`அரசியல் சாசனத்தைக் கரைத்துக் குடித்தவர்களே செய்யாததை ஆளுநர் செய்கிறார்' என தி.மு.க.வும் `விதிகளின்படி எதுவும் நடப்பதில்லை' என ஆளுநர் ஆர்.என்.ரவியும் வரிந்துகட்டுவதால், சட்டப் போராட்டத்தில் அறிவாலயம் களமிறங்கியிருப்பதுதான், தமிழகத்தின் ஹாட் சப்ஜெக்ட்.``ஏன் இவ்வளவு பிரச்னைகள்?'' என தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் நிர்வாகிகளிடம் கேட்டோம். ``மத்திய அரசு 2020ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்து வைத்தது. `அதை இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும்' எனவும் அறிவுறுத்தியது. ஆனால், தமிழக அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைமுறைப்படுத்தவில்லை. கூடவே, தமிழகத்துக்கென தனியாக மாநில கல்விக்கொள்கையை வகுப்பதற்கு ஒரு குழுவையும் அமைத்தது.தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல் என்ற முறையில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. அதேசமயம், அனைத்துக் கல்லூரிகளிலும் 75 சதவிகித பாடத்திட்டங்கள் ஒரேமாதிரியாக பின்பற்றும்வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.இந்த பாடத்திட்டம், `அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும்' என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 163 இளநிலை மற்றும் 135 முதுநிலை உட்பட மொத்தம் 298 பாடப்பிரிவுகளுக்கு நடப்புக் கல்வி ஆண்டிலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது.பொது பாடத்திட்டத்தின் நோக்கம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் கூட்டம் நடத்தினார். இதில், பொதுப் பாடத்திட்டத்தை 70 சதவிகித தன்னாட்சிக் கல்லூரிகள் நடைமுறைப்படுத்துவதாகவும் 30 சதவிகித தன்னாட்சிக் கல்லூரிகள் நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. இதையடுத்து, `கல்லூரிகள் தங்கள் விருப்பத்துக்கேற்ப முடிவு செய்துகொள்ளலாம்' என உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.இந்தநிலையில், இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறுக்கிட்டுள்ளார். அதாவது, `தமிழ்நாடு உயர்கல்வி கவுன்சில் வகுத்துள்ள பொதுப்பாடத்திட்டத்தை பின்பற்றத் தேவையில்லை' என பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். `கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் யு.ஜி.சி விதிகளுக்கு எதிராக மாநில அரசின் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது' எனவும் ஆளுநர் அதில் குறிப்பிட்டுள்ளார்.`பொது பாடத்திட்டத்தை தன்னாட்சிக் கல்லூரிகள் தங்களின் விருப்பத்துக்கேற்ப முடிவு செய்துகொள்ளலாம்' என உயர்கல்வித்துறை தெரிவித்த நிலையில், ஆளுநர் இப்படியொரு கடிதத்தை எழுதியிருப்பது தேவையற்ற செயல் என்பதுதான் எங்களின் கருத்து. ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதியுள்ள கடிதத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உயர்கல்வித்துறை செயலாளர் அலுவலகம் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது'' என்றார்..இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தலைவர் பதவி மற்றும் 10 உறுப்பினர்களின் பதவிகள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன. தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன், 10 உறுப்பினர்களின் பெயர்களையும் பரிந்துரை செய்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தது.இந்தப் பரிந்துரையின்மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு ஆளுநர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தார். ஆளுநர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தமிழக அரசு உரிய விளக்கத்தை அனுப்பியுள்ளது. ஆனாலும், அந்த விளக்கத்தை ஏற்க மறுத்ததுடன், `தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா?' எனக் கேள்வியெழுப்பி, `உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை' எனக் குறிப்பிட்டு தமிழக அரசு அனுப்பி கோப்பினை திருப்பி அனுப்பிவிட்டார்.ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு தடை மசோதா, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. இதன் நீட்சியாக, தமிழக அரசின் நியமன பதவி குறித்த பரிந்துரைக் கடிதத்துக்கும் ஒப்புதல் தராமல் திருப்பியனுப்பியுள்ளது, அறிவாலயத்தை கொதிக்க வைத்துள்ளது.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசியபோது, ``அரசின் வழிகாட்டுதலில்தான் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபுவை தேர்வு செய்து முதல்வர் ஸ்டாலின் அனுப்பிவைத்தார். இதுவரையில், நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமிக்கப்பட்டதில்லை. எனவே, சமூகநீதி நோக்கத்தோடு சைலேந்திர பாபுவை நியமிக்க பரிந்துரைத்தார். அதனை ஏற்றுக் கொள்ள ஆளுநருக்கு மனம் வரவில்லை'' எனக் குறிப்பிட்டவர்,``ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசுக்குப் போட்டியாக இன்னொரு அரசை நடத்த முயற்சி செய்கிறார். `தமிழக அரசு வரையறுத்துள்ள பாடநூல்களை பல்கலைக்கழகங்களில் படிக்கக் கூடாது' என்ற உத்தரவையும் பிறப்பித்திருக்கிறார். ஆகவே, திட்டமிட்டு ஒரு குழப்பத்தை உருவாக்குவதற்காகவே இதையெல்லாம் செய்துகொண்டு வருகிறார். இதனை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். காஷ்மீர் முதல் குமரி வரையில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது இந்த ஆளுநர்கள் எந்த நிலைக்கு ஆளாவார்கள் என தெரியும்'' என்றார், காட்டமாக.ஆளுநர் மீதான தி.மு.க அரசின் கோபம் குறித்து, பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``பொதுப் பாடத்திட்டம் என்பது அபாயகரமானது. இது பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரத்தை குலைக்கும் செயல். பொதுப் பாடத்திட்டத்துக்கு தனியார் கல்லூரிகள் மட்டுமல்ல, அரசுக் கல்லூரிகளிலும்கூட எதிர்ப்பு இருக்கிறது. உயர்கல்வித்துறையின் தரத்தைக் குறைக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது'' என்றார்.ஆளுநர் – தமிழக அரசு பஞ்சாயத்து எப்போதுதான் முடிவுக்கு வரும்? - பாபு