தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பற்றவைத்த சனாதன நெருப்பு, இந்தியாவெங்கும் தனலாக எரிந்துகொண்டிருக்கிறது. ஒரேநாளில் உதயநிதியை ட்ரெண்ட் செய்து தேசியளவில் அவரின் இமேஜை பா.ஜ.க உயர்த்திவிட்டதாக உடன்பிறப்புகளும், `இந்தியா கூட்டணிக்கு வேட்டுவைக்க இந்த ஒரு பேச்சு போதும்' என பா.ஜ.க.வும் வரிந்துகட்டுவதால், `யாருக்கு ஓட்டு... யாருக்கு வேட்டு?' என்ற கூட்டல், கழித்தல் கணக்குகள் ஆரம்பமாகியிருப்பதுதான் இந்த விவகாரத்தின் ஹைலைட்! சென்னையில் செப்டம்பர் 1ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாட்டை சி.பி.எம் கட்சி நடத்தியது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம், சமத்துவத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானது' என்றார். அவ்வளவுதான் பற்றிக்கொண்டது நெருப்பு. மறுநாளே, உதயநிதி பேசிய வீடியோவை வெளியிட்ட பா.ஜ.க.வின் தேசிய ஐ.டி. விங் பொறுப்பாளர் அமித் மால்வியா, இந்தியாவில் சனாதன தர்மத்தைப் பின்பற்றும் 80 சதவிகித மக்களை ஒழிப்பதற்கு உதயநிதி அழைப்புவிடுத்ததாக குற்றம்சாட்டினார். ஆவேச அமித் ஷா உதயநிதியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்குமாறு செப்டம்பர் 6-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் மோடி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ‘இந்தியா கூட்டணியின் இரண்டு மிகப்பெரிய கட்சிகளான தி.மு.க மற்றும் காங்கிரஸின் மூத்த தலைவர்களின் மகன்கள், `சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்' என்கிறார்கள். சனாதன தர்மத்தை முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் தயாரா?' எனக் கூட்டத்தை சூடேற்றினார். அணிவகுக்கும் வழக்குகள் உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி பா.ஜ.க சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியில் வினீத் ஜிண்டால் என்பவர் உதயநிதி மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யும்படி டெல்லி காவல்துறையில் புகார் மனுவை அளித்தார். உ.பி மாநிலம் ராம்பூரில் உள்ள காவல்நிலையத்தில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்கறிஞர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ, 295ஏ ஆகிய பிரிவிகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதயநிதியுடன் சேர்த்து கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடிதம் எழுதிய 262 பேர் `உதயநிதிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தவேண்டும்' என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு முன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என 262 பேர் கடிதம் எழுதியுள்ளனர். இந்தநிலையில், உதயநிதி பேச்சின் பின்னணி குறித்து தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``ஆட்சி, கட்சி என்று தி.மு.க.வை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்ல பல்வேறு வியூகங்களை வகுத்துவருகிறார், உதயநிதி. இதுநாள்வரை தி.மு.க.தொடர்பான பணிகளை ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் ஒருவரே மேற்கொண்டு வந்தார். அவர் மீது டெல்லி பா.ஜ.க-வின் பார்வை அழுத்தமாக பதிந்துவிட்டதால், அவருக்கு வரும் ஜனவரி மாதத்துக்குள் நெருக்கடிகள் ஏற்படலாம் என்று ரகசிய தகவல் தி.மு.க மேலிடத்துக்கு வந்துள்ளது. இதனால், அவர் கவனித்துவந்த கட்சி தொடர்பான பணிகளை உதயநிதி பக்கம் மடைமாற்றியுள்ளனர். களமிறங்கிய சுனில் அந்தவகையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பணியாற்றிய சுனில், `மைண்ட் ஷேர் அனலிடிக்ஸ்' என்ற அரசியல் வியூகம் வகுக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் ஆகியவற்றில் சுனிலின் பங்கு அதிகம். `இந்தத் தேர்தலில் 38 எம்.பி தொகுதிகளையும் 13 சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றுவதற்கு சுனில் டீம் வியூகம் வகுத்ததே காரணம்' என உறுதியாக நம்பினார், உதயநிதி. ஆனால், 2019ம் ஆண்டு நடந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது. இந்த இரண்டுமே தி.மு.க வசம் இருந்த தொகுதிகள். இதனால் சுனில் மீது சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து, தி.மு.க. மூத்த தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்திய கட்சி மேலிடம், `2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெறாவிட்டால், இனிவரும் எந்த தேர்தலிலும் நம்மால் எழுந்திருக்கக்கூடமுடியாது. இதனால் புதிதாக ஒரு அரசியல் ஆலோசகரை நியமிக்கலாம்' என முடிவெடுத்து பிரசாந்த் கிஷோரை கொண்டுவந்தார். அப்போதும்கூட, சுனில் மீது உதயநிதிக்கு பாசம் இருந்தது. அ.தி.மு.க. முகாமுக்குச் சென்று தேர்தல் பணியாற்றச் சென்ற சுனிலிடம், `அங்கே போக வேண்டாம். என்னுடனேயே இருங்கள்' எனக் கூறும் அளவுக்கு இருவருக்கும் இடையே சுமூக உறவு இருந்தது. ஆனாலும் சுனில், அப்போது நாகரிகமாக இதை மறுத்துவிட்டார். தொடர்ந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடிக்கும் பிறகு காங்கிரஸுக்கும் பணியாற்றியவர், தற்போது காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருக்கிறார். தற்போது உதயநிதியிடம் கட்சிப் பணிகள் கைக்கு வந்துவிட்ட நிலையில், சுனிலை உதயா அண்ட் கோ அழைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சுனில் தலைமையில் 30 பேர் கொண்ட டீம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உதயநிதியின் அமைச்சர் பங்களாவான குறிஞ்சி இல்லத்தில் இருந்து அந்த டீம் பணிகளைக் கவனித்து வருகிறது. வடமாநிலங்களில் தேர்தல் பணிகளைக் கவனித்த சுனிலுக்கு, அந்த மாநில மக்களின் மனநிலை நன்கு தெரியும். அந்தவகையில் உதயநிதி கலந்துகொண்ட விழாவில் சனாதனம் பற்றிப்பேச வைத்து, `அதன் தாக்கம் எப்படியிருக்கும்?' என மேற்கொள்வதற்காக எடுக்கப்பட்டதே இந்த பரிசோதனையே மேற்கண்ட சனாதானம் பேச்சு என்கிறார்கள். தேசிய அளவில் கவனம்பெற்ற உதயநிதி சுனில் எதிர்பார்த்ததைப்போலவே, உதயநிதியின் பேச்சு தேசிய அளவில் ட்ரெண்டானது. பா.ஜ.க. தலைவர்கள், சாமியார்கள் என உதயநிதிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுவரை தமிழகம், அதிகபட்சம் தென்னிந்தியா மட்டுமே அறியப்பட்ட முகமாக இருந்த உதயநிதி இப்போது ஒரே நாளில் இந்தியாவெங்கும் அறியப்படும் முகமாக மாறிவிட்டார். தவிர, தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும் உதயநிதியை பெரியார், அம்பேத்கர், கருணாநிதி ஆகியோரும் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். அதனாலேயே, எக்ஸ் பக்கம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர பெருகி, இந்திய அளவில் `சனாதனம்' என்ற வார்த்தை ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. டென்ஷனை எகிறவைத்த 10 கோடி! ஏற்கெனவே நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திடாத ஆளுநர் ஆர்.என்.ரவியை, `தபால்காரர், பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஏதேனும் ஒரு தொகுதியில் நின்று வென்று வாருங்கள்' என உதயநிதி சவால்விட்டுப் பேசியதை குடும்பத்தின் சில உறுப்பினர்கள் ஏற்கவில்லை. இந்நிலையில், `சனாதனம் பற்றிப் பேசி தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்கிவிட்டாரோ?' என்ற கவலையும் அவர்களுக்கு ஏற்பட்டது. அதேநேரம், உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலைவைத்த அயோத்தி சாமியார் பரமஹம்ச காம்ச ஆச்சார்யாவின் பேச்சையும் அதனால் உதயநிதிக்கு பெருகிய ஆதரவையும் ரசித்தனர். அறிவாலயத்தில் மர்ம நபர் இருப்பினும், தமிழகத்தில் பதற்றம் அதிகரித்ததால் சென்னை பசுமைவழிச் சாலை மற்றும் ஈ.சி.ஆரில் உள்ள உதயநிதியின் இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், செப்டம்பர் 5-ம் தேதி தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீஸார், விசாரணை நடத்தியதுடன் அந்த நபரை திரும்பி அனுப்பினர்" என விவரித்து முடித்தார். சங்கடத்தில் ஸ்டாலின் இவை ஒருபுறம் இருக்க, உதயநிதியின் சனாதன பேச்சு இந்தியா கூட்டணிக்குள்ளும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க முதல்வர் மம்தா, மகாராஷ்டிர மாநில சிவசேனா உத்தவ் தாக்கரே ஆகியோர் தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இதையே தேர்தல் பிரசார யுக்தியாக பயன்படுத்திக் கொண்டு, இந்தியா கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிப்பதால், இது தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சற்று தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு, `தமிழக அளவில் தி.மு.க.வுக்கு வலுசேர்த்தாலும் தேசிய அளவில் குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?' என்ற ஆலோசனையும் அறிவாலயத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. `இந்த ஆடுபுலி ஆட்டத்தை பா.ஜ.க எப்படி தொடரப் போகிறது?' என்பதில்தான் அடுத்து வரும் நாள்களுக்கான அரசியலே இருக்கிறது. பார்ப்போம்! பாக்ஸ் ``வழக்குகளை சந்திக்கத் தயார்!" - உதயநிதி சவால் `சனாதன சர்ச்சை' குறித்து உதயநிதி பேசும்போது, ``என்ன வழக்குப் போட்டாலும் சந்திப்போம். ஒட்டுமொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேசவேண்டும். `இனப்படுகொலை' என நான் சொன்னதாக சிலர் பேசுகின்றனர். சனாதனம் என்ற கோட்பாட்டை ஒழிக்கவேண்டும் என்றுதான் பேசினேன். இனிமேலும் அப்படித்தான் பேசுவேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்" என ஆவேசப்பட்டவர், ``திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். அதற்கு தி.மு.க.வினரை எல்லாம் கொலை செய்வதாக அர்த்தமா? பிரதமர் மோடி, `காங்கிரஸ் இல்லாத பாரதம்' என்கிறார். அப்படி என்றால் காங்கிரஸ்காரர்களை பிடித்து கொல்லப்போகிறார்களா? பொய் செய்திகளை பரப்புவதில் பா.ஜ.க.வினர் வல்லவர்கள். அதைத்தான் செய்கிறார்கள்" என்றார். பாக்ஸ் ``சனாதன எதிர்ப்பே பகல் வேஷம்தான்!" பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசியபோது, ``சனாதன தர்மம் என்றால் இந்து மதம்தான். ஒருபுறம் சனாதனத்தை எதிர்க்கிறார்கள், மறுபுறம் ஸ்டாலின் குடும்பத்தினர் திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தில் பங்கேற்கிறார்கள். அறநிலையத்துறை அமைச்சரே காவி வேட்டியில்தான் வலம் வருகிறார். வழக்குகளை எதிர்கொண்டாலும் பல நிற கயிறுகளை செந்தில் பாலாஜி கட்டியிருக்கிறார். இதெல்லாம் சனாதனத்தில் வராதா.. அத்தனையும் பகல் வேஷம்" எனக் கொந்தளித்தனர். - பாபு படங்கள் : ம.செந்தில்நாதன்