world press freedom day ; பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியாவுக்கான இடம் என்ன?

பத்திரிகையாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக நம்பப்படும் 31 நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.
world press freedom day ; பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியாவுக்கான இடம் என்ன?

உலக முழுவதும் மே 3 ஆம் தேதியான இன்று பத்திரிகை சுதந்திர தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் பாலமாக பத்திரிகை மற்றும் ஊடகங்கள் திகழ்கின்றன. உள்ளூர் முதல் உலகம் வரை நடக்கும் நிகழ்வுகளை உண்மை தவறாமல் மக்களுக்கு கொண்டு செல்வதே பத்திரிகைகளின் தலையாய நோக்கம். பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட்டால் தான் எதிர்ப்புகளின்றி உள்ளதை உள்ளபடி வெளிஉலகுக்கு காண்பிக்க முடியும். பத்திரிக்கை சுதந்திரத்தை நிலைநாட்டும் வகையில் தான் ’உலக பத்திரிகை சுதந்திர தினம்’ இன்று கொண்டாடப்படுகிறது.

வரலாறு முக்கியம் அமைச்சரே...

கொலம்பிய பத்திரிகையாளர்களில் ஒருவரான கிலெர்மோ கானோ இசாசா என்பவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17-ல் தனது அலுவலகம் முன்பாக படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவரது கொலையை விசாரித்த நீதிபதிகளும் கொல்லப்பட்டனர். அவரின் கொலையின் பின்னரே ’பத்திரிகை சுதந்திரம்’ தொடர்பாக உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்டது. இதையடுத்து ஆப்பிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே "பத்திரிகை சுதந்திர சாசனம்" முன்வைக்கப்பட்டது.

இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 வது அமர்வில் முன் மொழியப்பட்டு பத்திரிகை மற்றும் ஊடகச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை உருவானது.

பின் 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் மே 3 ஆம் தேதி பத்திரிகை சுதந்திர நாளாக முன்னெடுக்கப்படும் என ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சரி... உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் நம்ம இந்தியா எப்படி?

உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது. 2016ல் 133வது இடத்தில் இருந்த இந்தியாவின் தரவரிசை, 2022ல், 150வது இடத்திற்கு சரிந்தது. இந்த ஆண்டு மேலும் சரிந்து 161 வது இடத்திற்கு சென்றுள்ளது.

பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட 180 நாடுகளில் இந்தியா 161 வது இடத்திற்கு சரிந்துள்ளது. உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘நிருபர்களுக்கு எல்லை இல்லை (ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்) ’என்ற செய்தியாளர் அமைப்பு உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டின் 21வது பதிப்பை இன்று வெளியிட்டது. அதில் 2022 ஆம் ஆண்டு 150 வது இடத்தில் இருந்த இந்தியா 11 வது தரவரிசைக்கு மோசமாக சரிந்து உள்ளது. பாகிஸ்தான் 150 வது இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது. தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் அரசாங்கம் சுதந்திர ஊடகவியலாளர்களை சற்றும் ஆதரிப்பதில்லை, இருந்தும் ஆப்கானிஸ்தான் 152 வது இடத்தில் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளது. அண்டை நாடுகளான பூட்டான் 90 வது இடத்திலும், இலங்கை 135 வது தரவரிசையிலும் இடம்பிடித்துள்ளன.

பத்திரிகையாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக நம்பப்படும் 31 நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. இந்தியாவில் ஏன் பத்திரிகை சுதந்திரம் கீழ்நோக்கி போனது என்பது பற்றி ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் கூறும் போது:- ”பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை, அரசியல் சார்புடைய ஊடகங்கள் மற்றும் ஊடக உரிமையின் குவிப்பு இவை அனைத்தும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரம் நெருக்கடியில் உள்ளது என்பதை காட்டுகிறது” என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com