பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து `டோக் பிசின்’ மொழியில் திருக்குறளை வெளியிட்டனர்.
ஜப்பான், பப்வா நியூ கினி, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக, ஜப்பானுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு ஜி7 மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர், குவாட் மாநாட்டிலும் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து, பப்புவா நியூ கினியில் பேசப்படும் டோக் பிசின் (tok pisin) மொழியில், திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த புதிய பதிப்பை நரேந்திர மோடி வெளியிட்டார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டரில், ``தமிழ்க் கலாசாரத்தின்மீதான ஆழமான பிணைப்பையும் மதிப்பையும் மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார் பிரதமர்.
தமிழ்ப் புத்தாண்டு போன்ற தமிழ்ப் பண்டிகைகளில் கலந்துகொண்டு, தமிழ் மொழியைக் கற்கும் முயற்சியில் ஈடுபடுவது, தமிழ்க் கலாசாரத்தின் மீதான அவரின் உண்மையான மரியாதைக்கு மற்றொரு சான்று. நல்லாட்சி, நல்லிணக்கம், வளர்ச்சி போன்ற கொள்கைகளை வலியுறுத்த பிரதமர், பலமுறை திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.
அதேபோல, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள், நமது திருக்குறளின் புதிய மொழிபெயர்ப்பை, பப்புவா நியூ கினியா நாட்டு மொழியான டோக் பிசின் மொழியில் இன்று வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழ் பாரம்பரியத்தின் மீதும் கொண்ட அன்பிற்காகவும், திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்காகவும், மாண்புமிகு பிரதமர் மோடிக்கு, தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என தெரிவித்துள்ளார்.