இந்நிலையில் உலகம் இதுவரைப் பார்த்திராத பேரழிவை எதிர்கொண்டிருப்பதாக சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுமார் 56,000 பேர் பலியானதோடு பல லட்சம் மக்கள் நிர்கதியாகினர். இதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு இடங்களிலும் நிலநடுக்கங்கள் அவ்வபோது ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உலகம் இதுவரைப் பார்த்திராத பேரழிவை எதிர்கொண்டிருப்பதாக சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். அமெரிக்காவின் ஒரேகான் பகுதியிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பசுபிக் கடலின் அடியில் காற்று குமிழ்கள் வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இதுகுறித்து விரிவாக ஆய்வு நடத்திய வாஷிங்க்டன் ஆராய்ச்சியாளர்கள் கடலுக்கடியில் உள்ள பரப்பில் ஓட்டை ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த விசித்திர ஓட்டை வழியே சுத்தமான அதே சமயம் 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கதகதப்பான திரவம் ஒன்று வெளியேறி வருவது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் ரிக்டர் அளவுகோலில் 9-க்கும் அதிகமான மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கின்றனர்.
இதுபற்றி மாநில திட்டக்குழு உறுப்பினரும் சுற்றுசூழல் ஆர்வலருமான சுல்தான் அகமது இஸ்மாயில் கூறும்போது, ’இதுமாதிரியான ஓட்டைகள் பல இடங்களில் உள்ளன. ஆனால் இங்குள்ள ஓட்டையிலிருந்து தண்ணீர் வெளிவருவதால், இங்கு பெரிய அளவில் நிலநடுக்கம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இது அமெரிக்காவின் மேற்கு பக்கம் இருந்தாலும், அதி பயங்கரமான நிலநடுக்கம் வந்தால் இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்தார். ஒருவேளை பசுபிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் பெருமளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது உலக நாடுகளை பாதிப்பதுடன், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே அழிந்துபோகும் அபாயம் ஏற்படும் என கூறப்படுகிறது.