இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ’கோ பர்ஸ்ட்’ விமான நிறுவனம் கடும் நிதி நெருக்கடியால் தங்கள் சேவைகளை நிறுத்தி வருகிறது. அதோடு சுயாதீனமாக திவால் செய்துக்கொள்ள தேசிய கம்பெனி தீர்ப்பாய சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளது. இதனால் விமான கட்டணம் உயரும் அபாயம் உள்ளதாக துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வாடியா குழுமம் சார்பில் 2005ஆம் ஆண்டு 'Go Air' என்ற பெயரில் தொடங்கப்பட்ட விமான நிறுவனம், இந்தியாவில் 27 இடங்களுக்கும், வெளிநாடுகளில் 8 இடங்களுக்கும் தனது விமான சேவைகளை அளித்து வருகிறது. 2017-ல் 8.4 சதவீத சந்தை பங்குடன் இந்தியாவின் 5வது பெரிய விமான சேவை நிறுவனமாக வளர்ந்தது. ஆனால் இவர்களின் 'ஏர் பஸ்' விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின்கள் நாளடைவில் பழுதடைய தொடங்கியது. இதனால் 2019 முதல் ’கோ பர்ஸ்ட்’ விமான நிறுவனம் பின்னடைவை சந்திக்க நேரிட்டது.
விமான எஞ்சின் கோளாறு காரணமாக 2019 டிசம்பரில் 7 சதவீத விமானங்கள் பறக்கமுடியாமல் நிறுத்தப்பட்டன. 2020-ல் பறக்கமுடியாமல் நிறுத்தப்பட்ட விமானங்கள் 31 சதவீதமாகவும், 2021-ல் 50 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாகவும் ’கோ பர்ஸ்ட்’ நிறுவனமே கூறியுள்ளது. விமானங்கள் பறக்க முடியாமல் நிறுத்தப்பட்டதன் காரணமாக 2021-2022ல் நிகர நஷ்டம் ₹1,808 கோடியாக அதிகரித்தது. நிகர மதிப்பும் பெருமளவில் சரிந்தது. இதனால் அந்நிறுவனத்தின் கடன் சுமை ₹6,521 கோடியாக அதிகரித்தது.
வாடியா குழுமம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டுமே ₹3,200 கோடி நிதியை ’கோ பர்ஸ்ட்’விமான நிறுவனத்தில் புதிய முதலீடாக செலுத்தியுள்ளது. நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் ₹6,500 கோடியை இதுவரை முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் ’கோ பர்ஸ்ட்’ விமான நிறுவனம் திவால் சட்டத்தின் கீழ் சுயாதீனமாக திவால் செய்து கொள்ள விண்ணபித்துள்ளது.
’கோ பர்ஸ்ட்’ நிறுவனம் திவாலானால் நாடுமுழுவதும் உள்ள விமானங்களின் எண்ணிக்கை குறையும். இதனால் விமான கட்டணம் உயரும் அபாயம் ஏற்படலாம் என துறை சார்ந்த நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.