பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்திக்கு கோயில் நிர்வாகம் தடைவிதித்த நிலையில், நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கியிருக்கிறது. ஆனாலும், இது அரசுக்கே ஆபத்து என்று கொந்தளிக்கிறார்கள் போகர் சீடரின் வாரிசுகள்!
பழநி மூலவர் முருகன் சிலையை நவபாஷணங்களால் உருவாக்கியது சித்தர் போகர் என்பது நம்பிக்கை. இங்கு வந்து முருகனை வழிபடும் பக்தர்கள், அருகே உள்ள போகரின் ஜீவசமாதிக்கும் சென்று வணங்குவர். போகர் சமாதியில் ஆண்டுதோறும் மே 18-ம் தேதி போகர் ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு விழாவுக்கு தடை விதித்திருக்கிறது கோயில் நிர்வாகம். இதுதான் போகர் சீடரின் வாரிசுகளையும் பக்தர்களையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது.
இதுகுறித்து இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் ராம ரவிக்குமார் நம்மிடம், “கோயில் இணை ஆணையர் நடராஜன், ’போகர் ஜீவசமாதிக்கு முன்பு மரகத லிங்கத்தை வைத்து பூஜை செய்வது ஆகம விதிக்கு எதிரானது’ என்று கடந்த ஆண்டே சில விரும்பத்தகாத வேலைகளை செய்தார். இந்த ஆண்டு போகர் ஜெயந்திக்கே தடைவிதித்திருக்கிறார். போகர் ஜீவசமாதி கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குக் கொண்டுசெல்வதுதான் அவரது எண்ணம். சித்த புருஷரான போகரின் ஜெயந்தி விழாவைத் தடைசெய்வது, அரசுக்கே ஆபத்தாகும் என்பதை மறந்துவிட வேண்டாம்”என்றார் எச்சரிக்கும் தொனியில்.
போகர் சிஷ்யர் புலிப்பாணி கருவறை 13வது வாரிசான பாத்திரசாமி புலிப்பாணியோ, “போகர் இல்லை என்றால், இந்தப் பழனியே கிடையாது. ஞானதண்டாயுதபாணி திருமேனியை உருவாக்கிய போகரின் சீடரான புலிப்பாணியின் வாரிசுகளான நாங்கள்தான் காலம் காலமாக போகர் ஜெயந்தி விழாவை நடத்தி வருகிறோம். இந்த விழாவை நடத்தக் கூடாது என்று நிர்வாகம் சொன்னதால், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தடையை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்றார்.
போகர் ஜெயந்திக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது? என கோயில் ஊழியர்களிடம் கேட்டபோது, “போகர் சன்னதிக்கு தினசரி பூஜை பொருட்களும், நிவேதனத்துக்கான பிரசாதமும் மலைக்கோயிலில் இருந்துதான் வழங்கப்படுகிறது. மின் வசதி, பராமரிப்புப் பணி போன்றவற்றையும் கோயில் நிர்வாகமே செய்கிறது. இந்த நிலையில், போகர் சன்னதியின் பூசகர்கள் திடீரென்று போகர் சன்னதி உரிமை தங்களுக்கு தனிப்பட்டது என உரிமை கோருவதோடு, கோயில் பாரம்பரிய நடைமுறையில் இல்லாத போகர் ஜெயந்தி விழாவையும் நடத்த முற்படுகின்றனர். அதைத்தான் எதிர்க்கிறோம்” என்றனர்.
இதற்கிடையே புலிப்பாணி வாரிசுகளும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட நீதிமன்றம், போகர் ஜெயந்தி விழாவை மே 18ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்திக்கொள்ள புலிப்பாணி தரப்பினருக்கு அனுமதி கொடுத்துள்ளது.
தீர்ப்பு குறித்து கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் கேட்டபோது, “தீர்ப்பு நகல் கிடைத்த பின்னர்தான் கருத்துச் சொல்ல முடியும்”என்றார்.
பக்தர்களை நிம்மதியா சாமி கும்பிட விடுங்கப்பா!
பொ.அறிவழகன்