இந்த ஆண்டின் இறுதிக்குள் தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என தகவல்
கொரிய பெண்கள் 5 பேருக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க பிரமுகரை குற்றவாளி என ஆஸ்திரேலியா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாலேஷ் தன்கர் (43). இவர் பா.ஜ.க-வின் வெளிநாடு வாழ் நண்பர்கள் அணியின் முன்னாள் தலைவராகச் செயல்பட்டு வந்துள்ளார். இவர் அங்கு 5 கொரிய பெண்களுக்குப் போதை மருந்தை கொடுத்ததாகவும், அதில் மயங்கியவர்களைப் பாலேஷ் தன்கர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், 2018 ஆம் ஆண்டுப் பெண்களுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து தனது செல்போனில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும், இவர் மீது ஏராளமான பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
கொரிய மொழிப்பெயர்ப்பாளர்களுக்கான போலியான வேலை வாய்ப்பு விளம்பரத்துடன் பாலேஷ் தனது லீலைகளை அரங்கேற்றியுள்ளார். இதுதொடர்பான வீடியோவில் தன்னை நம்பி வரும் பெண்களுக்குப் போதை மருந்துகள் கொடுத்துள்ளார். அவர்கள் மயக்கம் அடைந்தவுடன் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் கடிகாரம், செல்போன் ஆகியவற்றின் பின்புறம் மறைத்து வைத்திருந்த கேமராக்களை எடுத்து அதில் உள்ள வீடியோக்களை தனது கம்யூட்டரில் பதிவு செய்துள்ளார். இதை அனைத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும் பெண்களின் பெயர்கள் வாரிய வீடியோக்களைப் பதிவு செய்து வைத்துள்ளார்.
அந்த வீடியோக்களில் ஒரு வீடியோ 95 நிமிடங்களுக்கு ஓடக்கூடியதாக உள்ளது. அதில் மயங்கி கிடக்கும் பல பெண்களுடன் பாலேஷ் தன்கர் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே கொரிய பெண்களுடன் உறவு கொள்ளும் 47 வீடியோக்களை அவரது கம்யூட்டரில் இருந்து அந்நாட்டு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட பாலேஷ் தன்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முன்பு பாலேஷ் தன்கர் கண்கலங்கினார். மேலும் நான் பெண்களிடம் நிறையப் பொய் கூறியுள்ளேன். எனது திருமண வாழ்க்கை இனிதானதாக அமையவில்லை. கசப்பாக இருந்ததால் நான் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தேன் என்றும் அந்தப் பெண்ணுடன் ஏற்பட்ட சிறிய பிரச்னை காரணமாக அவரும் பிரிந்து சென்றுவிட்டார் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாகத் தனிமையில் வாடியதால் பெண்களிடம் பொய் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய நீதிபதிகள், பல்வேறு பொய்களைக் கூறி 5 கொரிய பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது எனத் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கு மீண்டும் மே மாதம் விசாரணைக்கு வரும் எனவும் பாலேஷ் தன்கர் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து விவரித்துள்ள ஆஸ்திரேலிய பத்திரிகைகள் ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமான பாலியல் குற்றவாளிகளில் ஒருவர் பாலேஷ் தன்கர் எனக் குறிப்பிட்டுள்ளன. இந்தியர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் போதை மருந்து கொடுத்து 5 கொரிய பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.