துபாய்..! இந்தப் பெயரைச் சொன்னதுமே, ஒரு பெரிய சொர்க்கலோகமே கண்ணுக்குள் விரியும். உலகத்திலேயே அதிகமான ஐந்து நட்சத்திர விடுதிகள், உயரமான கட்டிடங்கள் எல்லாம் இருப்பது இங்கேதான். ஆனால் ஒரு காலத்தில் துபாய் வெறும் மீன்பிடிகிராமம். அதுவும் வெறும் நாற்பத்தைந்து பனை ஓலை குடிசைகள் இருந்த சிறு கிராமம். இன்று பிரமிக்க வைக்கும் அதன் பிரமாண்ட வளர்ச்சிக்குக் காரணம், இளவரசர் முகமத் பின் ரஷீத். இங்கிலாந்தில் படித்தவர். இந்தச் சிறிய நாட்டில் மற்ற வளைகுடா நாடுகளைப் போல் அதிகமாக எண்ணெய் வளம் இல்லை. எனவே இருக்கும் மற்ற வளங்களை வைத்துதான் முன்னேற முடியும் என்று தீர்மானித்தார்கள். பல்வேறு நாட்டினரை தங்கள் நாட்டில் முதலீடு செய்யவும், பல்வேறு நாட்டு மக்களை தங்கள் நாட்டில் தொழில் புரியவும் வரவேற்றார்கள். மற்றவர்களின் வளர்ச்சிக்கு உதவி, அவர்கள் வளர்ச்சியில் தாங்கள் வளர்ந்தார்கள். இன்றும் துபாயில் எல்லா நாட்டு மக்களையும் வணிகத்தில், சேவையில் பார்க்கலாம். உலகத்தில் உள்ள அனைத்து பெரிய நிறுவனங்களும் இங்கும் ஒரு கிளை திறந்து இருப்பார்கள். ஒரு மினி ஐரோப்பாவாக, தவிர்க்க இயலாத வியாபார கேந்திரமாக மாறிவிட்டது, துபாய். அன்றைய தினம் இளவரசருக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவரை சந்திக்கச் சென்றார், இன்னொரு அமைச்சர். ஒரு வகையில் அவர் அரச குடும்பத்துக்கு உறவினர்தான். தகவலை போனிலேயே சொல்லியிருக்கலாம். ஆனால், இப்போதெல்லாம் அது அத்தனை பாதுகாப்பானதாக இருப்பதில்லை. பதிவே செய்ய முடியாது என்று நினைத்து வாட்ஸ் ஆப் போன்றவற்றின் மூலம் கால் செய்தாலும்கூட, ஏதோ ஒரு குறுக்கு வழியில் அவற்றையும் கேட்டுப் பதிவு செய்துவிடுகிறார்கள். அதனால்தான் நேரிலேயே சென்றிருந்தார். அதோடு அந்தத் தகவலின் தீவிரமும் மிக முக்கியமானது. “சவுதியில் இருந்து உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று எனக்கு வந்திருக்கிறது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அவசரமாக அமைச்சரவை மீட்டிங் நடக்கிறது. ஏதோ சில முக்கியமான தீர்மானங்களை எடுக்கப்போவதாகத் தெரிகிறது. அதான் தகவலைச் சொல்லிவிட்டு, அங்குள்ள நம் முதலீடுகளைப்பற்றி நினைவூட்டிச் செல்லலாம் என வந்தேன். இப்போது நாம் ஏதாவது செய்ய வேண்டுமா?” கேட்டார், அமைச்சர். “இல்லை, நாம் பெரிதாக பதற்றப்பட வேண்டாம். அமெரிக்கா எந்தெந்த நாட்டில், எந்தெந்தப் பங்குச் சந்தையில் முதலீடுகளைச் செய்திருக்கிறதோ, அங்கெல்லாம்தான் நம்முடைய முதலீடுகளும் உள்ளன. மேலும் நம்முடைய நிதியை அம்மெரிக்க நிதி நிறுவனங்களே கையாளுகின்றன” சொன்னவர் சற்றே நிறுத்திவிட்டு, முன்னந்தலை சொறிந்து சில நிமிடம் யோசித்தார். பின்னர், “சரி, பங்குச் சந்தையில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்று கவனித்து சொல்லுங்கள். நானும் விசாரிக்கிறேன்”என்றார்..உளவு அமைப்பான ரா நிறுவனத்தில் பல பிரிவுகள் உண்டு. பாகிஸ்தான், சீனா, மற்ற தெற்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, பிற நாடுகள் என்று ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு சீனியர் தலைமை தாங்குவார். இதில் சீனா, அமெரிக்கா என இரண்டு நாடுகளை கவனிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், யாருக்கும் எந்தத் தகவலும் தராமல், டெல்லியில் இருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு, தாம்பரம் விமானப்படை விமானநிலையம் வந்து இறங்கினார்கள். அங்கிருத்து ராணுவ வாகனம் ஒன்றில் ஏறி, கிண்டியில் இருக்கும் அந்த மத்திய அரசு அலுவலகத்திற்கு வந்தார்கள். மூடியிருந்த கதவின் முன் வாகனத்தை நிறுத்திவிட்டு ஹார்ன் அடிக்க, அதிர்ச்சியோடு ஓடி வந்தார் பாதுகாவலர். காரில் இருந்த அவர்களைப் பார்த்தும் மேலும் அதிர்ந்தார். காரணம், அவர்கள் வரப்போவதான தகவல் அவருக்கு வரவேயில்லை. திடுதிப்பென்று வந்திருக்கிறார்கள். அவசரமாக மெயின் கேட்டைத் திறந்தார், பாதுகாவலர். அடுத்த கதவு, வந்தவர்கள் தங்கள் கைரேகையைப் பதிவுசெய்தால்தான் திறக்கும். அதற்காக அவர்கள் கைவைப்பதற்கு முன், உள்ளே இருந்த அதிகாரிகள் சி.சி.டி.வி. கேமரா மூலம் இவர்களைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாக ஓடிவந்தார்கள். சற்றும் தாமதமின்றி, அலுவலக இயக்குநரின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் வாயிலில் வந்து நின்றபோதே தன் அறையில் இருந்த திரையில் பார்த்துவிட்டு, அப்போதே எழுந்து நின்றுவிட்ட இயக்குநர், தன் அறைக்கு அவர்கள் வந்ததுமே அவர்களை கான்ஃபெரன்ஸ் அறைக்கு அழைத்துச் சென்றார். “நீங்கள் அனுப்பிய தகவல் சரிதான். சென்னை அமெரிக்கத் தூதரகத்தில் யாரோ ஒருவன் அடைக்கலம் கேட்டுத் தங்கியிருக்கிறான். அவன் சீனாவைச் சேர்ந்தவன் என்று தெரியவந்திருக்கிறது. அவனால் நம் நாட்டுக்கோ அல்லது அமெரிக்க தூதரகத்தில் இருப்பவர்களுக்கோ எந்தவித பிரச்னையும் வந்துவிடக்கூடாது. அதனால் அங்கே இருப்பவர்களுக்கு எல்லாவிதத்திலும் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.’’ “அதேசமயம், உலகளவில் நமக்குக் கெட்டபெயர் வந்துவிடாமல் கவனமாகச் செயல்படவேண்டும். பிரதமர் வேறு இதில் தனிகவனம் செலுத்துகிறார். எல்லா நேரத்திலும் விழிப்புடன் இருக்கவேண்டும். சிறு அசம்பாவிதம்கூட ஏற்பட்டுவிடக்கூடாது. “ “ முதலில் அமெரிக்க தூதரகத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள எல்லா விடுதிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இதில் உள்ளூர் போலீஸைப் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் தகவல் கசிந்துவிடக்கூடும். எனவே நம் ஆட்களை அங்கே சாதாரண உடையில் தங்கி இருக்கச் சொல்லுங்கள். பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களிலும் கவனம் அவசியம்.’’ “ஏராளமான வெளிநாட்டு ஊடகங்கள் வந்திருப்பதாகவும், அவர்கள் எல்லாவற்றையும் உற்று நோக்கிக்கொண்டிருப்பதாகவும்கூட ஒரு தகவல். எனவே மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.’’.இயக்குநரும் அதிகாரிகளும் இன்னும் பல விஷயங்களைப் பேசி முடித்த பின், அதிகாரி ஒருவர், சென்னையில் உள்ள தமிழக உளவுத்துறையை அவசரமாக அழைத்தார். போனில் தகவல் சொல்லப்பட்ட மறு நொடி, வாகனத்தில் சைரனை சைலன்ட் ஆக்கிவிட்டு, அதிவேகமாகப் புறப்பட்ட தமிழக உளவுத்துறையின் வாகனம், கிண்டி அலுவலகம் சென்று நின்றது. இறங்கி உள்ளே வந்தவர்களை வரவேற்றார்கள், ரா அதிகாரிகள்“ வெல்டன்… நீங்கள் அனுப்பிய செய்தி, சரியான நேரத்தில் அனுப்பப்பட்ட சரியான தகவல். தமிழக உளவுத் துறையின் சிறப்பான செயல்பாட்டை, டெல்லி அரசியல் தலைமையும் பாராட்டுகிறது.” ரா அதிகாரிகள் சொல்ல, ‘என்ன தகவல்? எப்போது யார் கொடுத்தது’என்று புரியாமல் கொஞ்சம் குழம்பினார்கள் தமிழக உளவுத்துறை அதிகாரிகள் “யார் இந்தத் தகவலை உங்களுக்குக் கொடுத்தார்கள், இந்த உளவு விவகாரத்திற்குத் தலைமை தாங்கியவர் யார், அமெரிக்க தூதரகத்தில் நடந்த சம்பவத்தை எப்படி கவனித்தீர்கள்?” அதிகாரிகளின் எந்தக் கேள்விக்கும் விடை இல்லாமலும், என்ன கேட்கிறார்கள் என்றே முழுமையாகப் புரியாமலும் விழித்தவர்கள் சட்டென்று சுதாரித்தார்கள். அமெரிக்க தூதரகத்தில்தான் ஏதோ விவகாரம் என யூகித்து, “இந்த அமெரிக்க தூதரகத்தை மட்டுமல்ல…” என்று தொடங்கி ஒவ்வொரு தூதரகத்திற்கும் எப்படியெல்லாம் பாதுகாப்பு தந்துள்ளோம் என்பதை சொல்லத் தொடங்கினார்கள், தமிழக உளவுத்துறையினர். அவர்களை அப்படியே தடுத்து நிறுத்திய ரா அதிகாரிகள், “இவையெல்லாம் உங்களின் துல்லியத் தகவலிலேயே தெரிகிறது. இந்த விளக்கமெல்லாம் இப்போது தேவையில்லை. இந்த ஆபரேஷனில் செயல்பட்டவர்கள் யார் யார், அவர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள்? போன்ற விஷயங்கள்தான் தேவை. எனவே இதில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து வாருங்கள்!” ரா ஆபீஸர்கள் சொல்ல, அவசர அவசரமாகப் புறப்பட்டவர்கள் வாகனத்தில் இப்போதும் சைரன் சைலண்ட் ஆகவே இருந்தது. ஆனால், அவர்கள் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் தாறுமாறாக எழத்தொடங்கின. ‘ஏதோ ஒரு சம்பவம் சென்னை அமெரிக்கத் தூதரகத்தில் நடந்திருக்கிறது. அது என்ன? அதைவிட முக்கியமான விஷயம் இங்கிருந்தே ரா. வுக்கு அந்தத் தகவல் சென்றிருக்கிறது. அதை அனுப்பியது யார்?’ கேள்விகளுக்கு விடை தெரியாமல், டி.சி.யை போனில் அழைத்தார்கள். தகவல் கேட்டு ஜெர்க் ஆனார், டி.சி. அவருக்கும் எதுவும் தெரியாததால், உடனடியாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் எண்களைச் சுழற்றினார். சம்பவம் நடந்ததாக ரா அதிகாரிகள் சொன்ன தேதியைச் சொல்லி,அன்றைய தினம் பணியில் இருந்தவர்கள் அனைவரையும் உடனே வரச் சொன்னார். ஒருவேளை அவர்கள் பணியில் இருந்தால், மாற்று ஆளை அனுப்பிவிட்டு அவர்களை அனுப்பச் சொன்னார். கட்டளைகள் அனைத்தையும் சொன்னபோது எழாத பதற்றம், “மேட்டர் வெரி சீரியஸ்... ஸோ ஆக்ட் ஃபாஸ்ட்!” என்று கடைசியாக அவர் சொன்ன வார்த்தையில், கவுண்ட் டவுன் முடிந்த நொடியில் தீப்பற்றிய ராக்கெட்டாகப் பரபரப்பைப் பற்றவைத்தது. (பார்வை விரியும்) - நந்தன் மாசிலாமணி