ஜப்பானில் நடைபெற்று வரும் ’ஜி-7’மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கு உதாரணமாக மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜாக்கெட்டை அணிந்துள்ளார்.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளின் அமைப்பான 'ஜி-7' அமைப்பின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இம்மாநாட்டில் நேற்று கலந்துக் கொண்ட இந்திய பிரதமர் மோடி, 'பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு ஒன்றாக பணியாற்றுதல்' என்ற அமர்வில கலந்துகொண்டு, உரையாற்றினார். இந்நிலையில் இன்று ஹிரோஷிமாவில் உள்ள அமைதி நினைவு அருங்காட்சியகத்திற்கு சென்ற மோடி, இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கு ஏதுவாக, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜாக்கெட்டை அணிந்துள்ளார்.
ஹிரோஷிமாவில் உள்ள அமைதி நினைவு அருங்காட்சியகத்திற்கு பிரதமர் தனது வருகையின் போது அணிந்திருந்த பழுப்பு நிற "சத்ரி" ஜாக்கெட் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஜாக்கெட்டை அணிந்துக் கொண்டு, ஹிரோஷிமாவில் உள்ள அமைதி நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்கா ஆகிய இடங்களுக்குச் சென்ற பிரதமர் மோடி, இரண்டாம் உலகப் போரின் முடிவில் 1945 ஆம் ஆண்டு ஜப்பானிய நகரத்தின் மீது அமெரிக்க அணுகுண்டு தாக்குதலில் இறந்தவர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவு அருங்காட்சியகத்தில் அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அவரோடு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா போன்ற உலக அரசியல் தலைவர்கள் உடனிருந்தனர்.