உலகின் காஸ்ட்லியான கோஹினூர் வைரம் இந்தியாவுக்கு வர போகிறதா? - பின்னணி என்ன?

105 கேரட் கொண்ட இந்த விலைமதிப்பற்ற வைரம் இந்திய ஆட்சியாளர்களிடம் இருந்து, அதாவது மகாராஜா ரஞ்சித் சிங்கின் கருவூலத்திலிருந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு சென்றது.
கோஹினூர் வைரம்
கோஹினூர் வைரம்

உலகின் மிக விலை உயர்ந்த வைரமான கோஹினூர் வைரம் உட்பட, பிரிட்டிஷ் அருங்காட்சியகம் மற்றும் அரச குடும்பத்தின் வசம் உள்ள இந்தியாவிற்கு சொந்தமான அனைத்து பொருட்களையும் திரும்பப் பெறும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட உள்ளது.

கோஹினூர் வைரமானது உலகின் மிக விலை உயர்ந்த வைரமாகும். தற்போது பிரிட்டனிடம் இருக்கும் இந்த வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது. 105 கேரட் கொண்ட இந்த விலைமதிப்பற்ற வைரம் இந்திய ஆட்சியாளர்களிடம் இருந்து, அதாவது மகாராஜா ரஞ்சித் சிங்கின் கருவூலத்திலிருந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு சென்றது. 1849 முதல் இந்த வைரமானது பிரிட்டனின் விக்டோரியா மகாராணி கைவசம் சென்றது. அதுமுதல் கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் மகாராணிகளுக்கு சூடப்பட்டு வந்தது. கடந்தாண்டு பிரிட்டனின் எலிசபெத் மகாராணி உயிரிழந்த நிலையில், சார்லஸ் மன்னரானார். அவரது முடிசூட்டு விழா இம்மாத தொடக்கத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. சார்லஸின் மனைவியான கமீலா மகாராணியாக முடிசூட்டப்பட்டார்.

இந்நிலையில் கோஹினூர் வைரம் குறித்த சர்ச்சை மீண்டும் பேசு பொருளானது. இந்த வைரம் மட்டுமில்லாமல், இந்தியாவுக்கு சொந்தமான பல்வேறு கலைபொருட்களும் காலனி ஆதிக்கத்தின் போது இங்கிலாந்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்தியா மற்றும் மியான்மரின் சில பகுதிகள் இணைக்கப்பட்ட போது, அங்கே இருந்து கலைப் பொருட்களைப் பிரிட்டன் வீரர்கள் கொள்ளையடித்து விற்ற சம்பவங்களும் நடந்ததுள்ளன. இந்திய மன்னரிடம் இருந்து பெறப்பட்ட கோஹினூர் வைரம் உட்பட அனைத்தையும் அந்தந்த நாடுகளிடம் தர வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோஹினூர் வைரம் உள்ளிட்ட இந்தியாவிற்கு சொந்தமான பொருட்களை மீட்கும் பணிகளில் இந்தியா ஈடுபட உள்ளது. இதுகுறித்து யூனியன் கலாச்சார செயலாளர் கோவிந்த் மோகன் கூறும் போது, இங்கிலாந்தில் இருக்கும் இந்தியாவின் கலைப்பொருட்களைத் திரும்பப் பெறுவது முக்கியமான ஒன்றாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்திற்குத் தனிப்பட்ட முறையில் முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவித்தார். முதலில் சிறிய அருங்காட்சியகங்கள், தனி கலைப் பொருட்களைச் சேகரிப்போர், தானாக முன்வந்து இந்தியக் கலைப்பொருட்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளவர்களிடம் இருந்து பொருட்களைப் பெற இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பெரிய நிறுவனங்கள், ராயல் சேகரிப்புகளிடம் இருந்து திரும்பப் பெறும் முயற்சியை எடுக்க உள்ளனர்.

இந்த கலைபொருள்களின் பட்டியலில் மகராஜா ரஞ்சித் சிங் சிம்மாசனம், திப்பு சுல்தான் வைத்திருந்த அரிய வகை கற்கள் பதிக்கப்பட்ட புலி தலை, அமராவதி மார்பிள்கள், ஷாஜகான் ஒயின் கோப்பைகள், தைமூர் ரூபிக்கள், ஹரிகரா கடவுள் சிலை, ஏராளமான இந்து கடவுளின் சிலைகள் போன்றவை உள்ளன.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com