ரஷ்யா: அதிபர் புதினுக்கு எதிராக புரட்சி? - வாக்னர் குழு எச்சரிக்கை

‘ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம். எங்களது ஆட்டத்தை தொடங்கிவிட்டோம். இனி எங்களது பாணியில் வழியில் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம்’ என்று வாக்னர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாக்னர் குழு, புதின்
வாக்னர் குழு, புதின்

ரஷ்யாவில் இயங்கி வரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாக ‘வாக்னர்’ குழு இயங்கி வருகிறது. ரஷ்யா மட்டும் இல்லாமல் லிபியா, மாலி, சிரியா என பல பகுதிகளில் ‘வாக்னர்’ குழு உள்நாட்டு போரில் ஒப்பந்ததாரர்களாக இயங்கி வருகிறது.

ரஷ்யாவில் தனியார் ராணுவ ஒப்பந்தக்காரர்கள் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ள போதிலும் மறைமுகமாக அதிபர் புதினின் ஆதரவோடு ராணுவத்தின் விருப்பத்தின்பேரில் தேவைப்படும்போது இந்த குழு இயக்கிக்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதினால் ஆதரவளிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ‘வாக்னர்’ குழுவால் தற்போது அவருக்கே நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்த நெருக்கடி ‘வாக்னர்’ குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோசின் வெளியிட்ட ஆடியோ மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யெவ்ஜெனி ப்ரிகோசின் ரஷ்ய ராணுவ தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அந்த ஆடியோவில், ‘நாங்கள் மொத்தம் 25000 பேர் உள்ளோம். நாட்டின் ராணுவத் தலைமையை வீழ்த்துவோம்.

நாங்கள் முன்னேறிச் சென்றுகொண்டு இருக்கிறோம். வழியில் எந்த தடை வந்தாலும் எங்களது பாணியில் துவம்சம் செய்வோம். ஏற்கனவே ரஷ்ய ராணுவத்தை தாக்கியுள்ளோம். எங்கள் படைகள் ரஷ்யாவின் தெற்கே உள்ள ரோஸ்டோவ் பகுதிக்குள் நுழைந்துவிட்டது’ என்று கூறியுள்ளார்.

ப்ரிகோசினை சமீபகாலமாக ரஷ்ய ராணுவம் கெடுபிடியால் ஒடுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில் தன்னுடைய படையை ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாக்கியதாக ப்ரிகோசின் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில்தான் ‘வாக்னர்’ குழு முன்னெடுத்து இருக்கும் இந்த போராட்டத்தில் ரஷ்ய மக்கள் கைகோர்த்து ராணுவ தலைமையை வீழ்த்த வேண்டும் என்று ப்ரிகோசின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓராண்டை கடந்து உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கப்பட்டு வருகிற நிலையில், ‘வாக்னர்’ குழுவின் எச்சரிக்கை ரஷ்ய அதிபருக்கு புதிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

இதற்கிடையே ரஷ்ய விமான படை கமாண்டர் செர்கெய் சுரோவிகின் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘பிர்கோசின் உங்கள் முயற்சியை நிறுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.

உள்நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட வேண்டும் என்று எதிரிகள் காத்திருக்கின்றனர். அதுபோல் எதுவும் நடக்காமல் இருக்க அதிபரின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படுங்கள்’ என கூறியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com