`பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' எனக் கூறிக் கொண்டாலும் ஹைட்ரோ கார்பன், சமையல் எரிவாயு, நிலக்கரி எனத் தொடர்ந்து பாதுகாப்பில்லாத சூழலில்தான் டெல்டா இருக்கிறது. அதில், லேட்டஸ்ட் வரவு தாது மணல்.நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாசன். அ.தி.மு.க பிரமுகரான இவர், தாதுமணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்ததால் கூலிப்படையின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி கோமா நிலைக்குச் சென்று உயிர் பிழைத்தவர்.அவரிடம் பேசினோம். “ஏற்கெனவே வேதாரண்யம் தாலுகாவில் தகட்டூர் வருவாய் சரகத்தில் தாணிக்கோட்டகம், தகட்டூர்-பெத்தாச்சிக்காடு, வண்டுவாஞ்சேரி கிராமங்களிலும், கரியாப்பட்டினம் வருவாய் சரகத்தில் வடமழை-மணக்காடு, செட்டிப்புலம் கிராமங்களிலும் ஐம்பது ஏக்கர் பரப்பளவில் சிலிகான் மணல் எடுக்க மொத்தம் 11 நிறுவனங்கள் அனுமதி பெற்றிருந்தன.ஆனால், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆதரவுடன் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் உள்பட ஆயிரம் ஏக்கருக்கும் மேல் திருட்டுத்தனமாக தாதுமணலை அள்ளி பல கோடி ரூபாய்கள் லாபம் சம்பாதித்தன. இதில், தகட்டூர்-செட்டியக்காடு பகுதியில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக குடியிருந்து வந்த பட்டியலின மக்களை, சிலிகான் எடுக்க அனுமதி பெற்ற ஒரு நிறுவனம் மிரட்டி வெளியேற்றியது.இந்நிலையில், கடந்த 2013ம் வருடம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தாது மணல் எடுக்க தடைவிதித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டார். ஆனால், வேதாரண்யம் பகுதியில் மட்டும் அந்த உத்தரவை மதிக்காமல் தாதுமணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வந்தது. இதனை எதிர்த்து நான் புகார் அளிக்கப் போனதால்தான் கூலிப்படையினர் மூலம் தாக்குதலுக்கு உள்ளானேன். என் மீது பி.சி.ஆர். வழக்கெல்லாம் போட்டு மிரட்டினார்கள்'' எனக் குறிப்பிட்டவர், தற்போதைய நிலவரத்தை விவரித்தார்.`` 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் மணல் கொள்ளை நிற்கவில்லை. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநர் ஆகியோருக்கு புகார் அளித்த பின்னர் மாவட்ட எஸ்.பி. ஜவஹர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு 30 ஆண்டுகால தாது மணல் கொள்ளைக்கு முடிவு கட்டினார். இதனால், தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்தது.`அந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்காக அந்நிறுவனத்துக்காக தடையை தற்போது தளர்த்திவிட்டார்களோ?' எனத் தோன்றுகிறது. தாது மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்க பல மினரல்ஸ் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அது பரிசீலனையில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை- வடகாடு பகுதியில் தாது மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, `ஆந்திராவில் தாது மணலை எடுத்து அதனை லாரி மூலம் கொண்டுவந்து வேதாரண்யத்தில் அனுமதி பெறப்பட்டுள்ள பிளான்ட்கள் மூலம் சலித்து கனிமங்களை பிரித்தெடுக்கிறோம்' எனக் கூறி அரசை ஏமாற்றி, இங்கேயே மணலை திருடிவந்தனர்.இந்த தாது மணலை அலசிப் பிரிக்க காவிரி, முல்லையாற்று நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுப்பதால், விவசாயத்துக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு தவிக்க வேண்டியுள்ளது. `சிலிகான் தாது மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது' என்று நான் எதிர்ப்பு தெரிவிப்பதால் என் உயிருக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது..பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குட்பட்ட வேதாரண்யம் பகுதியில் சிலிகான் தாது மணல் எடுக்க பர்மிட்டோ, அதனை பிரித்தெடுக்கும் பிளான்டுக்கான அனுமதியோ கொடுக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன்” என்றார்.காளிதாசனைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய காவிரி தமிழ்த்தேச விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவி, “தாது மணல் குவாரிகள் தொடங்கப்பட்டாலே ஊருக்குள் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டு வெட்டுக்குத்து சம்பவங்கள் அதிகரித்துவிடும். இங்கே, அதிகாரபூர்வமாக எடுத்த மண்ணைவிட திருடியதுதான் அதிகம். நாகை மாவட்ட கலெக்டராக தற்போதைய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இருந்தபோதுதான் முதன்முதலாக சிலிகான் மணல் எடுக்கும் குவாரிகளுக்கு அனுமதி அளித்தார்.ஏற்கெனவே, குவாரிகள் இயங்கியபோது 20 அடி ஆழத்துக்கும் அதிகமாக மணலை எடுத்துவிட்டார்கள். தற்போது மீண்டும் குவாரிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டால் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போய் விவசாயமும் அழிந்துவிடும். இந்தப் பகுதியே பாலைவனமாகிவிடும். கடல்நீர் உட்புகுந்து உப்பாகி குடிநீருக்கும் பஞ்சம் வந்துவிடும்.கரியாப்பட்டினம், தகட்டூர் வருவாய்க் கோட்டத்துக்குட்பட்ட 150 கிராமங்கள் முற்றிலும் அழிந்துவிடும். ஏற்கெனவே, பலர் ஊரை காலி செய்துவிட்டு பிழைப்புத் தேடி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். அத்துடன் பல ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் எந்தச் சூழலிலும் தாது மணல் குவாரிகளுக்கான அனுமதியை வழங்கக்கூடாது. அப்படி வழங்கினால் தொடர் போராட்டம் நடத்துவோம்” என்றார் ஆவேசமாக.``தாதுமணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்தது உண்மையா?'' என நாகை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் சோபியாவிடம் கேட்டபோது, “சிலிகான் தாது மணல் குவாரிக்கு யாரும் விண்ணப்பம் செய்யவில்லை. அதுதொடர்பாக எந்தப் பரிசீலனையையும் நாங்கள் செய்யவில்லை” என்றார் உறுதியாக.பரிசீலனை செய்யவில்லையென்றால், விவசாயிகள் பதறுவது ஏன்? - ஆர்.விவேக் ஆனந்தன்