* ஏப்ரல் 14ல் சுமார் அரை டஜன் படங்கள் ரிலீஸான வகையில் அத்தனையும் பரிதாப தோல்வி. கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம், உயிரை உருக்கும் பாரதிராஜாவின் நடிப்பு, தமிழ் சினிமா இதுவரை பார்க்காத படுபயங்கர வில்லன்கள் என்று அருள்நிதியின் ‘திருவின் குரல்’ கொஞ்சம் கவனம் ஈர்த்த நிலையில் தியேட்டர்களில் நோ நத்திங். ஐஸ்வர்யா ராஜேஸின் ‘சொப்பன சுந்தரி’யும் சொதப்புன சுந்தரி ஆகிவிட்ட நிலையில், படம் பார்க்க வந்தவர்களை ருத்ர தாண்டவம் ஆட வைத்திருப்பவர்கள் ’ருத்ரன்’ பட இயக்குநர் கதிரேசனும், நடிகர் ராகவா லாரன்ஸும். முதல் நாள் முதல் காட்சியில் சுமார் 15 பேரே ஆஜராகியிருந்த ஒரு திரையரங்கில், இடைவேளையின்போது வில்லன் சரத், ’நான் பூமி டா’ என்று கர்ஜிக்க, பதிலுக்கு லாரன்ஸ் ,’நான் சாமிடா’ என்று சூலாயுதத்தைத் தூக்க, டென்சனான ரசிகர் ஒருவர், ‘டேய் படத்துல கதை எங்க காமிடா’ என்று பேஜாராகிவிட்டார்.
* கடந்த மூன்று மாதங்களில், ’லியோ’ காஷ்மீர் லொகேஷன்களில் இருமுறை, சென்னை பிரசாத் லேப் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருமுறை என இதுவரை மூன்றுமுறை ’விஜயம்’ செய்திருக்கிறார் அட்லி. இந்த மீட்டிங்குகளில் அட்லியுடன் பொதுவான சமாசாரங்களை மேலோட்டமாக பேசி வழி அனுப்பும் விஜய், அடுத்த பட கமிட்மெண்ட் பற்றி மூச் விடுவதில்லையாம். விஜய் இப்படி நழுவுவதற்கு ஏக், தோ, தீன் என்று மூன்று காரணங்களை அடுக்குகிறார்கள். 1. ஜவான் பற்றிய ப்ரி ரிலீஸ் ரிப்போர்ட்கள் படுசுமார். 2. கோலிவுட் இயக்குனர்களின் இமேஜை கொத்துபரோட்டா போடுமளவுக்கு எல்லாவற்றிலும் கமிஷன் வாங்கியிருக்கிறார் அட்லி. 3. தொடர்ச்சியாக பத்து வரிகளில் சொல்லக்கூடிய அளவுக்கு சொந்தக் கதை ஒன்று கூட இல்லை அட்லியிடம்.
* ’லவ்டுடே’ ஹீரோ கம் டைரக்டரை வைத்து நயன்தாராவின் கணவர் கம் டைரக்டர் விக்னேஷ் சிவன், கமலின் ராஜ்கமலுக்கு ஒரு படம் இயக்க கமிட் ஆகியிருந்தார் அல்லவா? சுமார் மூன்று வார குட்டி குட்டி அமர்வுகளுக்குப் பின்னர் அப்படம் டிராப் பண்ணப்பட்டுவிட்டது. இந்த டிராப்புக் காரணம் விக்னேஷ் சிவனோ, நயன்தாராவோ, கமலோ, பிரதீப்போ அல்ல. ‘லவ் டுடே’ படம் தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம். ‘ எங்களுக்குக் கமிட் ஆகியிருக்கும் பிரதீப்பை விட்டுக் கொடுப்பதாயிருந்தால், ராஜ்கமல் தயாரிப்பில் எங்களையும் பார்ட்னராக சேர்த்துக்கொள்ளவேண்டும்’ என்கிற கோரிக்கையை கமல் நிராகரிக்கவே படம் டமால்.
* அடிக்கடி தன்னைக் கிள்ளிப்பார்த்துக்கொள்ளவேண்டிய அளவுக்கு அத்தனை ஆஃபர்கள் கியூ கட்டி நிற்கின்றன ‘விடுதலை’ சூரிக்கு. இந்த கியூவில், சில முன்வரிசை இயக்குநர்களும், சீர் வரிசையை சிறப்பாக செய்யத்துடிக்கும் பெரும் புரடியூசர்களும் அடக்கம். ஆனால், பழசை மறக்காமல், தனது அடுத்த தயாரிப்பாளராக சூரி தேர்ந்தெடுத்திருப்பது தனது மேனேஜர் குமாரை. ’விடுதலை 2’வுக்குப் பின்னர் ரிலீஸாகவிருக்கும் இப்படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வெற்றிமாறன் கதை, வசனம் எழுத, திரைக்கதை எழுதி இயக்கவிருப்பவர் துரை செந்தில்குமார். படத்தின் பட்ஜெட்? அதிகமில்லை ஜெண்டில்மென்...ஜஸ்ட் 25 கோடி.
சீக்ரெட்
* செக் மோசடி வழக்கில் விழிபிதுங்கி அங்குமிங்கும் அலைகிறாரே அந்த ஐந்தெழுத்து சாமி இயக்குநர்... சில வாரங்களுக்கு முன்பு மூன்றெழுத்து யா நடிகரை வைத்து பெரும் பட்ஜெட்டில் படமெடுக்கப்போவதாகவும் அதில் நடக்கும் பிசினஸை வைத்து கடன் தொகையை செட்டில் செய்வதாகவும் எதிர்பார்ட்டிகளிடம் வாய்தா வாங்கியிருந்தார். ஆனால் அந்த நடிகரோ இந்த நொந்த இயக்குநரின் போனைக்கூட அட்டென்ட் பண்ணுவதில்லை என்ற தகவல் தெரியவரவே மீண்டும் நெருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனந்தம் விளையாடும் ஃபீல்டு.