`அட்ரஸ் இல்லா தெருவும் இந்த ஆட்டோகாரன் அறிவான்' என்ற பாடல் வரிகளெல்லாம் மலையேறிவிட்டதுபோல. ஆட்டோகாரர்களை அழிக்கும் வேலையில் ஓலா, உபேர் போன்ற தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவதாகக் கூறி கோட்டையை முற்றுகையிட்டு கிடுகிடுக்க வைத்துள்ளனர், ஓட்டுநர்கள்.அதுவும் ஆளும் கூட்டணிக் கட்சியான சி.பி.எம் கட்சியின் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அணிவகுத்து வந்துள்ளனர். பிறகு கோரிக்கை மனுவை தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் அளித்தனர்.``என்ன பிரச்னை?'' என தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.) பொதுச்செயலாளர் சிவாஜியிடம் பேசினோம். “கொரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு ஆட்டோ தொழிலில் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. அன்றாடம் குடும்ப செலவுகளுக்கு மட்டுமல்ல, வாகனத்தை வாங்கிய கடனுக்கான தொகையை செலுத்துவதிலும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள்.தமிழகத்தில் சுமார் 3 லட்சம் ஆட்டோ பர்மிட்டுகள் உள்ளன. அதன்படி, ஒவ்வோர் ஆண்டும் தோராயமாக 1000 கோடி ரூபாயை அரசுக்கு கொடுக்கிறார்கள், ஆட்டோ தொழிலாளிகள். அதுமட்டுமின்றி ஆண்டுக்கு ஒருமுறை ஆட்டோவுக்கு எஃப்.சி. கட்டணமாக பல ஆயிரம் கோடி ரூபாயை போக்குவரத்துத் துறைக்கு அளிக்கிறோம்.இப்போது கையில் எலெக்ட்ரானிக் மெஷினோடு திரும்பும் திசையெல்லாம் போக்குவரத்து காவலர்கள் நின்றுகொண்டு ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் என அபராதத்தை விதித்து ஆட்டோ ஓட்டுநர்களிடம் சுரண்டுகிறார்கள். மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்த ஆன்லைன் அபராதம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆட்டோ ஓட்டுநர்களை மனிதாபிமானம் அற்றவர்களாக சித்திரிக்கிறது.`ஆன்லைன் அபராதத்தையும் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தையும் தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது' என்ற கோரிக்கை ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. விபத்தை தடுப்பதற்கு வாகனங்களில் இரவுநேர பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டுகிற வாய்மொழி உத்தரவை எடப்பாடி முதல்வராக இருந்தபோது அமல்படுத்தினார்கள். எவ்வித அரசு உத்தரவும் இல்லாமல் ஆர்.டி.ஓ.க்களும் ஸ்டிக்கர் ஒட்டுகிற சில கம்பெனிகளும் சம்பாதிப்பதற்காக ஒப்பந்த முறையில், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு தரப்பட்டது..அதில். ஆட்டோ ஓட்டுநர்களிடம் பணம் வசூலிப்பதில் மிகப்பெரிய கொள்ளை நடந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, ‘இனி எஃப்.சி. எடுக்க வரும் வாகனங்கள் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை’ என்று அறிவித்தது. ஆனாலும்கூட இன்றைக்கும் தமிழகம் முழுவதும் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.ஓலா, உபேர், ரேபிடோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் எந்த மூலதனமும் போடாமல் ஒரு செயலியை வைத்துக்கொண்டு ஆட்டோ தொழிலாளர்களிடமும் பயணிகளிடமும் பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டு முழுவதும் கொள்ளை அடிக்கின்றன. இதிலிருந்து, ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களை பாதுகாக்க வேண்டும். கேரள அரசின் ஆட்டோ செயலி பெரிய வரவேற்பு பெற்றது. கேரளாவில் ஆட்டோ இயக்கம் வரையறுக்கப்பட்ட மீட்டர் கட்டணத்தோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.தமிழகத்திலும் அரசாங்கம் அதுபோன்றதொரு செயலியை உருவாக்கி கட்டணத்தை தீர்மானித்து செயல்படுத்தினால், ஆட்டோ தொழிலாளிகள் மத்தியில் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் தி.மு.க. அரசுக்கு நற்பெயர் ஏற்படும். அதுமட்டுமின்றி, டெல்லி, மகாராஷ்டிரா போன்று தமிழகத்திலும் பைக் டாக்சியை தடை செய்யவேண்டும்.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஆட்டோ தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் என்பது அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. எடப்பாடி முதல்வராக இருந்தபோது, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் `ஆட்டோ தொழிலாளிகள்' என்கிற பெயரையே நீக்கிவிட்டார்.ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை அரசுக்கு வரியாக செலுத்துகிற ஆட்டோ தொழிலாளிக்கு, அவர்கள் பேரில் தனி நலவாரியம் அமைக்கப்பட வேண்டும். 2013-ம் ஆண்டு ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பின்பு ஆட்டோ கட்டணம் உயர்வு குறித்து அ.தி.மு.க. அரசு பரிசீலிக்கவே இல்லை. இதனால், ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதன் விளைவாக, 2022 ஏப்ரல் மாதம் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால், 2 ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் இதுவரை ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவில்லை. பலகட்ட போராட்டம் நடத்தியும் எங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதன் காரணமாகத்தான் ஆகஸ்ட் 25ம் தேதி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.) ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது” என்றார்.ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கை குறித்து தலைமைச் செயலக செயலாளர் சுப்ரமணியத்திடம் கேட்டோம். “அன்று தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் இருவரும் முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருவாரூர் சென்றிருந்தார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகை குறித்து உள்துறை செயலாளர் அமுதாவிடம் தெரிவித்தபோது, `சென்னை திரும்பி வந்தவுடன், ஆட்டோ தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி உடனடியாக தீர்வு காணலாம்' என உறுதியளித்துள்ளார்” என்றார்.அரசு, நல்ல ரூட்டை காட்டட்டும்! - ரய்யான்பாபு