`எங்க ஏரியா உள்ள வராதே!' என விநாயகர் சதுர்த்தியை முன்வைத்து பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்துக் கபடி ஆடத் தொடங்கியிருக்கிறது, இந்து முன்னணி. காரணம், பா.ஜ.க.வும் இந்து முன்னணியைப்போல ஊர்தோறும் விநாயகர் சிலைகளை வைக்க உத்தரவிட்டதுதான். ``பா.ஜ.க விநாயகர் சிலையை வைப்பதால் என்ன சிக்கல்?" என்று இந்து முன்னணியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.டி.இளங்கோவனிடம் கேட்டோம். ‘‘திலகர் காலத்தில் பம்பாயில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. அதைப் பார்த்து தமிழகத்தில் முதன்முதலில் மெரினா கடற்கரையில் விநாயகரை வைத்து வழிபட்டவர், சுப்ரமணிய பாரதியார். பாரதியாருக்குப் பிறகு வந்தவர்கள், இதைத்தொடர்ந்து செய்ய முன்வரவில்லை. இதன் விளைவாக, திராவிட இயக்கங்களின் கையில் தமிழகம் சிக்கிக்கொண்டது. இந்நிலையில், திராவிட கொள்கையில் இருந்து தமிழக இந்துக்களைக் காப்பாற்ற இந்து முன்னணி உருவானது. அதன் ஒரு செயல்திட்டமாகவே 1983ம் ஆண்டு சென்னையில் முதல் விநாயகர் வைக்கப்பட்டு ஊர்வலமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வை இந்து முன்னணி தொடங்கி 40 வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வில் சாதி பேதமில்லாமல் மக்கள் கலந்துகொள்கின்றனர். இந்தச் சூழலில் திடீர் குழப்பமாக, `பா.ஜ.க சார்பாக தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்கப்படும்' என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதை அண்ணாமலை நேரடியாக செய்யச் சொன்னாரா என்று தெரியவில்லை. இது பா.ஜ.க.வின் சில நிர்வாகிகள் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றே எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதைப் பற்றியே பேசாமல் அண்ணாமலை மௌனமாக இருப்பது எங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. இந்து முன்னணி நடத்தி வந்த விநாயகர் சதுர்த்தி விழாக்களில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., வி.சி.க என்று கட்சி பேதமில்லாமல் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால், பா.ஜ.க நேரடியாக சிலை வைக்கத் தொடங்கினால், ஒரு கட்சி சார்ந்த நிகழ்ச்சியாக இது மாறிவிடும் அபாயம் உள்ளது. அப்படி மாறினால், விநாயகர் சதுர்த்திக்கு ஆதரவு கொடுத்து வந்த தி.மு.க., வி.சி.க நிர்வாகிகளும் பின்வாங்கிவிடுவார்கள். இத்தனை காலமாக கஷ்டப்பட்டு சேர்த்த இந்து ஒற்றுமை என்பது ஒரு நொடியில் சிதறிவிடும். கடந்த பல ஆண்டுகாலமாக விநாயகர் சதுர்த்தி விழாவை நிறுத்த வேண்டும் என்று தி.மு.க.வும், தி.க.வும் பல திட்டங்களைப் போட்டு வந்தனர். விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுப்பு, ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு என்றெல்லாம் தற்போது தகவல்களை கசியவிடுகின்றனர். இதையெல்லாம் கடந்து இப்போது மீண்டும் விமர்சையாக விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட இந்து முன்னணி தயாராகி வருகிறது. இதற்குள் பா.ஜ.க நுழைவது தி.மு.க.வுக்குத்தான் சாதகமாக அமையும். மேலும் பா.ஜ.க.வினர் சிலை வைத்தால், அதையும் இந்து அமைப்பின் கணக்கில் காட்டிவிட்டு, ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் சிலை வைக்கும் இடங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல, விநாயகர் சதுர்த்தியை பொதுமக்களின் நிதியுதவி இல்லாமல் நடத்த இயலாது. தங்களின் சொந்த விருப்பத்தின் பெயரில் நிதியுதவி அளிக்கும்நிலையில், நாங்கள் மிரட்டி பணம் வாங்குவதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் சிலர் முன்வைக்கின்றனர். அரசியல் கட்சிகள் விநாயகர் சதுர்த்திவிழாவில் நுழையும் பட்சத்தில், அதில் அரசியல் செய்யப்பட்டு, பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வேலைகள் நடைபெற வாய்ப்புள்ளது. பிறகு, விநாயகர் சதுர்த்தி விழாவையே படிப்படியாக கொஞ்சமாக நீர்த்துப்போகச் செய்யும். எனவே, வழக்கம்போல இந்த ஆண்டும் இந்து முன்னணி சார்பில் மட்டுமே விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை வைக்க வேண்டும். அதில், இந்துக்கள் என்ற முறையில் பா.ஜ.க நிர்வாகிகள் கலந்துகொள்ளலாம். ஆனால், தனியாக சிலை வைப்பதாக வெளியான செய்தியையும் ஏற்க முடியாது. இதுகுறித்து, அக்கட்சியின் ஆன்மிகப் பிரிவின் தலைவர் நாச்சியப்பனிடம் பேசி இந்தக் குழப்பத்தை அண்ணாமலை தீர்க்க வேண்டும்" என்றார் விரிவாக. இந்து முன்னணியின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க ஆன்மிகப் பிரிவின் தலைவர் நாச்சியப்பனிடம் விளக்கம் கேட்டோம். ‘‘தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளை பா.ஜ.க.வினர் வைக்கப்போவதாக வெளியான செய்தி தவறு. பா.ஜ.க நிர்வாகிகள் வழக்கம்போல கட்சி சார்பில்லாமல், இந்து முன்னணி நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொள்வார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஆன்மிக பிரிவின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது. அதனால், மேற்கொண்டு குழப்பம் தேவையில்லை" என்றார். விநாயகர் சதுர்த்திக்குள் அடுத்த வில்லங்கம் வராமல் இருந்தால் சரி! - அபிநவ்