வெயிலில் காய்ந்து, வெள்ளத்தில் மூழ்கி வெள்ளாமையை கொண்டுவந்து சேர்த்தால், விவசாயிகளின் வயிற்றில் அடித்து பிடுங்குகிறார்கள் அரசு ஊழியர்கள். தமிழகத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அத்தனையும் விவசாயிகளிடம் கொள்ளை அடிக்கும் நிலையங்களாக மாறிப்போனதுதான் வேதனை. இப்படி ஒரு பானை நெல்லுக்கு ஒரு நெல் பதமாக காட்சியளிக்கிறது தேனி மாவட்டம், கூடலூர் நெல் கொள்முதல் நிலையம்!
சமீபத்தில் தேனி மாவட்டம் திருமருகலில் உள்ள அரசு கொள்முதல் நிலையத்தில், ஒரு மூட்டைக்கு 35 முதல் 60 ரூபாய் வரை கமிஷன் வைத்ததோடு, ஒரு மூட்டைக்குக் இவ்வளவு கிலோ என்பதைத் தாண்டி ஐந்து கிலோ வரை அதிக எடை வைத்து விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறார்கள் அரசு ஊழியர்கள். இந்த விஷயம் வெளியே லீக் ஆனதும் சம்பந்தப்பட்ட மூன்று ஊழியர்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.
இதேபோல கூடலூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நடந்த கமிஷன் பிரச்னையால் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் உருவாகி விவகாரம் காவல் நிலையம் வரை சென்றிருக்கிறது. இதையடுத்து, கூடலூர் கொள்முதல் நிலையத்துக்கு நேரில் சென்றோம்...
“ஏங்க எவ்வளவு நேரமா நிக்குறதுங்க... நாங்க போட்ட நெல்லுக்குதானே காசு கேட்கிறோம், எங்ககிட்ட போய் கமிஷன் அடிச்சா நியாமாங்க?” என்று பொங்கிக்கொண்டிருந்தார்கள் அங்கிருந்த விவசாயிகள் சிலர். அலுவலர்கள் இதை காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. மும்முரமாக மொபைலை நோண்டிக்கொண்டிருந்தனர்.
மொபைலை டேபிள் மீது வைத்துவிட்டு மெதுவாக தலைதூக்கிப் பார்த்த ஒரு ஊழியர் மட்டும், “நாங்க நாள் முழுக்க வேலை பார்க்கறோம். அரசாங்கம் எங்களுக்கு எதுவும் கொடுக்கிறதில்லை. சாப்பாட்டு செலவு, மூட்டைகளைத் தூக்கி வைக்குறது, எடை போடுறது, லோடுமேன்களுக்கு கூலி கொடுக்குறது இதுக்கெல்லாம் யாரு காசு கொடுப்பாங்க?” என்று தங்கள் கமிஷன் கொள்ளையை நியாயப்படுத்திவிட்டு, அலட்சியமாகத் திரும்பிக்கொண்டார்.
அவரை மெதுவாக நெருங்கி, விவசாயிகள் சார்பாகப் பேசுவதுபோல “அப்படி என்னதான் சார் எதிர்பார்க்குறீங்க?” என்று கேட்டோம்... “விவசாயிகள் அதிகாரிகள்கிட்ட அட்ஜஸ்ட் பண்ணித்தான் போகணும். கமிஷன் கேட்டாலோ, கொஞ்சம் எடை அதிகம் போட்டாலோ கண்டுக்கக் கூடாது. அதையும் மீறி எதிர்த்தா மேலதிகாரிங்க, நெல்லுல ஈரப்பதம் இருக்குங்குற மாதிரி நொட்டைகளைச் சொல்லி தட்டிக் கழிச்சிடுவாங்க” என்று மீண்டும் திருட்டுக்கு சப்பைக்கட்டு கட்டினார்.
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பாரதீய கிஸான் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டாக்டர் சதீஷ்பாபுவிடம் பேசினோம். “ கூடலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் எடைபோடும்போது, மூட்டைக்கு ஐந்து கிலோ வரை கூடுதலாகப் போட்டதோடு, மூட்டைக்கு 35 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை லஞ்சமாகக் கொடுத்தால்தான் வவுச்சரே போடுவோம் என்கிறார்கள். இதுகுறித்து வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஸ்பாட்டுக்கு வந்த இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டி, நுகர்பொருள் வாணிப கழகத்தின் ஆர்.எம்., சூப்பிரண்டெண்ட் ஆகியோர் விசாரணை நடத்தியதில் இவர்களின் வண்டவாளம் உறுதியானது. இதையடுத்து, ‘தவறு நடந்திருக்கிறது. ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்’என்று உறுதியளித்திருக்கிறார்கள். இது மட்டுமே எங்களுக்கான தீர்வு அல்ல. தமிழகம் முழுவதுமே நெல் கொள்முதல் நிலையங்களிலும் கமிஷன் கொள்ளை நடக்கிறது. விவசாயிகளிடம் ஒரு ரூபாய் கூட கமிஷன் வாங்கமாட்டோம் என்பதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.
முல்லை சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், “அரசு எங்களிடம் ஒரு கிலோ நெல் 21 ரூபாய் 60 பைசாவுக்கு வாங்குகிறது. இதில் ஒரு மூட்டைக்கு ஐந்து கிலோ அதிகம் வைத்து, கிட்டத்தட்ட நூற்று சொச்சம் ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள். ஒரு விவசாயி குறைந்தது 200 மூட்டை வரை போட்டார் எனில் எவ்வளவு பணத்தை விழுங்கியிருக்கிறார்கள் என்று பாருங்கள். கூடலுார் நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அப்படியானால், மாவட்டத்தில் 12 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் எவ்வளவு பணம் பார்த்திருப்பார்கள் என்பதை நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்” என்றார் ஆவேசமாக.
நுகர் பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் செந்தில்குமார், “விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிச்ச நெல்லுக்கான பலனை தர்றதுல எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஓப்பனா சொல்றேன், நாங்க யார்கிட்டேயும் அஞ்சு பைசாகூட வாங்கலை, கூடலூர்ல, அந்தப் பசங்க புதுசா வேலைக்கு சேர்ந்தவங்க, அவங்க ஏதோ ஆர்வக்கோளாறுல செஞ்சு சிக்கிக்கிட்டாங்க. அதுக்காக அவங்கள சும்மா விடமுடியாது. சட்டப்படி கணக்காளர் கார்த்திகுமார், உதவியாளர் ஜெயசிம்மன், வாட்ச்மேன் நாகேந்திரன் மூணு பேரையும் சஸ்பெண்ட் செய்திருக்கோம். விவசாயிகளுக்கு எடைக்கான பணம் நிச்சயம் கிடைச்சிடும்” என்றார் நிதானமாக.
களையெடுத்தால்தான் விவசாயிகள் தலையெடுக்க முடியும்!
- பொ.அறிவழகன்