‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பது சான்றோர் வாக்கு. ‘கூப்பிட்டக் குரலுக்குத் தன்னால் ஓடிவர முடியாது என்ற காரணத்தால்தான், இறைவன் தன்னுடைய பிம்பமாகத் தாயைப் படைத்தான்’ என்று சொல்வார்கள்.ஒவ்வொரு குழந்தைக்கும் எழுத்தறிவித்த இறைவனாகத் தந்தை இருக்கிறார். இதைத்தான் ஔவையார் தம்முடைய நீதி நூல்களில் ஒன்றான ‘கொன்றை வேந்தன்’_ல் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.இப்படித் தினம் தினம் தெய்வங்களாகக் கொண்டாடப்பட வேண்டிய பெற்றவர்களை ‘அன்னையர் தினம்’, ‘தந்தையர் தினம்’ என்று தினம் வைத்துக்கொண்டாடும் அவலநிலைதான் இன்று உள்ளது. இரண்டாவது குழந்தைப் பருவமான முதுமைப் பருவத்தில், பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு, இல்லங்களை இல்லாமல் ஆக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவருவது வேதனைக்குரியது.மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசைப்படுத்தும் நாம், இன்றைய தலைமுறையினர் மாதாவிற்கும் பிதாவிற்கும் உரிய மரியாதையைத் தருகிறார்களா என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.பெண்கள் ஒரு தாயாக, சகோதரியாக, தாரமாக, சிநேகிதியாக, இல்லத்தில் உள்ளவர்களை பக்குவப்படுத்தும் பாட்டியாக, வழிநடத்திச் செல்லும் ஆசானாக இப்படி எத்தனையோ பாத்திரங்களை வகித்தாலும் ‘அன்னை’ என்ற பாத்திரமே மிக உன்னதமான பாத்திரமாகும். எல்லா உறவுகளையும் ஒன்றிணைத்து தன்னலம் கருதாது வாழும் பெண் தெய்வங்களே அன்னையர்கள்!அந்த ஒருநாள்மட்டும் போதுமா?.பாலூட்டி, சீராட்டி, வளர்த்த அன்னைக்கும் அனைத்தையும் கற்றுக்கொடுத்து ஆசானாகத் திகழ்ந்த தந்தைக்கும் நன்றித் தெரிவிக்கிறோம் என்ற பெயரில், ‘அன்னையர் தினம்’, ‘தந்தையர் தினம்’ என்று நாம் கொண்டாடினால் மட்டும் போதுமா? இப்படி ஒருநாள் மட்டும் பெற்றோருக்கு வாழ்த்துச் சொல்லி, கேக் வெட்டி, சிறப்புப் பரிசுகள் வாங்கிக்கொடுத்து, அவர்களோடு செல்ஃபி எடுத்து மகிழ்வது, வெளியில் செல்வது போன்றவையெல்லாம் செய்தால் மட்டும் போதுமா? சமூக வலைதளங்களில் பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்தால் மட்டும் போதுமா?நாம் பிறந்ததிலிருந்து, வளர்ந்து ஆளாவது வரை, தங்களை மறந்து, தங்களின் நலன்களை மறந்து, ஒவ்வொரு நிமிடமும் பம்பரமாகச் சுற்றிச் சுழன்ற பெற்றோரின் தேவைகளைப் பற்றி சிறிதாவது நாம் எண்ணிப் பார்த்திருக்கிறோமா? ராப்பகலாய் நம்மைப் பற்றியே சிந்தித்த அவர்களின் உடல்நலனில் நாம் அக்கறை செலுத்தியிருக்கிறோமா? குழந்தைப் பருவத்தில் நம்மைக் கொண்டாடிய பெற்றோரின் முதுமைப் பருவத்தில் அவர்களுக்குத் தேவையான அன்பையும் அக்கறையையும் பரிவையும் பாதுகாப்பையும் முழுமையாகக் கொடுக்கிறோமா? என்றால், ‘இல்லை’ என்பதே பெரும்பாலான பிள்ளைகளின் பதிலாக உள்ளது.பெற்றோரை பாதுகாப்போம்!முதியோரை குழந்தைகளுக்கு நிகராகச் சொல்வார்கள். குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுவது போல முதுமைப் பருவமும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று! ஆனால், நகர வாழ்க்கையும் ஆடம்பர மோகமும் மானிட குலத்தின் அடிப்படைத் தர்மங்களையே ஆட்டிப் படைக்கின்ற இத்தருணத்தில், வேகமான வாழ்க்கை முறை மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக வயதான பெற்றோரை பிள்ளைகள் கைவிடும் சோக சம்பவங்கள் சமீப காலங்களில் உலகின் பல பாகங்களிலும் அரங்கேறிய வண்ணமேயுள்ளன.பெற்றவர்களின் அபிலாஷைகளை நசித்தெறிந்து, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடும் கொடுமை ஒருபுறமிருக்க, பெரும்பாலான குடும்பங்களில் வயதான பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.காரணங்கள் ஏராளம் உண்டு!கூட்டுக்குடும்ப முறைகள் சிதைந்து விட்டதால், அதிகமான பிள்ளைகளை வளர்க்க முடியாது என்று எண்ணிய பெற்றோர், தொடக்கத்தில், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்றும், பின்னர் ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்ற கொள்கையைக் கடைபிடித்து வந்த காரணத்தால் பெரும்பாலான குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கைக் குறைந்தது. இருக்கும் ஒரே பிள்ளையும் படிப்பதற்காகவோ வேலைக்கோ வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, பெற்றோர் தனிமைக்குத் தள்ளப்படுகின்றனர்..இதில் பிள்ளைகளை மட்டுமே குறை சொல்வதிலும் பயனில்லை. ‘உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லிக் குற்றமில்லை, காலம் செய்த கோலமடி’ என்ற பாடல்தான் இங்கே நினைவுக்கு வருகிறது. ஆனால், உள்ளூரிலேயே இருந்துகொண்டு பெற்றோரைக் கவனிக்காமல் விட்டுவிடும் பிள்ளைகளும் இருக்கின்றனர். பணம் அனுப்பினால் மட்டும் போதும் என்று நினைக்கும் பிள்ளைகளும் உள்ளனர்.சிறு வயதில் இதைப் போலவே, ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு, பணத்தை மட்டும் பெற்றோர் அனுப்பியிருந்தால், இன்று நம் நிலைமை என்னவாகியிருக்கும் என்பதைப் பிள்ளைகள் யோசிப்பதேயில்லை. இதற்கு சிறுவயதிலிருந்தே பெற்றவர்களின் அருமையைத் தெரிந்துகொள்ளும் வகையில் பிள்ளைகளை வளர்க்கவேண்டும்.ஒரே பிள்ளை என்று செல்லம் கொடுத்து வளர்ப்பதால் பிள்ளைகளுக்குப் பெற்றோரின் கஷ்டங்கள் புரிவதேயில்லை. ஆகவே சிறு வயதிலிருந்தே பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்பது போன்ற அறச் சிந்தனைகளோடு பிள்ளைகளை வளர்ப்பது அவசியத்திலும் அவசியம்!கூட்டுக்குடும்ப முறைகள் பெரும்பாலும் சிதைந்த காரணத்தால், மூத்த தலைமுறையினரின் பெருமைகளை அறியாமல், ‘தாத்தா’, ‘பாட்டி’ என்ற உறவு முறைகளையெல்லாம், ‘பெருசு’ என்று அழைக்கும் நிலைமைக்கு வந்து விட்டனர் நம் இளம் தலைமுறையினர். தனக்கும் ஒரு நாள் முதுமை வரும் என்பதறியாத இளமையின் ஏளனப் பேச்சு அதிகரித்துள்ளது.‘பழுத்தோலையைப் பார்த்துச் சிரிச்சதாம் குருத்தோலை’ என்ற பழமொழியை அறியாதவர்கள் இவர்கள். ‘முதுமைக்கு மரியாதை’ செலுத்தத் தெரியாத இளைய மற்றும் நடுத்தர வயதினரும், ஒரு குடும்பத்தில் மூத்த அங்கத்தினர் இருப்பது ஒரு இல்லத்துக்கு எத்தனை அனுபவ ஞான வெளிச்சத்தை வழங்குகிறது என்பதை உணர வேண்டியது காலத்தின் கட்டாயம்!முதுமைக்கு மரியாதை செய்வோம்!‘முதுமை’ என்பது தடுக்கமுடியாத ஒன்று என்பதுடன் இரண்டாவது குழந்தைப் பருவமாகக் கருதப்படுகிறது. வயது முதிர்ந்த பெற்றோரை அன்புடனும் அக்கறையுடனும் காப்பாற்றும் பொறுப்புகள் பிள்ளைகளுக்கு உண்டு. ஆனால், சமீபகாலமாக, வயதான பெற்றோரின் பொறுப்பை ஏற்கத் தயங்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த அவல நிலை மாற வேண்டும்..‘ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே’ என்று தங்களின் கடமைகளைச் சிறப்பாகச் செய்த நம் பெற்றோரைப் போற்றவும் கொண்டாடவும் எந்த ஒரு சிறப்பு நாளும் தேவையில்லை. ஒவ்வொரு நாளும் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்களே! அன்பு, கருணை, பாசம், தியாகம் என அனைத்தையும், நமக்கு முழு மனதோடு தந்த அன்னையின் அன்பையும் தந்தையின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் தினம் தினம் நினைவுகூர்ந்து பாராட்டி வணங்கி மகிழ்வோம்.அதோடு மட்டுமல்லாமல், வயதான காலத்தில் அவர்களுக்குத் தேவையான அன்பினையும் அரவணைப்பையும் பாதுகாப்பையும் கொடுப்போம். இதுதான் சுயநலமில்லாமல் நம் மேல் அன்பைச் சொறிந்த அவர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறாகும். பெற்றோரைப் போற்றுவோம். முதுமைக்கு மரியாதை செய்வோம்! முதுமையில் இனிமை காண பெற்றோருக்கான 10 கட்டளைகள்!அடுத்த இதழில்...