அமெரிக்காவின் கெண்டக்கி மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களில் சட்டவிரோதமாகக் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியதற்கு ₹1 கோடி 73 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மெக்டொனால்டு உணவகங்களில் வேலைக்கு அமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்களை பணிகளை செய்ய வைத்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. புகாரின் அடிப்படையில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உணவகங்களில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், 300 குழந்தைகளை சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பின்னர், அமெரிக்காவில் உள்ள 3 மெக்டொனால்டு உணவகங்களுக்கு 2.12 லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதித்தவர்களில் லூயிஸ்வில்லே உணவக உரிமையாளரும் ஒருவர் ஆவார்.
இந்த விவகாரம் தொடர்பாகத் தொழிலாளர் நலத்துறையினர் கூறுகையில்,"லூயிஸ்வில்லே உணவகத்தில் 10 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளை வேலைக்கு வைத்தது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில், லூயிஸ்வில்லே பாயர் புட் எல்எல்சி நிறுவனம் 10க்கும் மேற்பட்ட மெக்டொனால்டு உணவகங்களை நடத்தி வருகிறது. அந்த உணவகத்தில் 16 வயதிற்குட்பட்ட 24 பேரை பணியில் வைத்திருந்ததும், அவர்களை அதிக நேரம் பணிகளை செய்யச் சொன்னதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், அவர்களில் 2 பேர் 10 வயதிற்குக் குறைவானவர்கள். அதிகாலை 2 மணி வரை 10 வயதிற்குக் கீழ் உள்ளவர்களை வேலை செய்ய வைத்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கான ஊதியத்தையும் வழங்கவில்லை என்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வயதுடைய சிறுவர்களை ஆர்டர் செய்த உணவுகளைத் தயார் செய்ய வைத்ததும், கடைகளை சுத்தம் செய்ய வைத்ததும் தெரியவந்துள்ளது' எனக் கூறியுள்ளனர்.
இதனிடையே, உணவக உரிமையாளர் சீன் பாயர் கூறும் போது, தொழிலாளர் நலத்துறை கூறிய 10 வயதிற்கும் கீழ் உள்ள 2 சிறுவர்களும் உணவகத்தின் மேலாளரைப் பார்க்க வந்த அவரது பிள்ளைகள் என்று கூறியுள்ளனர்.