அமெரிக்கா: பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கு - முன்னாள் அதிபர் டிரம்ப்-க்கு 5 மில்லியன் டாலர் அபராதம்

பெர்ஜ்டோர்ஃப் குட்மேன் என்னும் ஆடம்பரமான கடையினுள் ஆடை மாற்றும் அறையில், டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என கரோல் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஜீன் கரோல், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்
ஜீன் கரோல், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் -க்கு 5 மில்லியன் டாலர் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெண் பத்திரிக்கையாளரான ஜீன் கரோல் (79 வயது), டொனால்டு டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதில் 1996 ஆம் ஆண்டு மன்ஹட்டனில் ஐந்தாவது அவென்யூவில் உள்ள பெர்ஜ்டோர்ஃப் குட்மேன் என்னும் ஆடம்பரமான கடையினுள் ஆடை மாற்றும் அறையில், டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என கரோல் குற்றஞ்சாட்டியிருந்தார். 2019 ஆம் ஆண்டு இந்த விவகாரத்தை தாம் வெளிப்படுத்தியபோது டிரம்ப தன்னை அவமதித்த்தாகவும் கரோல் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த 9 பேர் அடங்கிய நீதிபதிகள் குழு டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கரோல் கூறிய குற்றச்சாட்டை ஏற்க மறுத்துவிட்டது. இந்த வழக்கு விசாரணையில் டிரம்ப் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் சாட்சியங்களும் ஆஜராகவில்லை. கடந்த அக்டோபரில், டிரம்ப் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தும் கரோல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும், அவர் ஒரு மனநோயாளி என்றும் கூறிய வீடியோ மட்டும் நீதிபதிகளிடம் போட்டு காட்டப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பிறகு அவரது மற்ற புகார்களை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

மேலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஜீன் கரோலுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தரப்பிலிருந்து 5 மில்லியன் டாலர் இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளில் டொனால்டு டிரம்ப் மீது பல பாலியல் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், முதன்முறையாக தற்போது தான் அவருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com