கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றானது உலக நாடுகளையே புரட்டி போட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள், பொருளாதார தாக்கங்கள் ஏராளம் ஏராளம். லாக்டவுன் - ஆல் வீட்டில் பலரும் முடக்கப்பட்டிருந்தனர்.
அரசின் தொடர் முயற்சிகள், சுகாதார வழிநடத்துதல்கள், தடுப்பூசி, பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றால் கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது.
இன்றளவும் கொரொனாவால் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் நடந்துதான் வருகின்றன என்றாலும், அதன் எண்ணிக்கையும் வீரியமும் குறைந்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கோவிட் தொற்றின் அவசர நிலை முடிவுக்கு வந்ததாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொடர்பான அவசர கால கூட்டம், 15-வது முறையாக கூடியது. இதில் கொரோனா தொற்றின் வீரியம் குறைந்து இருப்பதாகவும், உலக நாடுகளில் இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகவும் பேசப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, கோவிட் தொற்றின் அவசர கால நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இருப்பினும் கொரோனா முற்றிலும் முடிந்து விட்டதாக கருத வேண்டாம் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் வரை கொரோனா தொற்றினால் 3 நிமிடங்களுக்கு ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.