செர்பியாவில் 7ம் வகுப்பு மாணவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
14 வயது சிறுவன் வகுப்பறையில் தனது ஆசிரியரைச் சுட்டுள்ளான். பின்னர் மற்ற மாணவர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எட்டு மாணவர்கள் உட்பட ஒரு பாதுகாவலர் கொல்லப்பட்டதாக செர்பியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விளாடிஸ்லாவ் ரிப்னிகர் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் ஒருவரின் தந்தையான மிலன் மிலோசெவிக் கூறுகையில், ’’துப்பாக்கியால் சுடப்பட்ட வகுப்பில் எனது மகளும் இருந்தாள். ஆனால், அவள் தப்பி விட்டாள். அந்தச் சிறுவன் முதலில் ஆசிரியரை சுட்டான். பின்னர் கடுங்கோபத்துடன் கண்ணை மூடிக்கொண்டு சுடத் தொடங்கினான். பாதுகாவலர் மேசைக்கு அடியில் கிடப்பதைப் பார்த்தேன். சட்டையில் இரத்தம் தோய்ந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்தேன். துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவன் அமைதியானவர், நல்ல மாணவர் என்று கூறுகிறார்கள். குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியே ஓடி வருவதை நான் பார்த்தேன். பெற்றோர்கள் வந்தனர். அவர்கள் பீதியிலிருந்தனர்’’என அவர் தெரிவித்தார்.
தலைக்கவசம் மற்றும் குண்டு துளைக்காத உடைகள் அணிந்த அதிகாரிகள் பள்ளியைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். எட்டு குழந்தைகள் மற்றும் ஒரு பாதுகாவலர் கொல்லப்பட்ட நிலையில் ஆசிரியருடன் 6 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய ஏழாம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மிகக் கடுமையான துப்பாக்கிச் சூடு சட்டங்களைக் கொண்ட செர்பியாவில் பொது வெளியில் மக்கள் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபடுவது அரிது. ஆனால் 1990களில் நடந்த போர்கள் மற்றும் அமைதியின்மையைத் தொடர்ந்து மேற்கு பால்கன் பகுதியில் நூறாயிரக்கணக்கானோர் சட்டவிரோத ஆயுதங்களுடன் சுற்றுவதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோதத் துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கு அல்லது பதிவு செய்வதற்கு உரிமையாளர்களுக்கு செர்பிய அதிகாரிகள் பலருக்கும் பொது மன்னிப்புகளை வழங்கியுள்ளனர்.