நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வருகிறது. அங்கிருந்தபடி பல்வேறு தகவல்களை சேகரித்து அனுப்பி வரும் நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஆறு இருந்ததன் ஆதாரங்களை கண்டறிந்துள்ளது.
இதன் மூலம் செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் தண்ணீர் நிறைந்ததாகவும், வெப்பமானதாகவும் மற்றும் அடர்த்தியான வளி மண்டலத்தை கொண்டிருந்ததாகவும் மற்றும் மனிதர்கள் வாழும் சூழலை கொண்டிருப்பதாகவும் எடுக்கப்பட்ட படங்கள் சான்றுகளாக அமைந்துள்ளன.
மேலும் செவ்வாய் கிரகத்தில் ஆழமான பழமையான ஆறு இருந்ததற்கான ஆதாரங்களையும், பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ ஏதுவாக இருக்குமா? என, ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையில், நீர் படுகை இருந்ததற்கான ஆதாரங்களை பெர்சிவரன்ஸ் விண்கலம் புகைப்படங்களை எடுத்து அனுப்பி இருப்பது, ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது.
புதிய படங்களில் காணப்படும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு விஞ்ஞானிகள் இதுவரை கண்டிராத ஆழமான மற்றும் வேகமாக பாயுக்கூடிய நதியாக இது இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் பல லட்சம் ஆண்டுகளாக நீரோட்டம் இருந்ததால் மொசைக் கல் போன்ற பாறைகள் தோன்றியிருக்கக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வக முதுகலை ஆராய்ச்சியாளர் லிபி இவ்ஸ் கூறுகையில், ‘இந்த பாறைகளை பார்க்கும்போது செவ்வாய் கிரகத்தில் வேகமாக செல்லக்கூடிய நதி இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. இது, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்’ என கூறினார்.
- கோபிகா ஸ்ரீ