அமெரிக்காவை சேர்ந்தவர் இளம்பெண். திருமணமான இவர், சமீபத்தில் கர்ப்பமானார். இவரது வயிற்றில் கரு உருவாகி 34 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
குழந்தையின் வளர்ச்சி எப்படி உள்ளது? என்பதை அறிய டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது குழந்தையின் மூளையில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளம் சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தது தெரியவந்தது.
இந்த குறைபாடு ரத்த ஓட்டத்தை மெதுவாக்கும் என்பதோடு ரத்தம் நுண் குழாய்களுடன் இணைவதற்கு பதிலாக நேரடியாக நரம்புகளுடன் இணையும். இதனால் நரம்புகளுக்குள் அதிக ரத்த அழுத்தத்தை உருவாக்கும்.
அவ்வாறு நரம்புகளில் கூடுதல் ரத்த அழுத்தம் ஏற்படும்போது குழந்தைக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு, இதயம் செயல் இழப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயமும் உள்ளதாக டாக்டர்கள் கருதினர்.
இதையடுத்து அரிய வகை குறைபாட்டை ஆபரேஷன் மூலம் சரி செய்ய டேரன் ஆர்பாக் தலைமையிலான டாக்டர் குழுவினர் முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து குழந்தையை கருவிலேயே காப்பாற்ற டாக்டர்கள் அதிரடியாக களத்தில் குதித்தனர்.
அதன்படி மிகவும் சவாலான இந்த மூளை அறுவை சிகிச்சையை டாக்டர் குழுவினர் ஊசி மூலம் வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளனர். இதை அறிந்த குழந்தையின் பெற்றோர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கருவில் இருக்கும் குழந்தையின் ரத்த நாளம் தற்போது சரி செய்யப்பட்டதால் ‘இனி உயிருக்கு ஆபத்து இல்லை’ என்று டாக்டர்கள் தெரிவித்தனர். உலகில் முதல்முறையாக இந்த ஆபரேஷனை அமெரிக்க டாக்டர்கள் செய்து புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.