‘நிலத்தடி நீரை உறிஞ்சியதால் 80 செ.மீ கிழக்கே சாய்ந்தது பூமி’ - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

நிலத்தடி நீரை உறிஞ்சியதால் 80 செ.மீ பூமி கிழக்கே சாய்ந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பூமி
பூமி

நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுத்ததால் பூமி 80 செமீ கிழக்கு நோக்கி சாய்ந்துவிட்டதாக கூறியுள்ள விஞ்ஞானிகள் இதற்கு இந்தியா, அமெரிக்காவே காரணம் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

பூமியில் இருந்து மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 1993 மற்றும் 2010 ஆண்டுகளுக்கு இடையில் பூமியானது கிட்டத்தட்ட 80 செமீ கிழக்கே சாய்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக பூமியின் காலநிலையில் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படலாம் என, தெரிவித்துள்ளனர். ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்னும் இதழில் வெளியிடப்பட்டு இருக்கும் ஆராய்ச்சித் தகவலில் 1993ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை மட்டும் 2150 ஜிகா டன் நிலத்தடி நீர் மனிதர்களால் உறிஞ்சப்பட்டு இருக்கிறது.

மேலும், நிலத்தடி நீர் குறைதல் மற்றும் கடல் மட்ட உயர்வு காரணமாக பூமியின் துருவம் ஆண்டுக்கு 4.36 சென்டி மீட்டர் வேகத்தில் 64.16 டிகிரி கிழக்கு நோக்கி நகர்ந்தது. இந்த காலக்கட்டத்தில், மனிதர்கள் எடுத்த நீரின் அளவு 0.24 அங்குலம் அல்லது 25.4 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடல் மட்ட உயர்வுக்கு சமம் என கூறப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் குறைவது பூமியின் சுழற்சியை மாற்றுவதாக ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ஆனால் தற்போது வரை இந்த சுழற்சி மாற்றங்களுக்கு நிலத்தடி நீரின் குறிப்பிட்ட பங்களிப்பு ஆராயப்படவில்லை.

அதேப்போல் கடந்த 1993 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கு வடஅமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியாவில் மத்திய அட்சரேகைகளில் அதிகளவு நீர் மறுபகிர்வு செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதனால் பூமியின் சுழற்சி பெரிதும் மாறி உள்ளதாகவும் இதன் மூலம் பூமியின் பல்வேறு பகுதியில் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் இதற்கு நிலத்தடி நீர்மட்டம் குறைவு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது? என்பது குறித்த முழுமையான தரவு இல்லை என ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்க பல்வேறு நாடுகள் பல திட்டங்களை தீட்டுவதன் மூலம் பூமியின் சுழற்சி மாற்றத்தை மாற்ற முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பூமியின் சுழற்சி துருவம் மாறி வருவதால் விரைவில் பருவநிலையில் பல்வேறு மாற்றங்களை உலக நாடுகள் சந்திக்க வேண்டி வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com