உலக வங்கியின் தலைவராகும் இந்திய வம்சாவளி அஜய் பங்கா - பின்னணி என்ன?

கடந்த 2016-ஆம் ஆண்டு அஜய் பங்காவிற்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்தது என்பது குறிப்பிடதக்கது.
அஜய் பால்சிங் பங்கா
அஜய் பால்சிங் பங்கா

உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பால்சிங் பங்கா, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உலக வங்கி குழுமத்தின் தலைவராக 2019ல் டேவிட் மால்பாஸ்(66) பதவியேற்ற நிலையில், அவருடைய பதவி காலம் 2024ம் ஆண்டு நிறைவடைகிறது. இருப்பினும் முன்கூட்டியே பதவி விலகுவதாக டேவிட் மால்பாஸ் அறிவித்தார். இந்நிலையில் உலக வங்கியின் புதிய தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோனை நடத்தினார்.

அதில், சர்வதேச நிதி நிறுவனமான 'மாஸ்டர் கார்டு' நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.வும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பால்சிங் பங்கா-வை உலக வங்கியின் அடுத்த தலைவர் பதவிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு விருப்ப மனுவை அஜய் பங்கா தாக்கல் செய்தார். விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி தேதி கடந்த மார்ச் 29 முடிவடைந்து விட்ட நிலையில், இதுவரை தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய் பங்கா மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

யார் இந்த அஜய் பங்கா?

உலக வங்கியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள 63 வயதான அஜய் பங்கா மகராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர். சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு ரிது பங்கா என்ற மனைவியும், அதிதி பங்கா, ஜோஜோ பங்கா ஆகிய மகள்களும் உள்ளனர். இவர் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அகமதாபாத்தி்ல உள்ள இந்திய மேலாண் நிறுவனம் (ஐஐஎம்) ஆகியவற்றில் பொருளாதார படிப்புகளை முடித்தார். இவரது தந்தை ஹர்பஜன் சிங் பங்கா, ராணுவ வீரராக பணிபுரிந்தவர் ஆவார்.

2007ல் அமெரிக்க குடியுரிமையை பெற்ற அஜய் பங்கா, கடந்த பிப்ரவரி 2015ல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால், வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான அதிபரின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பணியாற்ற நியமிக்கப்பட்டார். மாஸ்டர்கார்டு நிறுவனத்தில் தலைவராக பதவி வகித்தார்.

இந்தியாவில் முதலீடு செய்யும் 300- க்கும் மேற்பட்ட பெரிய சர்வதேச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க-இந்திய பிசினஸ் கவுன்சிலின் (யுஎஸ்ஐபிசி) முன்னாள் தலைவராகவும் இருந்திருக்கிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு அஜய் பங்காவிற்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்தது என்பது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com