அமலாக்கத்துறையின் அதிரடிகளால் கட்சிக்கு ஏற்பட்ட சேதங்களை சீர்செய்ய அ.தி.மு.க.வினர் மீதான வழக்குகளை தி.மு.க தூசி தட்டத் தொடங்க, இதில் எதிர்பாராதவிதமாக வந்து விழுந்திருக்கிறார், தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ சத்யா. எடப்பாடியின் வலதுகரமாக சத்யா இருப்பதால் அ.தி.மு.க வட்டாரத்தில் கூடுதல் அதிர்வலைகள்.சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் அரவிந்தாக்ஷன் தாக்கல் செய்த மனுவில், ‘அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சத்யா என்ற சத்யநாராயணன். சென்னை தி. நகர் தொகுதியில் 2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.2021 சட்டமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது சொத்து மதிப்பு 2 கோடியே 78 லட்சம் ரூபாய் என தெரிவித்து இருந்தார். ஆனால், அவரின் அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு 13 கோடியே 2 லட்சம் ரூபாய் என்ற தகவல், ஆர்.டி.ஐ மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தனது மனைவி மற்றும் மகள் பெயரில் வாங்கிய சொத்துகளை அவர் மறைத்து இருக்கிறார். இது முழுக்க முழுக்க சட்டவிரோதமானது. எனவே, சத்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘மனுவில் முகாந்திரம் இருந்தால், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து 2 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டார். இதனால், `பொறியில் சிக்கிய எலியாகத் தவிக்கிறார் தி.நகர் சத்யா' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.. ``வழக்கின் விவரங்களைக் கூற முடியுமா?'' என அரவிந்தாக்ஷனின் வழக்கறிஞர் வர்கீஸிடம் பேசினோம். “சென்னை மாநகராட்சியின் 10வது மண்டலம் 135வது வார்டுக்கு உட்பட்ட பக்தவச்சலம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டுத் திடல் உள்ளது. பொதுமக்களின் பொழுதுபோக்கு மைதானமான இங்கே, சிலரின் நிர்ப்பந்தத்தால் இறகுப்பந்து கூடாரம் (உள் விளையாட்டு அரங்கம்) கட்ட முடிவு செய்தார், அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யா. இதற்குப் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியது. குறிப்பாக ‘பிரெஸ்டீஜ் பாலாஜி’ என்பவர் பலவழிகளில் எதிர்ப்பைத் தெரிவித்தார். இதனால், அவரை அழைத்து சமாதானம் செய்தார் சத்யா. அதன்பிறகு பணிகள் வேகமாகத் தொடங்கின. அங்கே அடித்தளம் அமைக்க 23 லட்சத்து 73 ஆயிரத்து 900 ரூபாய்; தரைத்தளம் அமைக்க 18 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய்; அதன் மேல் மரத்தால் ஆன தரைதளம் அமைத்திட 21 லட்சத்து 11 ஆயிரம் ரூபாயும் செலவாகியுள்ளது. மேற்கூரை அமைக்க 18 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளனர். தொடர்ந்து 2017-18ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின்கீழ் ’எலக்ட்ரிக்கல் லைட்’ அமைக்கும் பணிக்காக 21 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டது. இப்படிப் பல வழிகளில் மக்களின் வரிப்பணம் செலவானது. பொதுப்பணித்துறையின் திட்ட மதிப்பீட்டின்படி செலவிட்டிருந்தால்கூட உள் விளையாட்டு அரங்கம் கட்ட 50 லட்சம் ரூபாயைத் தாண்டி இருக்காது. ஆனால், ஒரே வேலையை 5 கட்டங்களாகப் பிரித்து அப்பட்டமான நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார், சத்யா. இதே அளவில் கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 2017-18ம் ஆண்டு 33 லட்ச ரூபாயில் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், தி.நகர் தொகுதியில் இந்த உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ஒரு கோடியே ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 494 ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய தொகை வித்தியாசம் எப்படி வரும்? என்பதுதான் அவரை சந்தேக வளையத்துக்குள் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது. சத்யா நடத்தியிருக்கும் இந்த மோசடிக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர், 10வது மண்டல உதவி கமிஷனர், செயற்பொறியாளர் உட்பட பல அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். இதற்கான ஆதாரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்டுள்ளது. இது, தி.நகர் சத்யா மீதான முதல் குற்றச்சாட்டு'' என்றவர், அடுத்த புகாரை விவரித்தார். `` 2017-18ம் ஆண்டில் தமிழகத்தில் நிலவிய கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தை சமாளிக்க, தமிழக அரசு தொகுதிவாரியாக நிதியை ஒதுக்கி அரசாணை பிறப்பித்தது. அப்படி ஒதுக்கப்பட்ட 2 கோடி ரூபாயைத் தனது தொகுதியில் 33 சாலைகள் அமைப்பதற்கான பணிக்குப் பயன்படுத்தினார் சத்யா. குடிநீர் வசதிக்காக ஒதுக்கிய நிதியை சாலைகள் அமைக்கப் பயன்படுத்தியதும், தனக்கு வேண்டியவருக்கு அதற்கான டெண்டரை ஒதுக்கியதும் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இதுதான் சத்யா மீதான இரண்டாவது வழக்கு. .மேலும், அவரது தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் சமூக நலக்கூடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டதாகவும் சமூக நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் ஆவணங்கள் உள்ளன. ஆனால், கடைசி வரை சமூக நலக்கூடம் கட்டப்படவேயில்லை. இது அவர் மீதான 3வது வழக்கு.இம்மூன்று வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நிலுவையில் இருக்கும் நிலையில், 4வது வழக்கில்தான் நீதிமன்றம் இப்படி உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்படும். அவர்கள் எஃப்.ஐ.ஆர் போடுவார்கள். பிறகு வழக்கு நடக்கும்'' என்றார்.மேலும், ``சத்யா மீதான குற்றம் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. அதில், அவருக்கு 4 வருட சிறைத் தண்டனை கிடைக்கலாம். அதோடு அவர் தேர்தலில் 6 வருடங்கள் போட்டியிட முடியாத நிலையும் ஏற்படும்’’ என்றார்.ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தி.நகர் சத்யாவிடமே விளக்கம் கேட்டோம். “தொகுதி மக்கள் கேட்டுக்கொண்டதாலேயே உள்விளையாட்டு அரங்கம் அமைத்துக் கொடுத்தேன். அதில், எந்த முறைகேடும் நடக்கவில்லை. அந்த அரங்கத்தில் சில பணிகளை மேற்கொள்ள ஒரு ஒப்பந்ததாரர் கேட்டார். நான் அவருக்கு அனுமதி வழங்கவிலை. அவர்தான் ஏதோ மோசடி நடந்ததுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார். எதையும் சட்டப்படி சந்திக்க நான் தயார்’’ என்றார், உறுதியாக.சட்டப்படியே எல்லாம் நடக்கட்டும்! - கணேஷ்குமார்