'டிஜிட்டல் இந்தியா', 'ஸ்டார்ட் அப் இந்தியா', 'நியூ இந்தியா' எனத் தொடர்ந்து பெருமை பேசிய மத்திய பா.ஜ.க அரசுக்கு, அதேபெயர் அலர்ஜியை ஏற்படுத்தியிருக்கிறது. விளைவு, அழைப்பிதழ்களில் எல்லாம் `இந்தியா' என்ற பெயர் `பாரத்' ஆக மாறியிருக்கிறது. ஒற்றைக் காரணம், `இந்தியா' என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் அணிசேர்ந்ததுதான். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என எதிர்க்கட்சிகள் கூடி முடிவெடுத்துள்ளன. அதன்படி, ஜூன் 23ம் தேதி பாட்னாவில் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒற்றுமையுடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது. அடுத்து, பெங்களூருவில் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், கூட்டணிக்கு இந்தியா (Indian National Developmental Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அன்று முதலே, `இந்தியா' என்ற பெயரைக் கேட்டாலே பா.ஜ.க தலைவர்கள் கொதிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அசாம் பா.ஜ.க. முதல்வர் ஹிமந்த பிஸ்வா, தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்த பயோவில், `இந்தியா' என்பதை 'பாரத்' என மாற்றினார். மேலும், ’ஆங்கிலேயர்கள் நம் நாட்டுக்கு இந்தியா என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபட வேண்டும். நமது முன்னோர்களைப்போல, நாமும் தொடர்ந்து பாரதத்துக்காக உழைப்போம். நமது நாடு பாரதம். மோடி, பாரதத்தின் பிரதமர்’ என்றும் குறிப்பிட்டார். பிரதமர் மோடியும், `தீவிரவாத இயக்கங்களின் பெயரில்கூட இந்தியா இருக்கிறது' என கமென்ட் அடித்தார். இந்நிலையில், டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் சார்பில் விருந்து அளிக்கப்பட உள்ளது. இதற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்களில், ’இந்திய குடியரசுத் தலைவர்’ என்பதற்கு பதில் ’பாரத் குடியரசுத் தலைவர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது புதிய சர்ச்சைக்கு விதை போட்டுள்ளது. இதனை விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகிகள், `அரசியல் சாசனத்தின் 1வது பிரிவில் இடம்பெற்றுள்ள ‘மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா’ என்பதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது' எனக் குறிப்பிட்டனர். தி.மு.க.வின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவோ, `எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளதால் பா.ஜ.க அரசு ‘பாரத்’ என்ற பெயரை பயன்படுத்த முயற்சிக்கிறது' என விமர்சித்தார்,.முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் கிண்டி ராஜ்பவனில் நடந்த விழா ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, `தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்' என்றார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே தனது பேச்சை திரும்பப் பெற்றார். தற்போது, `இந்தியா' என்பதை `பாரத்' என என மாற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ள சூழலில், ஆர்.என். ரவியும், தனது ஆசிரியர் தின வாழ்த்தில் `பாரதம்' என்றே குறிப்பிட்டு கூடுதல் திரியை கொளுத்திவிட்டிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என்ற பெயரை மாற்றம் செய்யும் மசோதா தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், `ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் எனப் பலவற்றையும் மாற்ற வேண்டுமா?' என அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கொதிப்படைந்த பா.ஜ.க.வினர், 'ராகுல்காந்தி மட்டும் `பாரத் ஜோடோ யாத்திரை' என பாரதம் பெயரில் நடத்தியது மட்டும் சரியா?' எனக் கொந்தளிக்கிறது. - அரியன் பாபு