ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி அருகே அபு முரேகாவில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்ட இந்து கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் கட்டுமான பணிகளை கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
உலகம் முழுவதும் சுமார் 1,200 இந்து கோயில்களை நிறுவி பராமரித்து வரும் போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா என்ற அமைப்புதான் அபுதாபியில் இந்து கோயிலை கட்டி உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வழிபாட்டுக்காக இந்து கோயில் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் பிரதமர் மோடி இந்த கோரிக்கையை ஐக்கிய அரபு அமீரக அரசிடம் முன்வைத்து இருந்தார்.
இதனை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்றதோடு கோயிலுக்கான இடத்தை அபுதாபி பட்டத்து இளவரசர் நன்கொடையாக அளித்து ஒட்டுமொத்த இந்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த கோயிலானது அபுதாபியில் இருந்து 30 நிமிடம் மற்றும் துபாயில் இருந்து 45 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த கோயில் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகப்பெரிய இந்து மத வழிபாட்டுத் தலமாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. மத்தியக் கிழக்கின் ‘முதல் பாரம்பரிய இந்துக் கற்கோயில்’ என்று இந்துக்கள் பெருமையாக பாராட்டும் சூழலில் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை அங்குள்ள முஸ்லீம்கள் நடனமாடி வரவேற்ற வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘ராமர் கோவில் பற்றி பேசினால் வளைகுடா நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவதை பற்றி 10 ஆண்டுகளுக்கு முன், அப்போது இருந்த அரசு கவலைப்பட்டது. இன்று வளைகுடா நாடுகளில் கோவில்களை கட்டி அந்த மக்கள் நடனம் ஆடுவதை பார்க்கிறோம்’ என பதிவிட்டுள்ளார்.