தினசரி சைக்கிளில் பின் கேரியரில் டீ கேனை கட்டிக்கொண்டு டீ விற்கப்போகும் அந்தப் பெண்மணி, ஒரு பள்ளிக்கூடத்தை அடைந்ததும், சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விடுகிறார். பிறகு அந்தப் பள்ளியின் வாசலில் வைக்கப்படுள்ள பேனர் ஒன்றை சிறிது நேரம் உற்றுப் பார்த்து கண் கலங்குகிறார்.இது என்றைக்கோ ஒரு நாள் நடப்பதல்ல. வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் நடக்கிறது இப்படியொரு நிகழ்வு! ஏன்? எதற்கு?அரக்கோணம் ரயில்வே தண்டவாளத்துக்குப் பக்கத்திலிருக்கும் சின்ன கைனூர் கிராமத்தில் இருக்கிறது நாராயணம்மாளின் குடிசை. அந்த ஏரியாவில் இவரை ‘டீக்காரம்மா’ என்றே மக்கள் அடையாளம் காட்டுகிறார்கள். அவரைச் சந்தித்தோம். இஞ்சியும் ஏலக்காயும் இடித்துப் போட்டு, சுடச்சுட ஒரு கப் டீயை நமக்குக் கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தார் நாராயணம்மாள்..‘‘நான் பத்தாம் வகுப்பு வரை படிச்சிருந்தாலும் எந்த வேலையும் கிடைக்கல. கூலி வேலைக்கு நடந்து போய்க்கிட்டிருந்தேன். அப்போ டூவீலர்ல அதே கூலி வேலைக்கு பன்னீர்செல்வம் என்பவர் போவார். ஒவ்வொரு நாளும் வழியில பார்த்துப்போம். 2005_ம் வருஷம் திடீர்னு ஒருநாள், ‘நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கிட்டு சேர்ந்து வாழலாம்’னு சொன்னார். எங்க வீட்ல சம்மதிக்கலை. அவங்க வீட்ல சம்மதிச்சாங்க. கூலி வேலைக்குப் போன அவர், பிற்பாடு ஒரு கம்பெனியில செக்யூரிட்டி வேலைக்குப் போனார். அடுத்தடுத்து மூணு குழந்தைங்களும் பொறந்தாங்க. மூத்தவ கலைவாணி, அடுத்தவ ஷாலினி, மூணாவதா மகன் உதயகுமார். அவருக்கு வருமானம் போதலைன்னு நான் சைக்கிளில் கேனைக் கட்டிக்கிட்டு டீ விற்கப் போவோன். ‘நம்ம தலையெழுத்துதான் இப்படி இருக்கு. நம்ம புள்ளைங்க தலையெழுத்தாவது நல்லா இருக்கணும்’னு சொல்வார். எங்க வாரிசுகளுக்கு சேர்த்து வைக்க சொத்து இல்லை. அதனால படிப்புதான் அவங்களோட சொத்து அப்படின்னு நினைச்சோம். வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி பக்கத்துலயே இருக்கற ஒரு தனியார் பள்ளிக்கூடத்துல மூணு புள்ளைங்களையும் சேர்த்தோம்..நான் தினமும் காலையில புள்ளைங்களுக்கு டிபனும் மதியம் சாப்பாடும் செஞ்சு, லஞ்ச் பேக்ல கட்டிக் கொடுத்துட்டு டீ கேனோட கிளம்பி வியாபாரத்துப் போவேன். அன்னிக்கு அப்படித்தான் வீட்டிலேருந்து டீ விக்க நான் கிளம்பிப் போன அரை மணி நேரத்துல எங்க பக்கத்து வீட்டு அக்கா போன் பண்ணாங்க. ‘நீ உடனே திரும்பி வீட்டுக்கு வா’ன்னு சொன்னாங்க. சைக்கிளை வேகமா மிதிச்சிக்கிட்டு வழக்கம்போல ரயில்வே தண்டவாளத்தை தாண்டி எங்க வீட்டுக்குப் போக பார்த்தேன். அங்கே இருந்த கூட்டத்தை விலக்கிப் பார்த்துட்டு, ‘கடவுளே’ன்னு கத்திக்கிட்டு மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டேன். என்னோட இதயமே ஒரு நொடி நின்னுப்போச்சு. ரயில்ல அடிபட்டு செத்துக் கிடந்தது என்னோட புருஷன்தான்!’’ என்று தேம்பிய நாராயணம்மாள், கண்ணீரை துடைத்துக்கொண்டுத் தொடர்ந்தார்....‘‘இதோ இப்ப நடந்த மாதிரி இருக்குது... அந்தத் துயரச் சம்பவம் 2017 டிசம்பர்ல நடந்தது. ஆறு வருஷம் ஆகப்போகுது. புருஷன் உடலை பார்த்து அழக்கூட என்னோட உடம்புல தெம்பு இல்லை. துவண்டு விழுந்துக் கிடந்தேன். வாழ்க்கையை எப்படி நடத்தப்போறோம்னு தெரியலை. ‘மூணு புள்ளைங்களையும் தனியார் பள்ளியில வேற சேர்த்துட்டோம். எப்படி, எங்க இருந்து மறுபடி புது வாழ்க்கையை துவங்கப்போறோம்?’னு தெரியலை. கண்ணைத் திறந்து பார்த்தா வாழ்க்கையே இருண்ட மாதிரி தெரிஞ்சது. அப்போ என்னோட மூணு புள்ளைங்களும் பள்ளிக்கூடம் வரலைன்னு தெரிஞ்சதும், பள்ளிக்கூடத்துலேருந்து போன் செஞ்சாங்க. விஷயம் தெரிஞ்சதும், பள்ளிக்கூடமே எங்க குடிசைக்குத் திரண்டு வந்து ஆறுதல் சொல்லுச்சு.‘கடவுளே... இவ்வளவு அன்பு வச்சிருக்கற பள்ளிக்கூடத்துல இனி எம்புள்ளைங்கள படிக்கவைக்க முடியாது’ன்னு கதறி அழுதேன். அப்போ அந்தப் பள்ளிக்கூடத்தோட தாளாளர் கிருஷ்ணன், ‘நீ கவலைப்படாதேம்மா. உன்னோட குழந்தைங்க பெரிய நிலைக்கு வருவாங்க. விளையும் பயிர் முளையிலே தெரியும். உன் பையனுக்கு மொத்த ஃபீஸையும் நாங்களே கட்டிக்குறோம். உங்க பொண்ணுங்களுக்கு உங்களால எவ்வளவு முடியுதோ, எப்ப முடியுதோ அப்பப்போ கட்டுங்க’ன்னு ஆறுதல் சொன்னார். அந்தக் கடவுளே நேர்ல வந்து சொன்ன மாதிரி இருந்தது!.தினசரி பால், சர்க்கரை, டீத்தூள், இஞ்சி, ஏலக்காய் வாங்க ஆயிரம் ரூபாய் தேவைப்படுதுங்க. ரெண்டு வேளையும் டீ வியாபாரத்துக்குப் போறதால, 1,500 ரூபாய்க்கு டீ விற்கும். டீ கப் வாங்கின செலவு போக கிடைக்கிற வருமானம் வாய்க்கும் வயித்துக்குமே சரியா இருக்கு. அதுல கொஞ்ச பணத்தை சேமிச்சுதான் பள்ளிக்கூடத்துல ஃபீஸ் கட்டுறேன்.இப்போ என் பெரிய பொண்ணு கலைவாணி ப்ளஸ் டூ படிக்குது, ஷாலினி பத்தாவது படிக்குது, பையன் உதயகுமார் எட்டாவது படிக்கிறான். அவர் இருந்தப்போ காலையில மட்டும் டீ விற்கப் போவேன். இப்போ வருமானம் போதாததால சாயங்காலமும் போறேன். என் புருஷனோட சட்டையைப் போட்டுக்கிட்டுதான் டீ வியாபாரத்துப் போவேன். அவரே பக்கத்துல இருந்து தைரியம் சொல்ற மாதிரி இருக்கும்!.‘பள்ளிக்கூடத்து பேனர்ல உன் பெரிய பொண்ணு கலைவாணி படம் போட்டிருக்கு’ன்னு சொன்னாங்க. போய்ப் பார்த்தேன். ரெண்டு பாடத்துல 100/100, ரெண்டு படத்துல 99/99, ரெண்டு படத்துல 97/97 ன்னு போட்டிருந்தது. அதைப் பார்த்துட்டு என்னோட கண்ணு ரெண்டும் கலங்கிடுச்சு. சைக்கிள் மிதிச்சி டீ வித்தக்காசு வீண்போகல. அந்த போட்டோவுக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு, ஓடிப்போய் அந்தப் பள்ளியோட தாளாளர் கால்ல விழப்போனேன். தடுத்து நிறுத்திட்டு, ‘என் கால்ல விழாதம்மா. உன் சைக்கிள் பெடலை காலையில, சாயங்காலம்னு மழை, வெயில் பார்க்காம மிதிச்சி, குஞ்சுகளை கோழி பாதுகாக்கிற மாதிரி பாதுகாக்கிறயே உன் கால்களைதாம்மா நாங்க தொட்டு வணங்கணும்’னு சொன்னார்.‘ஐயா... டீயாவது குடிங்க ஐயா’ன்னு ஒரு கப் பிடிச்சிக் கொடுத்தேன். இந்த ஏழையால வேற என்னத்தங்க அந்தத் தெய்வத்துக்குக் கொடுக்க முடியும்?’’ என்று குலுங்கி அழுத நாராயணம்மாள், ‘‘என்னோட உழைப்பு, கனவு வீண் போகலைங்க. தினமும் டீ விக்க போறப்ப இந்தப் பேனரை பார்த்துட்டுப் போவேன். என்னோட மகள் எனக்கு வாங்கித் தந்தப் பெருமையை நினைச்சு மனசு ஐஸ் கட்டியா உருகிறதால, எவ்வளவு கடுமையான வெயில்லேயும் எனக்குக் களைப்பே தெரியறதில்லைங்க’’ என்றார் தாய்மைக்கே உரிய குணத்தோடு!-அன்பு வேலாயுதம்