சூடானில் தொடர்ந்து 3-வது வாரமாக நடந்து வரும் உள்நாட்டு போரால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது.
ஆப்பிரிக்கா நாடுகளுள் ஒன்றான சூடான் நாட்டில் ராணுவத்துடன் துணை ராணுவப் படையை இணைக்கும் திட்டத்திற்கு துணை ராணுவம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டின் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
இதனால் பலர் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விமான நிலையம் மற்றும் முக்கிய நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகத் துணை ராணுவம் அறிவித்துள்ளது. துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை ராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே சுமூக முடிவு இதுவரையில் ஏற்படவில்லை.
இந்தத் தொடர் தாக்குதலால் முக்கிய நகரங்களில் இருந்து சூடானியர்கள் வெளியேறிச் செல்கின்றனர்.மேலும், இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளை விட்டு அத்தியாவசியப் பொருட்களுக்கு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், வெளியே செல்லும் சூடானியர்களின் செல்போன் உள்ளிட்டவற்றை ராணுவம் மற்றும் துணை ராணுவ குழுக்கள் பறித்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த உள்நாட்டு போரால் சூடானில் திரும்பிய திசையெங்கும் குண்டுமழை பொழிந்து வருவதால் அந்நாட்டு மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதில் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர் உள்பட பலர் மரமணடைந்துள்ளனர்.
எனவே இந்தப் போரை நிறுத்துமாறு ஐ.நா சபை மற்றும் உலக நாடுகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக இரு தரப்பும் தற்காலிகமாகப் போர் நிறுத்ததில் ஈடுபட்டுள்ளன.
இதனைப் பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டுக் குடிமக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்திய அரசின் சார்பில் ’ஆப்ரேஷன் காவேரி’ திட்டத்தின் கீழ் 229 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன. இதன் காரணமாகப் பல ஆயிரக்கணக்கான சூடானிய மக்களும் வெளியேறி வருகின்றனர்.
சூடானில் தொடர்ந்து 3-வது வாரமாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் பலியானோர் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் தலைநகர் கார்தூம் மற்றும் மேற்கு டார்பூர் தவிரப் பெரும்பாலான இடங்களில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அமைதியான சூழல் திரும்பி வருவதால் சுகாதாரப் பணிகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.