மழைக்காலம் நெருங்குவதற்கு அறிகுறியாக அவ்வப்போது இடி, மின்னல் வானைப் பிளக்கிறது. தமிழக அரசியல் வானிலையிலும் அதேபோன்ற மாற்றத்தை வகுக்கத் திட்டமிட்டுள்ளது, அமலாக்கத்துறை. `ஜனவரிக்குள் ஜெயில்... நோ பெயில்' என்ற முடிவில் சில அமைச்சர்களை டார்கெட் செய்து டெல்லி தலைமை திட்டம் வகுக்க, அதனை முறியடிக்க அறிவாலயமும் வரிந்துகட்டுவதுதான் தமிழக அரசியலின் சூடான கலவர நிலவரம்! அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து சில மூத்த அமைச்சர்களை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கிறது, அமலாக்கத்துறை. `அடுத்து யாரிடம் ரெய்டு நடத்துவார்கள்?' என்ற பயத்தில் தி.மு.க. அமைச்சர்களில் பலர் தவிப்பில் உள்ளனர். இதனை உணர்ந்த முதல்வர் ஸ்டாலினும், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கோடிட்டுக் காட்டினார். அவர் பேசும்போது, `தமிழ்நாட்டில் பா.ஜ.க. எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்துவருவதால் நம்மை நோக்கிப் பாய்வார்கள். பா.ஜ.க. எதையும் செய்யத் தயாராக இருக்கிறது. ஆகவே, நீங்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என அறிவுறுத்தினார். டார்கெட் ஜனவரி! ஆனால், முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு சில அமைச்சர்கள் முக்கியத்துவம் தருவதுபோல தெரியவில்லை. ஒரு சில அமைச்சர்கள் தவறு செய்யப் பயந்து, சில விஷயங்களை தவிர்த்துவிட்டாலும், அமைச்சர்களின் உதவியாளர்கள் செய்யும் தவறுகளால் ஏராளமான முறைகேடுகள் அரங்கேறுகின்றன. இவற்றுக்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் அமைச்சர்கள்தான் உள்ளனர். இதனைக் கண்கொத்திப் பாம்பாக கவனித்து வரும் அமலாக்கத்துறை, துறைவாரியாக நடைபெற்றுவரும் முறைகேடுகளைத் தனி ஃபைலாக தயார் செய்து வைத்துள்ளது. இதுபற்றி டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் நம்மிடம் விரிவாக பேசினார்கள். “அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை கடும் சவால்களை சந்தித்துவிட்டது. அதனால்தான், அடுத்தடுத்து தி.மு.க. அமைச்சர்கள் மீது ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, நடைமுறைகளைக் கடைபிடிப்பதில் காட்ட வேண்டிய நுணுக்கத்தை சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதத்தை டார்கெட்டாக வைத்துக் கொண்டு, சில அமைச்சர்களை சிறைக்குத் தள்ளுவதிலும் தீவிரம் காட்டி வருகிறது. பொன்முடியை பதறவைத்த நீதிமன்றம்! அதில், `அடுத்த டார்கெட் பட்டியலில் அமைச்சர் பொன்முடி இருக்கிறார்' என்கிறார்கள். அமைச்சர் பொன்முடி, அவரின் மகன் கௌதம சிகாமணியின் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் ஜூலை 17-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் 10 லட்ச ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு கரன்ஸிகள், 70 லட்ச ரூபாய் இந்தியப் பணம் என மொத்தம் 80 லட்ச ரூபாயை அமலாக்கத்துறை கைப்பற்றியது. கூடவே, டிஜிட்டல் ஆவணங்கள், சில வெளிநாட்டு முதலீடுகள் ஆகியவற்றையும் அமலாக்கத்துறை கைப்பற்றியது. இதுதொடர்பாக, இரண்டு நாட்கள் பொன்முடி மற்றும் அவரின் மகனிடம் அமலாக்கத்துறை விசாரணையை நடத்தியது. தொடர்ந்து பொன்முடி, கௌதம சிகாமணி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் பணியிலும் அமலாக்கத்துறை தீவிரம் காட்டிவருகிறது. இதுபோதாதென்று, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அந்த வழக்கை தானாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர் நீதிமன்றம். இது பொன்முடி தரப்புக்குக் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்குகளை எல்லாம் அடுத்த 3 முதல் 4 மாதத்துக்குள் முடித்துவிட வேண்டுமெனவும் அமலாக்கத்துறைக்கு மத்திய உள்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்” என விவரித்தனர். தொடர்ந்து, அடுத்து நடக்கப்போகும் காட்சிகளைப் பட்டியலிட்டனர்.. அமைச்சர் மூர்த்திக்கு தனி ஃபைல் ``அமலாக்கத்துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி. பத்திரப் பதிவுத் துறையில் ஏராளமான முறைகேடுகள் நடந்து கொண்டிருப்பதாக உளவுத்துறையும் முதல்வர் ஸ்டாலினுக்கு அடிக்கடி ரிப்போர்ட் அனுப்பி வருகிறது. அமைச்சர் மூர்த்தியின் கையை மீறியும் சில விஷயங்களை அவரது தரப்பினர் நடத்துவதாகக் கூறப்படுகிறது. தினம்தோறும் ஒவ்வொரு பத்திரப் பதிவுக்கும் ஒரு குறிப்பிட்ட கமிஷன் தொகையை அந்தந்த மாவட்ட பத்திரப்பதிவு துறை அலுவலகம் மூலம் வசூல் செய்யப்படுகிறது. அதேபோல, சராசரியாக ஒரு மாதத்துக்கு ஆயிரம் முதல் இரண்டு ஆயிரம் ஏக்கர் நிலங்கள் லே-அவுட்டுகள் போடப்படுகின்றன. இவ்வாறு லே-அவுட் போடப்படும்போது, நிர்ணய தொகை (Fixation Amount) என்ற பெயரில் தனி வசூல் நடக்கிறது. இதில், புறநகர் பகுதிகளில் போடப்படும் லே-அவுட்டுக்கு ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாயும் நகர்ப்புறங்களில் போடப்படும் லே-அவுட்டுக்கு ஏக்கருக்கு தலா 3 லட்சம் ரூபாயும் வசூல் செய்யப்படுவதாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் தரப்பில் குற்றம்சாட்டுகிறார்கள். மேலும், ஃபிக்சேஷன் தொகை எனப்படும் இந்த லஞ்சம் இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத நடைமுறை என்பதுதான் அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. சாபம்விட்ட தி.மு.க நிர்வாகி! இப்படி தினந்தோறும் வசூலாகும் பல கோடி ரூபாய்கள், சென்னை சட்டமன்ற விடுதியில் உள்ள ஓர் அறைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு மெஷின் மூலம் எண்ணப்படுகிறது. சமீபத்தில் தென்மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம் 14 ஏக்கர் நிலம் லே-அவுட் தொடர்பான பரிவர்த்தனைக்காக 28 லட்ச ரூபாய் பணத்தைக் கேட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக, மேலிடத்தில் அந்த நிர்வாகி முறையிட்டபோது, `10 பைசாவைக்கூட குறைக்க முடியாது. எங்கு வேண்டுமானாலும் புகார் செய்து கொள்' என எடுத்தெறிந்து பேசி அனுப்பியுள்ளனர். இதனால் நொந்துபோன அந்த நிர்வாகி, `எங்க தாத்தா காலத்தில் இருந்து கட்சியில் விசுவாசமாக இருந்து வருகிறோம். நீங்கள் எல்லாம் நல்லா இருப்பீங்களா?' என மண்ணைத் தூவி சாபம்விட்டபடியே அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதனை மோப்பம் பிடித்த அமலாக்கத்துறை, பத்திரப் பதிவுத்துறையில் நடக்கும் கோல்மால்களை தனி ஃபைலாக தயார் செய்து வைத்துள்ளது. அனிதாவை நெருங்கும் தீர்ப்பு! கடந்த 2001-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக 2020-ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணையை நடத்தியது. வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்து, அனிதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியது. அதுமட்டுமின்றி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 19-ம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. முக்கிய ஆவணங்கள் இருப்பதால் இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி அமலாக்கத்துறை, தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை ஆகஸ்ட் 23-ம் தேதியன்று, தூத்துக்குடி நீதிமன்றத்தில் நீதிபதி செல்வம் விசாரிக்க உள்ளார். இந்த வழக்கு 80 சதவிகிதம் முடிந்துவிட்டதாக முன்னதாக லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. விரைவில் விசாரணை முடிந்து, ஜனவரி மாதத்துக்குள் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்புள்ளது. ஒரேநேரத்தில் அமைச்சர்கள் பொன்முடி, மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன் என அமலாக்கத்துறையின் பிடி இறுகும்போது தி.மு.க.வுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை சரியவைப்பதுதான் டெல்லியின் திட்டம்'' என விவரித்து முடித்தனர்..பா.ஜ.க போடும் கணக்கு இதுதான்! தி.மு.க.வை குறிவைத்து அமாலக்கத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். `` பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை ஸ்டாலின் செவ்வனே செய்து முடித்திருக்கிறார். மாநிலத்தைத் தாண்டி தேசிய அளவில் ஸ்டாலின் மேற்கொள்ளும் அரசியல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவற்றை கொண்டு ரெய்டு நடத்தி, தி.மு.க.வுக்கு நெருக்கடியை ஏற்படுத்த நினைக்கிறது. இதன்மூலம், மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்திவிடலாம் எனக் கணக்கு போடுகின்றனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதை மக்கள் உணர்ந்து வைத்துள்ளனர்'' என்கிறார். பண மூட்டைகளுக்கு என்ன பதில்? ``எதிர்க்கட்சிகளை அணிதிரட்டுவதால்தான் தி.மு.க மீது அமலாக்கத்துறையை ஏவுவதாக கூறுகிறார்களே?'' என பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் கேட்டோம். ``எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பார்த்து, நாங்கள் பயந்துவிட்டோம் என சொல்வதைப் பார்த்து அரசியல் தெரியாதவர்களே சிரிப்பார்கள். அதுவும், `ஸ்டாலினை பார்த்து பா.ஜ.க. பயந்துவிட்டது' எனக் கூறுவது நகைப்பின் உச்சகட்டம். ஒரு மாநிலத்தைக்கூட தாண்டாத ஒரு கட்சியைப் பார்த்து, அனைத்து மாநிலங்களிலும் வலுவாக இருக்கும் கட்சி பயந்துவிட்டது என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரிடம் நடத்திய ரெய்டில், கட்டுக்கட்டாக பணமும் மூட்டை மூட்டையாக ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தவறு செய்துவிட்டு, அதில் இருந்து தப்பிப்பதற்காக இதுபோன்ற பொய்யை பரப்புகிறார்கள்'' என்கிறார். `விடாது கறுப்பு' என்பதுபோல, தி.மு.க.வை சுற்றிவரும் அமலாக்கத்துறையும் தனது பிடியை அவ்வளவு எளிதில் விடுவதுபோல தெரியவில்லை. ஜனவரியில் ஈ.டி.யின் பிடி இறுகினால், `அரசியல்ரீதியாக எந்தக் கட்சிக்கு லாபம்?' என்ற பதிலும், தேர்தல் முடிவில் தெரிந்துவிடும். பார்ப்போம்! - பாபுபடங்கள்: ம.செந்தில்நாதன்