சூடான்: போர் நிறுத்தத்தால் மக்கள் வெளியேறுகிறார்களா? -இந்தியர்களின் நிலை என்ன?

சூடான்: போர் நிறுத்தத்தால் மக்கள் வெளியேறுகிறார்களா? -இந்தியர்களின் நிலை என்ன?
சூடான்: போர் நிறுத்தத்தால் மக்கள் வெளியேறுகிறார்களா? -இந்தியர்களின் நிலை என்ன?

இந்தியர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம் என தகவல்

சூடான் நாட்டில் 72 மணி நேர உள்நாட்டுச் சண்டை நிறுத்தத்தால் கர்த்தூம் தலைநகரை விட்டுப் பொதுமக்கள் வெளியேறுவதாக சொல்வதில் உண்மை இல்லை என சூடான் வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்கா நாடுகளுள் ஒன்றான சூடான் நாட்டில் ராணுவத்துடன் துணை ராணுவப் படையை இணைக்கும் திட்டத்திற்குத் துணை ராணுவம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டின் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

இதில் 200-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலர் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விமான நிலையம் மற்றும் முக்கிய நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகத் துணை ராணுவம் அறிவித்துள்ளது. துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை ராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே சுமூக முடிவு இதுவரையில் ஏற்படவில்லை.

இந்த தொடர் தாக்குதலால் முக்கிய நகரங்களில் இருந்து சூடானியர்கள் வெளியேறிச் செல்கின்றனர். இதனால் இந்தியர்கள் எங்குச் செல்வது எனத் தெரியாமல் வீடுகளில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்திய தூதரகத்தின் உதவியை நாடி எதிர்ப்பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்திய தூதரகமும் இந்தியர்கள் பாதுகாப்பாக வீடுகளில் இருக்கும்படியும், மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருட்களான உணவு, தண்ணீர் உள்ளிட்டவை இல்லாமல் இருக்கும் இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் கர்தூம் நகர் உள்ளிட்ட இடங்களில் சிக்கி தவித்து வருவதாக இந்தியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளை விட்டு அத்தியாவசியப் பொருட்களுக்கு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், வெளியே செல்லும் சூடானியர்களின் செல்போன் உள்ளிட்டவற்றை ராணுவம் மற்றும் துணை ராணுவ குழுக்கள் பறித்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்திய தூதரக அதிகாரிகள் வாட்ஸ் ஆப்பில் குழு அமைத்து அதில் ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அங்குச் சிக்கி உள்ள இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், உள்நாட்டுச் சண்டை நடந்து வரும் சூடானில் தற்காலிகமாக 72 மணி நேரத்திற்குச் சண்டையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராணுவத்திற்கு எதிராகப் போராடி வரும் துணை ராணுவ படையினர் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதையொட்டி 3 நாட்களுக்கு உள்நாட்டுச் சண்டையை நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த உள்நாட்டுச் சண்டை நிறுத்த காலத்தில் முழுமையான சண்டை நிறுத்தத்திற்குத் துணை ராணுவப் படை உறுதி அளித்துள்ள நிலையில், ராணுவப் படையினர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் சண்டை நிறுத்த காலத்திலும் மீண்டும் குழுக்களின் மோதல் இருக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். 

இந்த நிலையில், தற்போது ரம்ஜான் கொண்டாடப்படுவதால் இந்தத் தற்காலிக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்றும் மின்சாரம், பால், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமப்படுவதாக அங்குள்ள தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் நாட்டின் தலைநகர் கர்த்தூம்மை விட்டுப் சூடானியர்கள் வெளியேறி வருவதாகவும், பலர் தங்கள் உடைமைகள் உள்ளிட்டவற்றை விட்டுச் செல்வதற்கும், நகரத்தை விட்டு வெளியேறும் போது ஏதாவது பிரச்சனை எழுமோ என்ற அச்சத்தின் காரணமாக வீடுகளில் முடங்கி உள்ளளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ஆதாரங்கள் அடிப்படையில் தூதரகக்குழு அங்குள்ள தமிழர்களைத் தொடர்பு கொள்வதாகவும், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சூடான் வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர். சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இரு குழுக்களும் சண்டையிட்டு வருவது சூடானியர்கள் மற்றும் வெளிநாட்டினரிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com