வீ.மாணிக்கவாசகம் விசாரணை என்றபெயரில் யாரையும் அச்சுறுத்தக்கூடாது, துன்புறுத்தக்கூடாது என்கிறது சட்டம். ஆனால், நீதித்துறை சொல்வதை காவல்துறை மதிப்பதே இல்லை என்பதற்கு உதாணமாகப் பல சம்பவங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.அந்தவரிசையில் நகைக்கடை வியாபாரி ஒருவரின் தற்கொலையும் சேர்ந்து, காக்கிகள் விசாரணையின் விபரீதத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது..தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடித்தெருவில் நகைக்கடை வைத்திருந்தவர், ராஜசேகரன். இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளராகவும் இருந்திருக்கிறார். இவரது கடைக்கு கடந்த 22ம் தேதி திருச்சி கே.கே.நகர காவல்நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் உமாசங்கரி தலைமையிலான போலீஸ் டீம், வந்திருக்கிறது. “ கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் நீங்கள் ஒருவரிடம் திருட்டு நகை வாங்கியிருக்கிறீர்கள். அதை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று மிரட்டும் குரலில் கேட்டிருக்கிறார், உமாசங்கரி.அதையடுத்து நடந்த தொடர் விசாரணை, கைது, உருட்டல் மிரட்டல்களால் ஏற்பட்ட மன உளைச்சலும் பயமும் சேர்ந்துகொள்ள ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார் ராஜசேகரன்.இதுகுறித்து நம்மிடம் பேசிய பட்டுக்கோட்டை சி.பி.ஐ நகரச் செயலாளரும், ராஜசேகரனின் சகோதரி மகனுமான விஜயன், “எங்க மாமாவோட கடைக்கு வந்த எஸ்.ஐ. உமாசங்கரி, திருட்டுநகையை வாங்கியிருக்கீங்க. அது எங்கேன்னு கேட்டு மிரட்டி, அவரை வேன்ல ஏத்திகிட்டுப் போய்ட்டாங்க. நாங்கபோய் எவ்வளவோ கெஞ்சியும் மாமாவை விடலை. மறுநாள், வழக்கறிஞரை அழைச்சிக்கிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போனோம்.அங்கே போனதும், “இவரு முப்பத்தஞ்சு பவுன் திருட்டுநகையை வாங்கியிருக்காரு. அதைத் திருப்பித்தரச் சொல்லுங்க!”ன்னாங்க.எங்க மாமாகிட்ட கேட்டப்ப ‘அவங்க அழைச்சிக்கிட்டு வந்தவங்க நம்ம கடையில அஞ்சு வருசமா நகை வாங்கிகிட்டு இருக்காங்க. அவங்க வீட்டு கல்யாணத்துக்கு தாலி கூட நான் தான் செஞ்சி குடுத்தேன். இவங்க சொல்ற நாள்ல, அவங்க விற்கக் கொண்டுவந்த அஞ்சுபவுன் நகையை தெரிஞ்சவங்கதானேன்னு நான் வாங்கினேன். அது திருட்டுநகைன்னு எனக்கு சத்தியமாத் தெரியாது’ன்னு சொன்னாரு..அதுக்கப்புறம் உமாசங்கரி மேடம் பேரம் பேச ஆரம்பிச்சாங்க. பதினஞ்சுல தொடங்கி கடைசில ஆறு பவுன்ல வந்து நின்னாங்க. அதுவும் 91.6 டச்ல வேணும்னாங்க. உடனே , எங்க மாமி போட்டிருந்த அஞ்சு பவுன் செயினை குடுத்தோம். போதாது, தோட்டையும் கழட்டிக் குடுன்னு வாங்கி அதையும் அவங்க வச்சிருந்த தராசுல வெயிட் போட்டு பாத்துட்டு, இன்னும் ஒரு கிராம் குறையுதுன்னு சொல்லிட்டு, எழுதி வாங்கிட்டு அனுப்பினாங்க.இதோட விட்டுதுன்னு நினைச்சு நாங்க கௌம்புனப்போ, எங்க மாமாவ மட்டும் தனியாக் கூப்பிட்டு மிரட்டுறாப்புல எதோ சொன்னாங்க. அப்புறம், வீட்டுக்கு வர்ற வழியில எஸ்.ஐ. என்ன சொன்னாங்கன்னு கேட்டேன். ‘இதோ பாரு, நீ இப்போ ஆறு பவுன் குடுத்துருக்க. இன்னும் ஒன்பது பவுன் நகை கொண்டுவந்து குடுக்கணும். தர்றவரைக்கு நான் உனக்கு போன் பண்ணிகிட்டே இருப்பேன்!’னு மிரட்டினதா சொன்னாரு. வக்கீல், ‘மேற்கொண்டு நகை எதுவும் தரவேணாம், மீறிக்கேட்டா, என்கிட்டே சொல்லுங்க’ன்னு சொன்னார்.அப்புறம், நான் எங்க மாமாவையும், மாமியையும் அவங்க வீட்டுல விட்டுட்டு வந்துட்டேன். 24 ந்தேதி எங்க மாமி, அவங்க வீட்டுல இருக்க பயமா இருக்குனு சொன்னாங்க உடனே நான் எங்க வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வந்துட்டேன். அதுக்கப்புறம் என்ன நடந்துச்சின்னு தெரியல. எங்க மாமா கடந்த 25 ந்தேதி ரயில்ல அடிபட்டு இறந்துட்டாங்க.முப்பது நாப்பது வருசமா நகைக்கடை வச்சிருக்காரு. இந்த சம்பவத்தால மானமே போய்ருச்சி. இதுல இன்னும் நகையை கேக்குறாங்களே, எங்கே போறதுங்கற மன உளைச்சல்ல தான் அவர் இப்படி முடிவெடுத்திருக்கணும்!” என்றார்.ராஜசேகரனின் மனைவி ராஜலெட்சுமி. “ஸ்டேஷன்ல வெச்சு என்னையும் என் புருசனையும் ரொம்ப மிரட்டுனாங்க. கேவலமா பேசுனாங்க. என்னன்னவோ பேப்பர்கள்ல கையெழுத்து வாங்கினாங்க. நைட் பூரா தூங்க விடாம மிரட்டுனாங்க. மறுநா எங்களை அனுப்பறப்போ. .‘உம் புருசன்கிட்ட சேதி சொல்லியிருக்கேன். அதுபடி நடந்துக்கலன்னா, இந்த மாதிரி நிறைய கேஸ் பெண்டிங் கெடக்கு. அவ்வளவு கேஸையும் உம்மேலயும், உம் புருசன் மேலயும் போட்டு ரிமாண்ட் பண்ணிருவேன். அதோட நீங்க ஜெயிலுக்குத்தான் போகனும்னு சொல்லி மிரட்டுனாங்க. அதுக்கு பயந்துகிட்டுதான் நான் என் கணவரோட அக்கா மகன் வீட்டுக்கு போனேன். அன்னைக்கி நைட் எம்பொண்ணுக்கு போன் பண்ணி எங்கம்மா இருக்கே. எங்க இருந்தாலும் தைரியமா இருக்கனும்னு பேசிருக்காரு. அதுக்கப்புறம்தான் பக்கத்துல இருக்குற செட்டியக்காடுங்கிற ஊருக்கு போய் அவரோட செல்போனையும், எம் பொண்ணோட நம்பரை எழுதி பைக் கவர்ல வச்சிட்டு ரயில்ல விழுந்துருக்காரு. எம் புருசனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இப்படி திருட்டு நகையை வாங்கி சம்பாரிச்சிருந்தா நாங்க வாடகை வீட்டுல இருந்துருப்பமா. அவங்க கேட்ட ஒன்பது பவுன எப்படி குடுக்குறதுன்னு பயந்துதான் என் வீட்டுக்காரரு இப்படி செத்துருக்காரு. எம்புருசனோட சாவுக்கு அந்த உமாசங்கரிதான் காரணம். இனிமே எனக்கும் எம்பொண்ணுக்கும் யாரு இருக்கா?” எனக் கதறினார்.ராஜசேகரன் கடையில் வேலை செய்யும் அமுதா, “ அய்யா இறந்த அன்னிக்கு சாயந்தரம் எனக்கு போன் பண்ணினாங்க எஸ்.ஐ.மேடம். உங்க ஓனர் போனை ஆஃப் பண்ணிவைச்சிருக்கான். நீ உடனே அவன் வீட்டுக்குப்போய் பேசச்சொல்லுடின்னு...அவன் எங்கேயும் தப்பிக்க முடியாது!”ன்னு மிரட்டினாங்க” என்றார்.இதுகுறித்து நம்மிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சதா சிவக்குமார் “இந்த விஷயத்தைப் பொருத்தவரை உமாசங்கரிங்கிற எஸ்.ஐ யோட பண வெறி தான் ராஜசேகரனோட உயிரைப் பறிச்சிருக்கு. இதை எங்க கட்சி மூலமா முதல்வர் கவனத்துக்குக் கொண்டுபோவேன்!” என்றார்.எஸ்.ஐ உமாசங்கரியை தொடர்புகொண்டு பேசினோம். “சார் நான் பேசுற மனநிலையில இல்லை. அதுமாதிரி எல்லாம் மிரட்டல!” என்று மட்டும் சொல்லி போனை கட் செய்துவிட்டார். ராஜசேகரன் இறந்ததுமே கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசு மருத்துவமனையில் குவிந்து,உமாசங்கரி மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என போராட்டத்தில் குதிக்க, திருச்சி போலீஸ் கமிஷனர் சத்யபிரபா, உமாசங்கரியை ஆயுதப்படைக்கு மாற்றியிருக்கிறேன். விரைவில் விசாரணை நடைபெறும். என உத்தரவாதம் கொடுத்த பிறகே ராஜசேகரனின் உடலைப் பெற்றிருக்கிறார்கள்.காக்கும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதை காக்கிகள் எப்போதுதான் உணர்வார்களோ!