கொலை வழக்கில் சிக்கிய முதலையை போலீஸார் என்கவுண்டர் செய்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் அரங்கேறி இருக்கிறது.
குற்றச்செயலில் ஈடுபடும் மனிதர்களை போலீஸார் என்கவுண்டர் செய்யும் நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் மனிதனை விழுங்கிய இரண்டு முதலைகள் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லேண்டை சேர்ந்த65 வயதான மீனவர் கெவின் டார்மோடி அங்குள்ள தேசிய பூங்காவில் உள்ள கென்னடி ஆற்றங்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அலறல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. ஆனால் அவர் மீன் பிடித்துக் கொண்டிருந்த தூண்டிலும் சில உடைமைகளும் அங்கே கிடந்துள்ளன. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் கொண்ட போலீஸார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அந்த இடத்திற்குக் குறிப்பிட்ட நேரத்தில் வெளியிலிருந்து யாரும் வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. குளத்தில் படகு மூலம் யாராவது வந்து கொலை செய்திருக்கலாம் எனக் கருதி அதனையும் ஆய்வு செய்துள்ளனர்.
ஆனால், அதற்கான முகாந்திரமும் இல்லை என முடிவுக்கு வந்தனர். பின்னர் மீனவரைத் தேடும் பணியைத் தொடர்ந்த போலீஸார் ஆற்றில் தொலை தூரத்தில் சிக்கிய 4.1 மீ மற்றும் 2.8 மீ நீளம் கொண்ட இரண்டு முதலைகளை என்கவுண்டர் செய்தனர். அப்போது ஒரு முதலையின் உடலுக்குள் ஒரு மனிதனின் சடலம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அது காணாமல் போன மீனவரின் சடலமாக இருக்கலாம் என முடிவுக்கு வந்த போலீஸார் தேடுதல் மற்றும் மீட்புப்பணியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இருப்பினும் பிரேதப் பரிசோதனை அறிக்கைத் தயாரான பிறகே அது காணாமல் போன மீனவரா? என்பது தெரிய வரும் என போலீஸார் கூறினர்.