நியூஸ் பெஞ்ச்

தனியாளாக சாலையில் கட்டிலைப் போட்டு மறியலில் ஈடுபட்டார் முத்துதுரை. தகவலறிந்து வந்த போலீஸார் முத்துதுரையை எச்சரித்து அனுப்பினர். அப்போது, ‘இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தீக்குளிப்பேன்
நியூஸ் பெஞ்ச்

தூத்துக்குடி: கட்டபொம்மன் விழாவுக்குக் கட்டை!

தூத்துக்குடியில் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் இருக்கிறது வீர சக்கதேவி கோயில். இதன் சித்திரை திருவிழாவின்போது, கட்டபொம்மனின் வம்சாவளியினர் தொடர் ஓட்டமாக வீரவாளுடன் ஜோதி ஏந்தி வந்து வழிபடுவார்கள். சில வருடங்களுக்கு முன்பு தொடர் ஓட்டம் வந்தவர்களுக்கும் கிராமத்தினருக்கும் மோதல் ஏற்பட்டதால் இந்த ஆண்டு  ‘பேரணியில் ஒருவர் மட்டுமே வீர வாளுடன் வரவேண்டும், மோட்டார் சைக்கிளில் யாரும் வரக்கூடாது’என்று கட்டுப்பாடுகளை விதித்த போலீஸார், மீறி  வந்தவர்களை விரட்டினர். இதனால் கோபமடைந்த கோயில் நிர்வாகம், திருவிழாவை நிறுத்துவதாக அறிவிக்க, ஆத்திரமடைந்த மக்கள் கோட்டை முன்பு திரண்டு கருப்புக் கொடி காட்டினர். ஒருவழியாக காவல்துறை வெள்ளைக்கொடி கொடிகாட்ட, திருவிழா மீண்டும் களைகட்டியது. # தடுக்கச் சொன்னது ஜாக்ஸன் துரையா இருக்குமோ?

சேலம்: பொங்கும் உடன்பிறப்புகள்

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்வகணபதி சமீபத்தில் ஒரு சிறு கூட்டத்தை கட்சியில் சேர்த்து, அமைச்சர் நேருவிடம் ஆசியும் வாங்கிக் கொடுத்தார். இந்த நிகழ்வை வாழ்த்த வேண்டிய உடன்பிறப்புகள் வசவு பாடுகின்றனர்.  “இப்போ சேர்ந்திருக்கறவங்கள்ல சித்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜ் முதல்ல காங்கிரஸ்ல இருந்தார். பிறகு தி.மு.க., அ.தி.மு.கன்னு மாறி மாறி டிராவல் செஞ்சார். தங்காயூர் ஊராட்சித் தலைவர் பாலாஜி பா.ம.க.வில இருந்து கட்சி மாறி அங்க, இங்கன்னு போய் வந்தவரு. இன்னும் பலர் மேல புகார்கள் நிறைய இருக்கு. கடந்த வருஷமே இவங்க எல்லாம் ஸ்டாலின் முன்னால கட்சியில சேரவந்தாங்க. ஆனா, உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால சேர்க்கப்படாம திரும்பி வந்துட்டாங்க. ஆட்சி மாறுபோதெல்லாம்  தாவிகிட்டே இருக்கற இவங்களப்போய் செல்வகணபதி கட்சியில சேர்த்துவிட்டிருக்காரு” என்று பொங்குகிறார்கள். # பாலு பொங்கலாம், பச்சைத்தண்ணி பொங்கலாமா?

புதுக்கோட்டை: கண்மாயைக் காக்க போராட்டம்!

புதுக்கோட்டை கொத்தமங்கலத்தைச் சேர்ந்த முத்துதுரை என்பவர், அங்குள்ள பெரியகுளம் கண்மாய் நீர்ப்பாசன சங்கத் தலைவராக உள்ளார். சமீபத்தில் அந்தக் குளத்தில் விதிமுறைகளை மீறி அதிகமாக மண் அள்ளிவிட்டார்கள் என்று கூறி, தனியாளாக சாலையில் கட்டிலைப் போட்டு மறியலில் ஈடுபட்டார் முத்துதுரை. தகவலறிந்து வந்த போலீஸார் முத்துதுரையை எச்சரித்து அனுப்பினர். அப்போது, ‘இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தீக்குளிப்பேன்’என்று எச்சரித்துள்ளார் முத்துதுரை ! # கண்மாயைக் காப்பாத்துங்க ஆபீஸர்.

தென்காசி: ஒழுங்கு மரியாதையா வெளியே போங்க!

தென்காசி - செங்கோட்டை நகர்மன்றத் தலைவர் தி.மு.க-வைச் சேர்ந்த ராமலட்சுமி. சமீபத்தில் நடந்த திட்டக் குழு கூட்டத்தின்போது ராமலட்சுமி சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி தனது அறைக்குப் போய்விட்டார். இதனால் கடுப்பான எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் கண்டனம் எழுப்பினார்கள். தொடர்ந்து அவர்கள்  சேர்மன் அறைக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது,  “ஒழுங்கு மரியாதையா வெளியே போயிடுங்க... இல்லாட்டி செருப்பால அடிப்பேன்” என்று சேர்மனின் ஆதரவாளர்கள் கத்த...  அங்கே குட்டிக் கலவரமே ஏற்பட்டது. தொடர்ந்து போலீஸார் சமாதானம் செய்து அனுப்பிவைத்தாலும் அனலாக தகிக்கிறது விவகாரம். # நல்ல விருந்தோம்பல்!

தஞ்சை: நாறுது டெண்டர் சண்டை!

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான இடம் தேர்வுசெய்வதில் ஏற்பட்ட குளறுபடிகளால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சியில் புதிதாக திட்டமதிப்பீடு செய்து 20 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியிருக்கிறார்கள். அதற்கான இடம் தேர்வுசெய்து டெண்டர் விடும் முன்பே தி.மு.க. நகரச் செயலாளரான செந்தில் தனக்குத்தான் டெண்டர் வேண்டும் என துறை அமைச்சரைப் பார்த்து டோக்கன் கொடுத்திருக்கிறார். இந்த விவரம் அறிந்த மாவட்டச் செயலாளரும் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அண்ணாதுரை,  ‘எனக்குத்தான் டெண்டர்’என்று காய்நகர்த்திவருகிறார். இதில் கொதித்துப்போன நகரம், ‘பஸ் ஸ்டாண்ட் நகர எல்லைக்குள்ள வருது. எப்படி வேலையை ஆரம்பிக்கிறீங்கன்னு பாக்குறேன்!’ என்று உருமிக்கொண்டிருக்கிறாராம். # டெண்டர் சண்டையில் மண்டை பத்திரம்!

சேலம்: ஒன்றியத்துக்கு மோதும் மா.செ.க்கள்?

பட்டியல் சமூக இளைஞரைத் திட்டிய பிரச்னையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சேலம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாணிக்கத்தின் பதவியைப் பிடிக்க முட்டல், மோதல் தொடங்கியுள்ளது. சேலம் தெற்கு ஒன்றியம், சேலம் கிழக்கு மாவட்டத்தில் வருகிறது. சில குறிப்பிட்ட பகுதிகள் மத்திய மாவட்ட எல்லையில் இருக்கின்றன. இதனால் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரனிடம் ஒரு குரூப்பும், கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்திடம் ஒரு குரூப்பும் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பதவியை இழந்த மாணிக்கமும் பொறுப்பு அமைச்சர் நேருவைப் பார்த்து மன்னிப்புக் கடிதம் கொடுத்து பதவிக்கு முயற்சி செய்கிறாராம். # பொறுப்பில்லாம பேசிட்டு வெறுப்பேத்தாதீங்க!

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com