நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் தொழிற்சாலைகள் செயல்பட்டுவருகிறது. தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இப்பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் செல்லும் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும்.
இந்தநிலையில் மணிக் குண்டு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாகப் பல ஆண்டுகளாகச் சாலையோரம் பழக்கடை, பேக்கரி, உணவகங்கள், பல்பொருள் அங்காடி எனப் பல கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கிறது. இதனால் பாதசாரிகளும் பெருமளவில் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றுள்ளது.
இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் கடைகளை அகற்ற 15 நாட்களுக்கு முன்பு கடையின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் கடையின் உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்துள்ளனர். பொக்லைன் இயந்திரத்துடன் வந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திடீரென கடைகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கடையின் உரிமையாளர்கள்,வியாபாரிகள் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நீண்ட நேர சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு வியாபாரிகள் ஆக்கிரமித்து வைத்திருந்த இடத்தை அதிகாரிகள் மீட்டனர்.
இச்சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.