உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போரை தொடங்கியது. ஓராண்டை கடந்த போதிலும் இன்னமும் போர் முடிவுக்கு வரவில்லை. ஒருபுறம் அமைதி பேச்சுவார்த்தைக்கு முயற்சி நடந்து கொண்டிருக்க மறுபுறம் போர் நீடிக்கிறது.
முதலில் உக்ரைன் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கி, முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய படைகள், பின்னர் முன்னேறி மக்கள் வசிக்கும் பகுதிகளை தாக்கி கைப்பற்ற தொடங்கியது.
அதே சமயம் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷ்ய ராணுவத்துக்கு உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி 7 என்ற உச்சி மாநாடு கடந்த மே 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடக்கிறது.
இதில் உறுப்பினர் நாடாக இல்லாவிட்டாலும் ஜப்பான் அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி ஹிரோஷிமா சென்றுள்ளார். அதேப்போல உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் அரசு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று ஹிரோஷிமா சென்றடைந்துள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது ‘உலகளவில் உக்ரைன் ரஷ்யா - போர் மிக முக்கியமான ஒரு விஷயம்.
இதை வெறும் பொருளாதாரம், அரசியல் சார்ந்த கண்ணோட்டத்தில் மட்டும் நான் பார்க்கவில்லை. இது மனித இனத்துக்கான பிரச்னை.
போருக்கான தீர்வை ஏற்படுத்த இந்தியாவும், நானும் என்ன செய்ய முடியுமோ? அதை தயங்காமல் செய்வோம்’ என பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடங்கிய பிறகு 2 தலைவர்களும் நேரில் சந்தித்து பேசுவது இதுவே முதன்முறை ஆகும்.
ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பலமுறை தொலைபேசியின் மூலம் பேசிய நிலையில் ‘இது போருக்கான சகாப்தம் அல்ல’ என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யாவை லேசாக தாக்கும் வண்ணம் பிரதமர் மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.
- கோபிகா ஸ்ரீ