சட்டப்பூர்வமாக பாகிஸ்தானுக்குச் சென்ற இரண்டு குழந்தைகளின் இந்தியத் தாயான அஞ்சு, இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்னர் தனது பாகிஸ்தானிய ஃபேஸ்புக் நண்பரை செவ்வாயன்று திருமணம் செய்து கொண்டார்.
34 வயதான அஞ்சு, தனது 29 வயதான பாகிஸ்தான் நண்பரான நஸ்ருல்லாவின் வீட்டில் தங்கியிருந்தார். அவர்கள் 2019 இல் பேஸ்புக்கில் நண்பர்களானார்கள். இந்நிலையில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியின் உள்ளூர் நீதிமன்றத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
"நஸ்ருல்லா மற்றும் அஞ்சுவின் திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றது, அவர் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு முறையான நிக்காஹ் நடத்தப்பட்டது" என்று அப்பர் டிர் மாவட்டத்தில் உள்ள மொஹரார் நகர காவல் நிலையத்தின் காவல்துறை அதிகாரி முஹம்மது தெரிவித்தார்.
நஸ்ருல்லாவின் குடும்பத்தினர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் இருவரும் டிர் பாலாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
மலாக்கண்ட் பிரிவு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் நசீர் மெஹ்மூத் சத்தி, அஞ்சு மற்றும் நஸ்ருல்லாவின் நிக்காவை உறுதிப்படுத்தினார். இந்தியப் பெண் அஞ்சு இஸ்லாத்திற்கு மாறிய பின்னர் தனது பெயரை பாத்திமா என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
திங்கட்கிழமை முன்னதாக, நஸ்ருல்லா மற்றும் அஞ்சு இருவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானில் பல இடங்களைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர். டிர் அப்பர் மாவட்டத்தை சித்ரால் மாவட்டத்துடன் இணைக்கும் லாவாரி சுரங்கப்பாதையை அவர்கள் பார்வையிட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அழகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்ற படங்களில், அஞ்சுவும், நஸ்ருல்லாவும் ஒரு பசுமையான தோட்டத்தில் அமர்ந்து கைகளைப் பிடித்தபடி காணப்பட்டனர். உத்தரபிரதேசத்தில் உள்ள கைலோர் கிராமத்தில் பிறந்து, ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் வசித்து வந்த அஞ்சு, பாகிஸ்தானில் "இங்கே பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன்" என்று ஒரு சிறிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
"நான் இங்கு சட்டப்பூர்வமாகவும் திட்டமிடலுடனும் வந்திருக்கும் அனைவருக்கும் இந்த செய்தியை வழங்க விரும்புகிறேன், ஏனென்றால் நான் திடீரென்று இங்கு வந்து இரண்டு நாட்கள் ஆகவில்லை. நான் இங்கு பாதுகாப்பாக இருக்கிறேன்," என்று அவர் வீடியோவில் கூறியுள்ளார். எனது உறவினர்கள் மற்றும் குழந்தைகளை துன்புறுத்த வேண்டாம் என்று அனைத்து ஊடகவியலாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்’’என்று அவர் கூறினார். அஞ்சு ராஜஸ்தானில் உள்ள அரவிந்த் என்பவரை தனது 15 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், ஆறு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
அஞ்சு இந்தியாவில் இருந்து வாகா-அட்டாரி எல்லை வழியாக சட்டப்பூர்வமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வழிகாட்டுதல்படி, உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆவணத்தின்படி, அஞ்சுவுக்கு 30 நாள் விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது, இது அப்பர் டிருக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
ஷெரிங்கலில் உள்ள பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டதாரியான நஸ்ருல்லா, ஐந்து சகோதரர்களில் இளையவர். இவர்களது நட்பில் காதல் கோணம் இல்லை என்றும், ஆகஸ்ட் 20 ஆம் தேதி அஞ்சு இந்தியா திரும்புவார் என்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்து இருந்தனர். இருப்பினும் நேற்ரு திருமணம் செய்து கொண்டனர்.
"காதலுக்காக இந்தியாவில் இருந்து அஞ்சு பாகிஸ்தானுக்கு வந்து இங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்" என்று நஸ்ருல்லாவின் குடும்பத்தினர் அகமகிழ்ந்துள்ளனர். அஞ்சுவின் கணவர் அரவிந்த், ராஜஸ்தான் மாநிலம் பிவாடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’அஞ்சு ஜெய்ப்பூர் செல்வதாக கூறி வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் பின்னர் அவர் பாகிஸ்தானில் இருப்பது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அவர் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது’’என்றார்.