ட்விட்டரில் செய்திக்கட்டுரைகளை படிக்க பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் வசதியை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார்.
குறிப்பாக ட்விட்டர் நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களை நீக்கினார். இதனைத்தொடர்ந்து ட்விட்டரின் பிரதான லோகோவான குருவியை நீக்கி நாயின் புகைப்படத்தை வைத்தார். இதற்குப் பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மீண்டும் குருவியை ட்விட்டரின் லோகோவாக மாற்றினார்.
இதைத்தொடர்ந்து, மாத சந்தா செலுத்தாத புளு டிக் வைத்திருக்கும் பிரபலங்களின் புளு டிக்கை நீக்கினார். இதுபோன்று பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.அந்த வரிசையில் அடுத்த மாதம் முதல் புதிய திட்டத்தைக் கொண்டு வர எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
அடுத்த மாதம் முதல் செய்தி நிறுவனங்கள் ட்விட்டரில் தங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்கப் பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,’ அடுத்த மாதம் முதல் ட்விட்டர் தளம் செய்தி நிறுவனங்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் பயனர்களிடம் ஒரே கிளிக்கில் கட்டனம் வசூலிக்க அனுமதிக்கும். மேலும் மாதாந்திர சந்தாவிற்குப் பதிவு செய்யாத பயனர்கள் அவ்வப்போது கட்டுரைகளைப் படிக்க விரும்பும்போது அந்த ஒரு கட்டுரைக்கு அதிக விலையைச் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் செய்தி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இரு தரப்பும் பயன் அளிப்பதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.