கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாகவும், இதில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'குறை பிரசவ குழந்தைகள்' என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்டுள்ள ஒரு ஆய்வில் கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு உலக சுகாதார அமைப்பு, ஐ.நா.குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (பிஎம்என்சிஎச்) ஆகிய அமைப்புகளால் இணைந்து நடத்தப்பட்டது.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.9% குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக்கு முன்பே பிறத்தல்) பிறந்துள்ளன. இது 2010-ம் ஆண்டில் 9.8% ஆக இருந்தது. இந்நிலையில் 2020-ல் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 1.34 கோடி ஆகும். இதில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் இறந்துவிட்டன. இதில் கடந்த 2020-ல் வங்கதேசத்தில் குறை பிரசவம் அதிகபட்ச அளவாக (16.2%) பதிவாகி உள்ளது. மலாவி (14.5%), பாகிஸ்தான் (14.4%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கிரீஸ் (11.6%), அமெரிக்கா (10%) ஆகிய அதிக தனிநபர் வருவாய் கொண்ட நாடுகளிலும் குறை பிரசவம் அதிக அளவில் பதிவாகி உள்ளது. 2020-ம் ஆண்டில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் 45% பேர் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா மற்றும் எத்தியோப்பியா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
2010 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் போர், பருவநிலை மாற்றம், கொரோனா வைரஸ் மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய 4 முக்கிய காரணிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் கருவிலிருக்கும் குழந்தைகளை அதிக அளவில் பாதித்துள்ளன.
உதாரணமாக, காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 60 லட்சம் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறப்பது தெரியவந்துள்ளது. குறை பிரசவத்தில் பிறந்த 10-ல் 1 குழந்தை மனித உரிமை நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
பருவநிலை மாற்றம் கர்ப்பிணிகள் மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவது அதிகரித்து வருகிறது. எனவே, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட இடர்பாடுகளை தவிர்க்க கூடுதல் முதலீடு உலக நாடுகளுக்கு தேவைப்படுகிறது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம்” என அதில் கூறப்பட்டுள்ளது.