகிறார்... அப்படிப் பேசுகிறார். ஆனால், பதில் எதிர்பார்ப்பது இல்லை. ‘சீதே... சீதே...’ என அவர் உருகும் நபர், அவர் மனைவியாக இருக்குமோ? இருக்கும்! அவரின் தனிமைத் துயரம் பேச்சில் தெரிகிறது. யார் அவர்?ராங் கால்! ஆம்... அப்படித்தானே இந்தத் தொடர்பு ஏற்பட்டது. என்னுடன் மனம் விட்டுப் பேசும் நீங்கள் யார்? கருப்பா? சிவப்பா? வயதென்ன? பிள்ளைகள் எத்தனை? எந்த ஊர்? இதில் ஒன்றையாவது நீங்கள் கேட்க விட்டிருக்கிறீர்களா? இல்லை, நீங்களாவது சொல்லி இருக்கிறீர்களா?கமலி என்றைக்கு புது நம்பர் வாங்கினாளோ அன்றிலிருந்து இந்த அழைப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ‘யாருய்யா நீ? வைய்யா போனை!’ எனச் சத்தம் போட்டு அழைப்பை நிராகரிக்க மனமில்லை. அவ்வழைப்பில் இருந்த குழைவோ வருத்தமோ இல்லை, அதன் ஜீவனோ ஏதோ ஒன்று அவளை நிராகரிப்பில் தள்ளாது கட்டிப் போட்டிருந்தது. பக்கங்களைத் திருப்பினாள்.‘சீதே... நீ போனதும் மகனுடனும் மருமகளுடனும்தான் இருக்கிறேன். முதுமைக்கு ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகிறதே. ‘துணை’ என்ற ஊன்றுகோல். நமக்கு ஒரு சிறு அசௌகரியம் என்றால் நம்மைச் சட்டென்று பார்க்க துணை இருக்கிறது என்ற தைரியம்தான் இங்கு ஊன்றுகோலாய் நிற்கிறது. அதற்கு ஆட்பட்டவன்தான் நானும். இருந்தாலும், ஒட்டுதல் இல்லா என்னுடைய சுபாவம் என்னை இவர்களிடம் இருந்து தள்ளியே நிறுத்துகிறது.’ஏன்? ஒட்டுதலா இருந்தாதான் என்ன? இதில் யார் மேல் பிழை? ஒட்டாமல் இருக்கும் உறவினரா? இல்லை, ஒட்டுதலே இல்லாத இந்த ராங் நம்பரா?டைரியை மூடி வைக்கப் போனவள், போன் ஒலிக்கவே, எடுத்து, காதில் வைத்தாள். அந்தப் பக்கம் அவரேதான். மிஸ்டர் ராங் கால்! வழக்கம் போல் பதிலேதும் எதிர்பார்க்காமல் கடகடவெனப் பேச ஆரம்பித்தார்.‘‘சீதே... நேத்து நடந்ததச் சொல்றேன்... கேளு! மெதுவாத்தான் நடக்க முடியுது எனக்கு. கதவு வரைக்கும் போயிட்டு... ‘ஏன்ப்பா... என் மூக்குக் கண்ணாடி சரி பார்க்கணும்பா. ஒரு பக்கம் காதுல மாட்ட முடியல.’‘ம்ம்... பார்க்கறேன்பா!’ இதுவே ஜாஸ்தி. இதுக்கு மேல் அவன் பேச மாட்டான். மருமகள் என்னைப் பற்றி வேண்டுமானால் பேசுவாள். என்னிடம் பேசறது தேவைக்குத்தான். எனக்கு இப்போ பேச ஆள் வேண்டுமே. சீதே... ஏண்டி என்னை விட்டு... தன்னிரக்கம் என்னைக் கொல்லுதுடி. அதான் உனக்கு உடனே போன் செய்தேன்!சீதே... சாப்பாடு கிடைக்குது. அப்புறம் என்னன்னு கேட்ப. அது போதுமா? நடந்ததை, நின்றதை, போனதைப் பேச ஒரு உறவு வேண்டாமா?உன் மருமகள் நல்லவள்தான். என்னை முதியோர் இல்லம் அனுப்பாம வீட்டில் வைச்சுக்கறாளே! ஆனால், எனக்கு மனுஷங்க வேண்டி இருக்குடி சீதே. யாருமே இல்லாம இந்த அறைக்குள்ள... முடியலைடி. முதுமையென்னும் முகம் பலருக்கு அலட்சியத்தையும் சிலருக்கு அன்பையும் தருதே... அதை ஒத்துக்கிறியா நீ?முதுமையென்னும் முகம்மூதறிவு தரும்முன்வரிசை கேட்கும்முழுப் பழமாய் நிற்கும்மூலையிலும் வசிக்கும்!கேட்கிறாயா சீதே! ஒரு காலத்தில் எத்தனை கவிதை சொல்வேன். இப்ப என்னடான்னா அதை யார்கிட்ட சொல்லன்னு கடனேன்னு கிடக்கேன்... அப்படியும் சீதே உன்கிட்ட சொல்லிட்டேன் பாரு!’’அவர் சொன்னதை கடகடவென்று எழுதிக் கொண்ட கமலியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. என்ன செய்து இவரின் வருத்தத்தைப் போக்க முடியும் என்ற யோசனையில், ‘இவர் யார்?’ என்ற யோசனை முதலில் எழுந்தது. எப்படியாவது இவரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உறுதி பிறந்தது!போனை வைத்த பின்னும் இன்னும் கமலிக்கு துக்கம் தீரவில்லை. ‘என்ன மாதிரி வாழ்ந்திருப்பார்? இப்போது இவ்வாறு புலம்பும் அளவுக்கு வந்திருக்கிறார் என்றால் அவருடைய இப்போதைய வாழ்க்கை இயல்பாய் இல்லை. அவருக்கு முரணாய்த் தெரிகிறது. இதை இப்படியே விடக் கூடாது. யார் அவரெனக் கண்டுபிடித்தே ஆக வேண்டும். தேவையானால், கூட இருப்பவங்களுக்கு ஒரு கவுன்சிலிங் கொடுக்கணும். பார்ப்போம்...’முடிவெடுத்தவள், இடத்தை விட்டு எழுந்திருக்கும்போது சரியாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ஜோதி. அவளின் அறைத் தோழி. பக்கத்தில் இருக்கும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்ப்பவள்.‘‘ஹேய்... இன்னிக்கும் மிஸ்டர் ராங் கால் புலம்பலா? டைரிய வச்சுட்டு உட்கார்ந்துட்ட? ஹான்... வழக்கம் போல அவர் பேசினத எழுதி வைச்சுட்டியா?’’‘‘ப்ச்! ஆமாடி ஜோதி. அவரேதான். நாமதான் உறவுக்காக ஏங்கறோம்னா நமக்கு மேலா ஒருத்தர் இருக்காருன்னு நினைக்கும்போது பாவமா இருக்குடி. எந்த ஊரோ? என்ன பேரோ?’’‘‘வந்த நம்பரை வைச்சு பேரைத் தேடு கமலி...’’‘‘தேடாம இருப்பேனா? அது ‘ரவி’ன்னு வருது. அதான் அவர் பெயரோ? தெரியலடி.’’‘‘பின்னென்ன? அவரை நேரா போய் பார்க்க வேண்டியதுதானே?’’‘‘கூடிய சீக்கிரம்!’’கமலியின் நினைவு கடைசியாக வந்த ராங் காலை நோக்கியே சென்றது.‘‘சீதே... உன்கிட்ட வர வேளை வந்துடுச்சு போலடி. ஆஸ்பத்திரில கெடக்கேன். இத்தனை நாள் மனுஷங்களையே பார்க்காம தனியாளா ஐ.சி.யூ.வுல கெடந்தேன். இப்பதான் வார்டுக்கு வந்திருக்கேன். இன்னும் எத்தனை நாளோ வீட்டுக்குப் போகவோ... இல்லை உன்கிட்ட வரவோ? தெரியலடி சீதே.இதோ பாரு... இந்த போன்ல, நீயும் நானும் கல்யாணம் பண்ணின போட்டோ, நம்ம ரவிக்கு திருப்பதியில மொட்டை அடிச்சு எடுத்துக்கிட்ட போட்டோ, அப்புறம்... எங்கப்பா, அம்மா, நீன்னு எல்லோரும் ஸ்டுடியோ போய் எடுத்த போட்டோ, கடைசியா நீ முடியாம போய் ஆஸ்பத்திரியில இருந்தப்ப பேசினயே அப்ப எடுத்த போட்டோ எல்லாம் பார்த்து பார்த்து அழுகறேண்டி சீதே. நீ இல்லாம எப்படி இருந்தேன்னா இதான்... இதை வைச்சுத்தான்!இந்த போன் எனக்கொரு மாயக் குடும்பத்தைக் கொடுத்தது. உன் நம்பர் போட்டு உன்னோட பேசறேன். நீ பதில் பேச மாட்டேன்னு தெரியும். எப்படி பேசுவ? நீதான் என்ன விட்டுப் போயிட்டியே! எனக்காக ஒண்ணே ஒண்ணு பண்ணி வை அங்க. நான் வந்துடறேன். என்னன்னு கேட்க மாட்டியா? மிளகு ரசமும் சுட்ட அப்பளமும்.’’தொடர்பு அறுந்தது.‘கமலிக்கு அழுகை வந்தது. இந்த போன் வந்தே ஒரு வாரம் ஆச்சே. டிஸ்சார்ஜ் ஆகிட்டாரான்னு தெரிலயே. நாமளே போன் பண்ணிப் பார்ப்போமா?’யோசித்துக் கொண்டிருந்தபோது ஜோதி ஓடி வந்தாள்.‘‘கமலி... ஒரு குட் நியூஸ்! ராங் கால் ரவியோட அட்ரஸை கண்டுபிடிச்சிட்டேன். இதே ஊர்தான்! வா... போகலாம். அழுதியா என்ன? கண்ணெல்லாம் சிவந்திருக்கு?’’‘‘ப்ச்! ஆமாடி. மனம் பாரமா இருக்கு. உறவற்ற மனம் உறவுக்கு ஏங்குது. உறவிருந்தும் மனம் ஒட்டுதல் இல்லாது இருக்கு. இது என்ன வாழ்க்கை?’’‘‘எல்லாம் அவரவர் விதி கமலி!’’‘‘விதியாவது ஒண்ணாவது. நாமே வச்சுக்கிறது எல்லாம். முதியவர்களுக்கு சரி சரின்னு போகத் தெரியல. இளையவர்களுக்கு எது சரின்னு தெரியல. ஆக மொத்தம் வாழ்க்கை இப்படி அவியலாயிடுது.’’கமலியும் ஜோதியும் வீட்டைத் தேடி கண்டுபிடித்துப் போகும்போது சூரியன் கீழிறங்கி விட்டது.‘விநாயகர் சதுர்த்தி’ பூஜை முடிந்து ஜம்மென்று பிள்ளையார், பூக்களும் சந்தனமும் மணக்க உட்கார்ந்திருந்தார்.‘‘மிஸ்டர் ரவி?’’‘‘ஆமா... நான்தான்! உள்ளே வாங்க... நீங்க?’’‘‘நான் கமலி. எழுத்தாளர் கமலி!’’ என்று சொன்னவள், சுவற்றில் மாட்டப்பட்டிருந்த வயதானவர்களின் படத்தைப் பார்த்து நின்றாள்.‘‘இவர்..?’’‘‘என் அப்பா கோபால்சாமி. வயசாச்சு. தள்ளாமை. கொஞ்சம் உடம்பு முடியல வேற. ஹாஸ்பிடல்ல இருந்து இப்பதான் கூட்டிட்டு வந்தோம். ஹி இஸ் டேக்கிங் ரெஸ்ட் நவ்! உள்ள ரூம்ல இருக்கார். போட்டோலகூட இருக்கிறது எங்கம்மா சீதா. எங்கப்பாவுக்கு எங்கம்மான்னா உயிர். ‘சீதே... சீதே...’ன்னு இன்னிவரைக்கும் போன்ல பேசுவார். போனவங்க எப்படிப் பேச முடியும்? என்னமோ அவரும் பேசிட்டே இருப்பார். நாங்க யாரும் அதைக் கண்டுக்கிறதில்ல.’’‘‘அது ஒரு அவுட்லெட்..!’’‘‘எது..?’’‘‘தன்னால் பேசி அழுத்தத்தை வெளிப்படுத்துவது. இப்போது போன் வந்ததால் போனில் பேசுகிறார். இல்லன்னா தனக்குத் தானே பேசிக் கொண்டு...செத்துப் போன என் அம்மா எப்படி போனில் வருவாள்? அந்தளவு டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆகலையே!’’ ரவி சிரித்தான்.‘‘டெக்னாலஜி மட்டும் இல்லை சார். பிள்ளைகளின் மனமும்கூட இம்ப்ரூவ் ஆகலை!’’ காட்டமாய்ச் சொன்னாள் கமலி.‘‘யாருங்க இவங்க? ஏதும் டொனெஷனா மேடம்? என்ன விஷயமா வந்திருக்கீங்க?’’ ஜெயந்தி வரும்போதே கேள்வியுடன் வந்தாள்.‘‘அறைக்குள் வேறு யார் இருக்காங்க மிஸ்டர் ரவி?’’‘‘யாரும் இல்ல. என் அப்பாதான். ஒரு நர்ஸ் வந்து காலையிலும் இரவிலும் பார்த்து விட்டுப் போவார். அதைப் பற்றி உங்களுக்கென்ன? ஏன் கேட்கறீங்க?’’.‘‘கோபப்படாதீங்க. நாங்க எங்களுக்காக வரலை. உங்கள் அப்பாவுக்காகத்தான் வந்தோம். கொஞ்சம் அவரைக் கண்டுக்கங்கன்னு சொல்லத்தான் வந்தோம்.’’‘‘என்ன கண்டுக்காமப் போனோம்? அவருக்கு ஒரு குறையும் இல்லை மேடம். தனி ரூம் வித் டாய்லட் அட்டாச்டு. டி.வி., ஏ.சி., நல்ல பெட், படிக்க நியூஸ் பேப்பர். இதுக்கு மேல என்ன வேணும்?’’‘‘வேளா வேளைக்குச் சாப்பாடு நான் கொடுக்கறேனே. அத விட்டுட்டீங்களே!’’ ஜெயந்தி சொன்னாள்.‘‘ம்ம்... அதானே! சாப்பாட்டை ஜெயந்தி கரெக்டா அந்தந்த டைமுக்கு உள்ள கொண்டு போய் வைச்சுடுவாள். இன்னைக்கு விநாயகருக்குப் படைச்சதும் ரெண்டு கொழுக்கட்டையும் கொடுத்தாள்.’’‘‘ஆக, சாப்பிடுவதும் தனிமையிலேயே... பண்டிகை தினங்களில்கூட! மிஸ்டர் ரவி... நீங்க சொன்ன இத்தனை வசதிகள் தராத இன்பம் தன்னோட உறவுகள் அருகிருந்து பேசும்போது கிடைக்கும். தனிமைத் துயரைப் போக்கும் அருமருந்தும் அதுதான்!’’ கமலி பட்டெனப் போட்டுடைத்தாள்.‘‘தனிமையா? அதென்ன? எங்கப்பா எங்கக்கூடவே இந்த வீட்டில்தானே இருக்காரு? தனியா எங்கயும் விடலையே?’’‘‘கமலி... நாம சொல்ல வர்றதே இவருக்குப் புரியல. மிஸ்டர் ரவி... வீடு, கார், வசதிகள் இவற்றை விட வயதானவர் எதிர்பார்ப்பது தன்னோட பிள்ளை தன்னுடன் இருக்கும் பொன்னான நேரத்தைதான்!’’‘‘அதுக்குன்னு தொழிலை விட்டுட்டு இவரைக் கண்டுக்கங்கன்னு சொல்றீங்களா?’’ ரவி கேட்டான்.‘‘கண்டுக்கணும் மிஸ்டர் ரவி! பிள்ளையா நீங்க கண்டுக்காட்டாலும் சக மனுஷனா நீங்க கண்டுக்கணும். யாரும் துணையோட பிறக்கிறதில்ல. துணையோட போறதில்ல. இடைப்பட்ட வாழ்க்கையில் வரும் துணை இடையிலேயே நின்று விட, மீதி இருக்கும் காலத்தைக் கடக்க ஒரு பற்றுக்கோல் தேவைப்படுது. அந்தப் பற்றுக்கோலாய் உங்கள் அப்பாவுக்கு நீங்கள் இல்லாததால் ‘சீதே’ன்னு ஒரு போன் குரலைத் துணையாக்கிக் கொண்டார்.மிஸ்டர் ரவி... வயதானவர்களுக்கு வேண்டியது வசதியான தனியறை அல்ல. வளமும் பாசமும் உள்ள குடும்ப உறவுகளோடு ஒரு சிறு ஹாலில் தன் படுக்கை இருந்தாலும், ‘ஆஹா... நம்மைச் சுற்றி எத்தனை உறவுகள்!’ என மகிழ்வார்கள். உறவுகள் தரும் பலமே முதுமைக்கு உரம்!அதை விடுத்து, ஒற்றை ஆளாய் சகல வசதிகளுடன் ஒரு அறையில் இருந்தாலும் அது அவர்களுக்குத் தனிமையே. உறவில்லாது அனாதையாய் இருப்பவள் நான் சொல்கிறேன்... என்னை விட பெரிய அனாதை உங்கப்பா! சுற்றி உறவுகள் நீங்கள் எல்லோரும் இருந்தும் எண்ணங்களைப் பகிர எவரும் இல்லாதவர். உங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன் மிஸ்டர் ரவி.’’‘‘அப்போ நீங்க?’’‘‘நான்தான் சீதே! உங்கள் அம்மாவின் பிரதிநிதி. உங்கப்பா போன் செய்து பேசுவது என்னிடம்தான். கமலியாக இல்லை... உங்கள் அம்மா சீதாவாக! உங்கள் அம்மாவின் போன் நம்பரை ஏர்போன் எனக்குத் தந்ததால், நான் சீதாவானேன், உங்க அப்பாவுக்கு. அப்படியே இருக்கட்டும்! நீங்க இதைப் பத்தி அவரிடம் சொல்ல வேண்டாம். கிளம்பறோம்...’’ எழுந்து கொண்டாள்.‘‘மேடம்... ஸாரி! அப்பாவைப் பார்த்துட்டுப் போலாமே!’’‘‘வேண்டாம் மிஸ்டர் ரவி. நீங்கள் அன்பும் அனுசரணையுமாய் இருந்தால் இந்த சீதேக்கு வேலையே இருக்காது. ‘சீதே...’ என யாருக்கோ போன் செய்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியை அவருக்கு நான் அளிக்க மாட்டேன். பத்திரமா பார்த்துக்கோங்க. இதைச் சொல்ல எங்களுக்கு முழு தகுதி இருக்கு! ஏன்னா... பெற்றவர்களைத் தொலைத்தவர்கள் நாங்கள்!’’வார்த்தைகளில் வலி கடத்தி, வழிகாட்டிச் சென்றாள் கமலி.மனம் மாறிய ரவியின் சேவைக்காய் உள்ளிருந்து கோபால்சாமியின் குரல் தீனமாய் ஒலித்தது.‘‘சீதே...’’ - மாலா மாதவன்