‘லியோ’ ஓபனிங் சாங்கில் விஜய்யுடன் ஆண்களும் பெண்களுமாக இரண்டாயிரம் டான்சர்களை ஆடவைக்க வேண்டும் என்பது டார்கெட். ஆனால், பக்கத்து மாநிலங்களில் இருந்து அள்ளினாலும் ஆயிரத்துக்கும் மேல் டான்சர்கள் தேறவில்லை. உடனே லோகேஷுக்கு விஜய் ஒரு யோசனை சொன்னதும் லோகேஷ் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப். அதாவது, கல்லூரி மாணவ, மாணவிகளில் நடனத்தில் நாட்டமுள்ள ஆயிரம் பேரை இந்தப் பாடலில் இறக்கிவிட வேண்டும் என்பதே அந்த யோசனை! விஜய்க்கு எதிரான கட்சிகள் கவனத்துக்கு!
நந்தா பெரியசாமி... பத்திரிகையாளராக இருந்து இயக்குநர் ஆனவர். ஆர்யாவை வைத்து ‘ஒரு கல்லூரியின் கதை’ தொடங்கி, சேரனை வைத்து ‘ஆனந்தம் விளையாடும் வீடு’என ஐந்து படங்கள் இயக்கினார். இந்த இரு படங்களுக்கும் இடையில் சொல்லப்படாத மூன்று படங்களுமாக சேர்ந்து, எட்டு படங்களுமே மொத்தமாக ஒரு வாரம்கூட ஓடாத நிலையில், கடந்த வாரம் சமுத்திரக்கனியை நாயகனாக வைத்து ஆறாவது படத்தை வெற்றிகரமாகத் துவங்கிவிட்டார். “ஹிட்டு கொடுத்த பல டைரக்டர்கள் அடுத்த எட்டு வைக்க முடியாம முழிச்சிக்கிட்டிருக்கப்ப, இவருக்கு மட்டும் எப்படி கேப் விடாம படம் கிடைக்குது?” என்கிறார்கள் சில இயக்குநர்கள்.
“அடிக்கடி பார்ட்டிகளில் கலந்துகொள்கிறார். அவருக்கு விருப்பமில்லாத ஆட்களின் படங்களில் நடிக்கிறார். அதனால் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்றுக் கொள்ளப்போகிறார்கள்...” - கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இப்படி தினுசு தினுசான பேச்சுகள் சிநேகா - பிரசன்னா தம்பதிகளைச் சுற்றி வலம்வந்தன. அதைப் பற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த பிரசன்னா, சமீபத்தில் தங்களது திருமண நாள் நிகழ்வையொட்டி சிநேகாவை “மானே, தேனே...” என்று புகழ்ந்தவர் இறுதியில், “நம்மைப் பற்றிய வதந்திகள் தவிடு பொடியாகட்டும்” என்றும் பஞ்ச் வைத்திருக்கிறார்.
அறிமுகமான வெகு சொற்ப காலத்திலேயே கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்த ராஷ்மிகா ‘புஷ்பா’படத்தின் ‘ஊம் சொல்றியா மாமா’பாடலுக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி சக நடிகைகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டார். அடுத்த லேட்டஸ்ட் வயிற்றெரிச்சல் மிகவும் கொடூரமானது. எப்போதுமே தன்னை ஒரு பியூர் வெஜிட்டேரியன் என்று வெளி உலகுக்குக் காட்டிவந்த வந்த ராஷ்மிகா, சமீபத்தில் ஒரு சிக்கன் பக்கோடா நிறுவனத்துக்கு ஒரே ஒரு லெக் பீஸை கடிக்கும் போஸ்க்கு ஒப்பந்தமாகியிருந்தார். அந்த லெக் பீஸைக் கடிக்க அவருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பளம் ஒரு கோடி ரூபாய். இதையெல்லாம் பார்க்குறப்ப வாழ்றதுக்கே புடிக்கலை பாஸ் என்கிறார்கள் சக நடிகைகள்!
சீக்ரெட்
உச்ச நடிகரின் மகள் வணக்கம் போட்டுக்கொண்டிருக்கும் படத்தின் பட்ஜெட், தயாரிப்பு நிறுவனத்தின் அடிவயிறு கலங்கும் அளவுக்கு தறிகெட்டுப் போய்க்கொண்டிருக்கிறதாம். ’அவ கேக்குற எல்லாம் செஞ்சு கொடுங்க. நாளைக்கு ஏடாகூடமா ஏதாவது ஆயிட்டா,நான் கூடமாட இருந்து ஹெல்ப் பண்றேன்’என்று வேறு வழியின்றி மகளை சப்போர்ட் பண்ணுகிறாராம் வாப்பா. அட போப்பா!