குறைந்தது 2 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகள் மற்றும் உள் நுழையாமல் இருக்கும் கணக்குகளை இந்த ஆண்டு இறுதியில் நீக்கப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது.
தற்போது, உலகில் உள்ள அனைவரும் கூகுள் கணக்குகளைப் பயன்படுத்தி வருகின்றனர். பில்லியன் கணக்குகளைக் கொண்ட கூகுள், 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பயன்படுத்தாத கணக்குகளை நீக்கம் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதாவது, இமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் மற்றும் பிற கூகுள் கணக்குகளில் உள்ள புகைப்படங்கள் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த கணக்குகளை 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நீக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஹேக் உள்ளிட்டவற்றில் இருந்து பாதுகாக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை நீக்கும் கொள்கை நேற்று முதல் அமலுக்கு வந்தாலும், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நீக்கம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, Google Workspace-களான Gmail, Docs, Drive, Meet, Calendar, YouTube மற்றும் Google Photos ஆகியவற்றில் உள்ள செயல் இல்லாத கணக்குகள் நீக்கப்படும்.
இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரூத் கிரிசெலி வெளியிட்ட அறிக்கையில்," 2 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத தனிப்பட்ட கூகுள் கணக்குகள் தான் நீக்கப்படும். பள்ளி, வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் கூகுள் கணக்குகள் நீக்கப்படாது. இதனால் ஹேக், ஸ்பேம் உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல், பெரும்பாலானோர் Two Step Verification மூலம் தங்களது கணக்குகளைப் பாதுகாத்துக் கொள்வதில்லை. இதனால் , அவை எளிதாக ஹேக் செய்யப்படுகின்றன. இந்த காரணத்தினால் தான் கூகுள் கணக்குகளை நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
கூகுள் கணக்குகளை நீக்கும் முன், நீக்கப்படும் மெயில் ஐ.டிக்கு பல அறிவிப்புகள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.